பெண்களிடம் எல்லைமீறியதாக சொல்லப்படும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பல பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறியதாக அறியப்படும், சமூகத்தில் பரவலாக மதிக்கப்படும் உயர் அதிகாரி மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா?

பரவலாக மதிக்கப்படும் உயர் அதிகாரி ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக பல பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறியது தெரியவந்துள்ளது. அதிகாரி மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடந்த சில நாட்களாகவே, அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடித்த பாதிக்கப்பட்ட குரல்களின் எதிரொலி எங்கும் தொனித்து வருகிறது.

இந்நிலையில் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, முன்னணி இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியின்படி ஐ.ஆர்.எஸ் பணியில் அமர்ந்துள்ள, தமிழ் ஆர்வலராகப் பரவலாக மதிக்கப்படும் உயர் அதிகாரி ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக பல பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறியது தெரிய வந்துள்ளது.

வேறொரு சூழலில் இவர் தமிழ் வளர்க்க ஆற்றிய பணியை மெச்சி இதே தளத்தில் இவரைப் பாராட்டிய கட்டுரையும் வெளியானது. ஆனால் இப்படியாக பொதுமக்களிடையே ‘தான் மிகவும் நல்லவர்’ என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, அதையே துஷ்ப்ரயோகம் செய்துள்ளார் என்று தெரிய வருகையில் அதைச் சாடுவதில் இங்கு எவ்வித தயக்கமும் இல்லை.

யாரோ சில பெண்கள் கூறுவதை வைத்து இந்தக் குற்றச்சாட்டு முன்னிலைப் படுத்தப்படவில்லை என்பதைத் தெளிவு படுத்துவது அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரி, ஒரு சில குறிப்பிட்ட ‘பேட்டர்ன்’ (pattern) அதாவது பாணியைக் கையாண்டே பாதிக்கப்பட்ட பெண்களை அவர்களது விருப்பத்துக்கு எதிராக நெருங்கி அத்துமீறியது தெரியவந்துள்ளது.

ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத பெண்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அணுகுமுறையில் தென்படும் இந்த ‘பேட்டர்ன்’ அல்லது பாணி குறித்து சொல்வதில் இருந்து இந்த குற்றச்சாட்டு வலுவானது என்று சொல்லலாம்.

பொதுவெளிகளில் மாண்புடன் வலம் வந்த இந்த அதிகாரி, ஒன்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் கூற்றின்படி, நட்பின் போர்வையில் பெண்களை அணுகி உரையாடி அவர்களுடைய அந்தரங்க தகவல்களை வற்புறுத்திப் பெற்றுள்ளார் என்பது வெளிவந்துள்ளது. அப்படி பெண்களுடன் தான் எல்லைமீறி உரையாடிய ‘சாட்’ (chat) ஆகியவற்றை அழிக்க (delete செய்ய) வைத்துள்ளார் என்பதும் புலனாகிறது.

சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் உள்ள மனிதர்கள் தங்களுடைய தகுதியையே ஒரு போலியான முகமூடியாக அணிந்து அவர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கையை துஷ்ப்ரயோகம் செய்யும்போது எதிர்த்து குரல்கள் எழவே செய்யும்.

இனியும் இது தொடராத வண்ணம் சட்டமும் சம்பந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கைகள் எடுக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

இன்று நேற்று என்றில்லாமல் தொன்று தொட்டு நடந்து வருகின்றன, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள். இதை மனதில் கொண்டு தான் ‘பெண்ணை வீட்டுக்கு வெளியே அனுப்பாதே’, ‘மனைவியை வேலைக்கு அனுப்பாதே’ என்றெல்லாம் பெண்ணை வீட்டுக்குள் சிறை வைத்தனர்.

கூண்டுப்பறவைகளாகவே வளர்த்து வைக்கப்பட்ட பெண்கள், இப்பொழுது தான் தங்களாலும் சிறகு விரித்து பறக்க முடியும் என்றுணர்ந்து வானம் பார்க்க வெளிவருகின்றனர். அவர்களுக்கு விருப்பம் உள்ளதோ இல்லையோ, வெளியுலகம் என்று வருகையில் ஆண்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும், உடன் பணிபுரியத் தான் வேண்டும்.

அப்படி கடந்து வரும் ஆட்களில், ஒரு சிலர் மீது காலம்காலமாக வழங்கி வரும் சில கருத்துகள் காரணமாகவோ, அவர்களுடைய தகுதி அல்லது பணி காரணமாகவோ, பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாகவே நம்பிக்கையும் மதிப்பும் ஏற்படுவது உண்டு.

தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ‘ திரைப்படம்/புதினத்தில் வருவது போல், சமூகத்தில் ‘ரொம்ப நல்லவன்’, ‘மக்கள் நல அபிமானி’, ‘உத்தமன்’ என்று பரவலாக புகழ்பெற்ற சில மனிதர்கள், ‘ஊருக்கு ஒரு முகம், அந்தரங்கமாக இன்னொரு முகம்’ என்று இருந்து தன் மீது மதிப்பும் நம்பிக்கையும் உடைய பெண்களை மெல்ல மெல்ல நெருங்கி, வற்புறுத்தி அத்துமீறிவிட்டு எதுவும் தெரியாத அப்பாவிகள் போன்று வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக நம்பிக்கை நொறுக்கப்படும் போதெல்லாம் வெறும் வேதனை, விரக்தி என்று நிறுத்திவிடாமல், நடந்த அநீதியை வெளிச்சத்துக்கு கொணர்ந்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.

‘ஆண்கள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பார்கள். பெண்கள் தான் எதற்கும் இடம் கொடுக்காமல், பத்திரமாக இருக்க வேண்டும்’, ‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது’ என்று சொல்லிச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண் மீது பழி சுமத்தியது போதும்.

எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு உயரங்கள் தொட்டிருந்தாலும், சமூக அந்தஸ்து, அரசியல் பின்புலம், திறமை, தகுதி என்று எந்த வகையில் சிறந்தவராக இருந்தாலும், அவர் அத்துமீறியவர் என்ற பட்சத்தில், சட்டமும் நீதியும் எவ்வித சலுகையும் அளிக்காமல் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.

அவ்வாறு நடக்குமானால், பாதிக்கப்பட்டவருக்கு மாறாக குற்றம் இழைத்தவர் நாணிக் குனியும் நாள் விரைவில் வரும்.

பட ஆதாரம்: Photo by Yan Krukov from Pexels

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,882 Views
All Categories