வீடுகளில் அமைதி வளர்ப்போம்.

நடுங்கச் செய்யும் பல வன்முறைச் செயல்களுக்கான வித்து, குடும்ப வன்முறையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து வீடுகளில் அமைதி வளர செய்வன செய்வோம்.

மே 21, தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப் படுகிறது. ‘இதுக்கும் நமக்கும் என்ன தொடர்பு’ என்று எண்ணி ஒதுங்காமல், குடும்ப வன்முறைகளில் தான் இதற்கான வித்து உள்ளது என்பதை புரிந்து கொண்டு, குடும்பங்களில் அமைதி வளர செய்வன செய்வோம்.

வீட்டில் தன்னுடைய அப்பா தன்னுடைய அம்மாவை அடிப்பதை பார்த்து வளரும் பிள்ளைகள், ‘இது தான் ஒரு வீரமான ஆணின் லட்சணம்’ என்று தெரிந்தோ தெரியாமலோ மனதில் பதிந்து கொள்கின்றனர்.

இது இப்படியே தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து, ‘குடும்பத்தில் நிகழும் வன்முறை, வன்முறை என்ற கணக்கிலேயே வராது’ என்கிற அளவுக்கு அத்தனை பேருக்கும் மரத்துப் போய் விடுகிறது.

இப்படியாக, வன்முறை என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக வாழ்வில் பின்னிப் பிணைந்து விடுகிறது. ஆனால் சட்டம் என்ன சொல்கிறது?

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்

குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கும், ‘குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்‘, முக்கியமான திருத்தங்களுடன் நடைமுறைக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிறது.

இந்த சட்டத்தின்படி, வீடுகளில் பெண்களை உடலாலோ, மனதாலோ, நோகும் படியான வார்த்தைகளாலோ துன்புறுத்துவது தண்டனைக்கு உரிய செய்கைகள் ஆகும்.

உடல், உயிர், உடலுறுப்பு அல்லது மன நலத்திற்கு கேடு செய்கிற எந்த ஒரு செயலுக்கும் இந்தச் சட்டத்தின்படி தண்டனை உண்டு. வரதட்சணைக் கொடுமை, பொருளிழப்பு, பெண்களை மிரட்டி அவமதித்தல், மனஉளைச்சல் ஏற்படுத்துதல், உள் நோக்கத்துடன் அவமதிப்புச் செய்தல் ஆகியவைகளும் இச்சட்டத்தின் கீழ் குற்றங்களே.

இந்த சட்டத்தின்படி, இதை செய்வது சம்பந்தப்பட்ட பெண்ணுடைய கணவனாக இருந்தாலும் சரி, கணவனின் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, துன்புறுத்தல் அளிக்கும் உறவுமுறை ஆட்களின் மீது பாதிக்கப்பட்ட பெண் சட்டபூர்வமான புகார் அளித்து, அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தவறு இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும். பெண்கள் போலீசிடம் புகார் அளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

Never miss real stories from India's women.

Register Now

இது ஒரு பக்கம். குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் அவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதையும் அறிந்து கொள்வோமா?

குழந்தைகளை பாதிக்கும் குடும்ப வன்முறை

மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளை அதிரும்படி பேசினால் கூட சட்டப்படி குற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா?

நம் கதைக்கு வருவோம். இன்றளவும், பெரும்பாலும் குடும்ப நிர்வாகம் என்பது பெண்களின் பொறுப்பு என்று வரையறுத்துள்ள உள்ள சமுதாயத்தில் தான் நாம் உள்ளோம்.

குடும்பம் நிமிர்ந்தாலும், சரிந்தாலும், ‘குடும்பத் தலைவர்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆண்களுள் பலர், ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ என்று அனைத்தையும் நம் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்வார்கள்.

நல்லவிதமாக பிள்ளைகளை வளர்த்தால் பெண்களை பெருமைப் படுத்துகிறார்களோ இல்லையோ, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், ‘அம்மா சரி இல்லை’ என்று கூறி விடுவார்கள்.

இதனாலேயே, ‘பிள்ளைகளை அடித்து வளர்க்க வேண்டும், ரொம்பவும் கண்டிப்பாக வேண்டும், ஏதேனும் தவறு நிகழ்ந்தால், நாம் தானே அதற்கு பொறுப்பு’ என்று பல தாய்மார்கள், ‘குழந்தைளை அடிப்பதும் ஒருவித குடும்ப வன்முறை‘ என்பது தெரியாமலேயே அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இப்படியே வளரும் பிள்ளைகள், ‘அடிப்பது ஒன்றும் பெரிய தவறான விஷயம் இல்லை’ என்று நினைத்து, அப்படியே வளர்ந்து விடுகின்றனர். ‘அடிக்கிற கை தான் அணைக்கும்’ போன்ற பழமொழிகள் வேறு இதற்கு துணை நிற்கின்றன.

