தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

தமிழ் மண்ணின் சீர்திருத்தவாதிகளுள் மறுக்க முடியாத இடத்தை தனக்கென உண்டாக்கியவர், தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்ட மூவலூர் ராமாமிர்தம் அவர்கள்.

தமிழ் மண்ணில் தோன்றிய வீரமிக்க சீர்திருத்தவாதிகளுள் மறுக்க முடியாத இடத்தை தனக்கென உண்டாக்கியவர், தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள்.

முந்தைய காலங்களில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிக இளவயதிலே கோயில்களுக்கு காணிக்கையாக நேர்ந்துவிட்டு இசை, இலக்கியம் நாட்டியம் போன்ற கலைகளில் பயிற்சி அளித்து அழகு, அறிவு என அனைத்து விதத்திலும் மனதைக் கவரும் விதத்தில் வளர்க்கப்படுவார்கள்.

இத்தனை சிரமேற்கொண்டு கல்வியும் கலையும் அளித்து வளர்க்கப்படும் இந்தப் பெண்கள் பருவமடைந்தவுடன் நடன மாதராகவும், சில ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும் வரிக்கப்படுத்துவது வழக்கமாக இருந்த இருண்ட காலங்கள் அவை.

‘தேவதாசி ஆகமாட்டேன்’ என்று வைராக்கியத்துடன் நின்ற இளம்பெண்

இந்தக் குறிப்பிட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தவர் தான் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள். தங்களது மகளுக்கு தேவதாசி ஆகவேண்டிய சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஊர் வழக்கத்தையும் மீறி மகளுக்கு இசையோ நடனமோ கற்றுத்தராமலே வளர்க்க முற்பட்டனர், ராமாமிர்தம் அம்மையாரின் பெற்றோர்களான கிருஷ்ணசாமி – சின்னம்மாள் தம்பதியினர்.

இதற்காக அவர்களுடைய சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு மிகுந்த வறுமைக்கு உட்படுத்தப்பட்ட இந்த தம்பதியினர், ஒரு கட்டத்தில் ஐந்து வயது குழந்தையாக இருந்த ராமாமிர்தத்தை ஒரு தேவதாசிப் பெண்ணிடம் விற்றுவிட்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தான் வளர்க்கப்பட்ட சூழலில் இளவயது முதலே இசை நாட்டியம் ஆகிய கலைகளைப் பயின்று வளர்ந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ ராமாமிர்தம், ‘தான் ஒரு தேவதாசி ஆகி விடக் கூடாது’ என்ற எண்ணத்தில் மிக உறுதியாக இருந்தார். பருவம் வந்த பின்னும், வழக்கத்திற்கு மாறாக ‘தேவதாசி ஆகமாட்டேன்’ என்று வைராக்கியத்துடன் நின்ற ராமாமிர்தத்தை நிறைய பணத்திற்காக 80 வயது முதியவருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சூழலில் துணிவுடன் வீட்டை விட்டு வெளியேறிய ராமாமிர்தத்தின் மேல், ஊர் வழக்கத்தை உடைத்த காரணத்திற்காக, பல்வேறு பழிகள் சுமத்தப்பட்டன. அவற்றையெல்லாம் உடைத்து துடைத்தெறிந்து முன்னேறிய ராமாமிர்தம், மனம் ஒத்தவரை மணந்து, பின்பு தன் கணவருடன் இணைந்து தேவதாசி முறையை எதிர்த்துப் போராடாத துவங்கினார்.

ஊர்ப்பகைக்கு அஞ்சாத வீரமங்கை

தேவதாசிக் குலப்பெண்களினூடே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் ஊர்ப்பகையை வாங்கி கட்டிக்கொண்டார். ஒரு கட்டத்தில் ஊரில் செல்வாக்கு நிறைந்த பெரிய மனிதர்களின் தூண்டுதலால், ராமாமிர்தத்தின் கூந்தல் அறுத்து வீசப்பட்டது. அந்தக் காலத்திலும், எதற்கும் அஞ்சாமல் திடமுடன் நின்றார் அம்மையார்.

பின்னர் பெரியார் வழிநடத்திய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அம்மையார், பெண்களை அடக்கியாள வழிவகுத்த பால்ய விவாகம் எனப்படும் குழந்தைத் திருமணம், கட்டாயமாக விதவைகள் மீது திணிக்கப்பட்ட பழைய வழக்கங்கள், தீண்டாமை, ஆகியவற்றுடன் இணைந்து தேவதாசி முறையையும் ஒழிக்கப் போராடினார்.

சட்டம் நிறைவேறியது!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களுடன் இணைந்து ‘தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் இந்தியாவின் பாரம்பரியம் அழிக்கப்படும்’ என்ற கருத்துடைய பல பெரிய மனிதர்களையும் மீறித் துணிவுடன் போராடினார், ராமாமிர்தம் அம்மையார்.

பல போராட்டங்களுக்கு பிறகு, 1947 ஆம் வருடத்தில் ‘தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.

‘எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா?’

ராமாமிர்தம் அம்மையார் தாசிகளின் மோசமான நிலையை உலகம் உணர வேண்டும் என்று நம்பினார். 1936 ஆம் ஆண்டில் தன்னுடைய வாழ்க்கையைத் தழுவி இவரே எழுதிய ‘தாசிகளின் மோசவலை (அ) மதிகெட்ட மைனர்’ என்ற நாவல், வெளிவர 65 ஆண்டுகள் பிடித்தது. தாசிகளின் கொடுமையான வாழ்க்கையை எடுத்துச் சொல்லும் ஆவணமாக இது விளங்குகிறது. ‘எந்தத் தாசியாவது கடைசி காலத்தில் சுகமாயிருக்கிறாளா?’ என்று நாவலில் குறிப்பிடப்படும் இடத்தில் எவரும் கலங்கிப் போய்விடுவர்.

ராமாமிர்தம் அம்மையாரின் துணிவையும் வைராக்கியத்தையும் மெச்சி ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்‘ இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. திருமண வயது வந்த பெண்களுக்கான இந்த உதவித்திட்டம் குறித்து அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

அனைவருக்கும் ஒரு முன்னோடியாக நிற்கும் ராமாமிர்தம் அம்மையார் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது, ‘எவ்வித சூழலையும் முன்நின்று எதிர்கொள்ள வேண்டும்; மற்றவர்கள் அங்கீகரிக்காவிட்டாலும் நியாயத்திற்காக குரல் எழுப்ப வேண்டும்’ என்பதையே.

பட ஆதாரம்: YouTube

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 61,842 Views
All Categories