இப்படி வளரும் ஆண் குழந்தை, வளர்ந்து பெரியவனாகி, அவனுக்கு மனைவி என்று ஒருத்தி வாய்த்து, அவள் அவனது மனம் போல் நடந்து கொள்ளாத பட்சத்தில், ‘இவள் அடித்தால் தான் வழிக்கு வருவாள்’ என்று எண்ணி, அவளை அடித்து ‘சரி’ செய்கிறான். இப்படியாக குடும்ப வன்முறை தலைமுறை தலைமுறையாகத் தாவுகிறது.

நல்லதோ கெட்டதோ, நம்மைப் பார்த்தே பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்

இந்தியாவில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என்று வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றளவில் வீடுகளில் குழந்தைகளை பெற்றோரோ, ‘கார்டியன்’ எனப்படும் பாதுகாவலரோ, உறவினரோ அடித்தாலோ திட்டினாலோ சொல்லும்படி பெரிய தண்டனை இல்லை.

தண்டனை இல்லை என்பதால் நம் பிள்ளைகளை நாம் அடிக்கலாம் திட்டலாம் என்ற பொருள் இல்லை. பயம் மற்றும் அதிகாரத்தால் குழந்தைகளை நெறிப்படுத்துவதை விட அன்பால் நெறிப்படுத்தி இயல்பாய் வளர்க்க வேண்டும் என்று முன்மொழிகிறார், பிரபல குடும்ப வாழ்வியல் மற்றும் பிள்ளை வளர்ப்பு நிபுணர், கோதா ஹரிப்ரியா.

‘அன்பாய் சொன்னால், நான் சொல்வதை என் பிள்ளை கேட்பதே இல்லை’ என்று புலம்பும் தாய்மார்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் பிள்ளைகள் நாம் சொல்வதை கேட்டு அல்ல, செய்வதை பார்த்தே வாழ்க்கையை, பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்பது உளவியல் பூர்வமான உண்மை.

‘உலகமே பெற்றோர் தான்’ என்று இருக்கும் இளவயதில், பிள்ளைகள் நாம் என்ன செய்கிறோமோ அதைப் பார்த்தே அவர்களும் செய்து பழகுவார்கள். பழக்கமே வழக்கமாகி, அவர்களுடைய குணாதிசயமாக பரிணாம வளர்ச்சி அடையும்.

ஆக, நாம் வீட்டிற்குள் பயமுறுத்தி, மிரட்டி, அதிகாரம் செய்து காரியம் நம் பிள்ளைகள் நம்மிடம் போனாலும், வெளியில் சென்று அதே அதிகாரத்தை தங்கள் நட்பு வட்டாரத்திடமும், சக மனிதர்களிடமும், வாழ்க்கைத்துணையிடமும், இறுதியாக அவர்களது பிள்ளைகளிடமும் காட்டுவர்.

“எங்க அப்பா அம்மா எல்லாம் எங்களை அடிச்சு தான் வளர்த்தாங்க” என்று செய்யும் தவறுக்கு நியாயமும் கூறுவர்.

இந்த அடிதடி, மிரட்டல், குடும்பத்தை தாண்டி சமுதாயத்திலும் கசிந்தால், அதுவே சமூக வன்முறை. அது பிள்ளைகளை மனதளவில் மோசமாக பாதித்து அவர்களை வன்முறையாளார்களாக மாற்றக் கூடும் என்பதும் அறிவியல் பூர்வமான உண்மை.

வீடுகளில் இருந்தே அனைத்தும் துவங்குகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை அன்பால் வழிநடத்தினாலே சமூகம் சீரடையும். வீட்டிலுள்ள ஆண்கள் அவரவர் வீட்டுப் பெண்களை மதித்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். இவ்விதமாக ஒருவரை ஒருவர் மதித்து, வீடுகள் தொடங்கியே அமைதி வளர்ப்போம். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

பட ஆதாரம்: ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்‘ திரைப்படம்

வாசகர்களே!

விமன்ஸ் வெப் ஒரு திறந்த வலைதளமாகும். இது பலவிதமான பார்வைகளை/கருத்துக்களை வெளியிடுகிறது. தனிப்பட்ட கட்டுறைகள் எல்லா நேரங்களிலும் தளத்தின் பார்வைகளையும் கருத்துகளையும் குறிக்காது.  ஏதேனும் கட்டுறையில் உங்களுக்கு தொடர்புடைய அல்லது மாறுபட்ட கருத்து இருந்தால் எங்கள் வலைதளத்தில் பதிவுசெய்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள்!

கருத்துக்கள்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 53,540 Views
All Categories