பெண்களின் வலிமையை பறைசாற்றிய ‘வீரத் தமிழன்னை’ தர்மாம்பாள்!

'வீரத் தமிழன்னை' தர்மாம்பாள் போல் காட்ட வேண்டிய சூழலில் தைரியம் காட்டி, திறம்பட செயல்பட்டு வீட்டையும் நாட்டையும் செழிக்கச் செய்வோம்!

வீரத் தமிழன்னை’ தர்மாம்பாள் போல் நம்முள் உள்ள ஆற்றலை விழித்தெழச் செய்து, காட்ட வேண்டிய சூழலில் தைரியம் காட்டி, திறம்பட செயல்பட்டு வீட்டையும் நாட்டையும் செழிக்கச் செய்வோம்!

இயற்கையிலேயே பெண்கள் வலிமையானவர்கள் என்பது உண்மை. பெண்கள் பெரும்பாலானோர் நன்றாக படித்துள்ளோம். எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற கருத்து சுதந்திரத்தையும் முன்னைக் காட்டிலும் அதிகமாக அடைந்துள்ளோம்.

“சமயோசிதம், ஊடுருவல், நேர்த்தியான அவதானிப்பு ஆகியவை பெண்களின் அறிவியல்; இயல்பாகவே தங்களுக்கு உள்ள இந்தத் திறனை பயன்படுத்திக் கொள்ளுதலே அவர்களின் திறமை” என்பதே ஐரோப்பிய தத்துவஞானி ஜீன் ஜாக்கஸ் ரோஸ்ஸியொ அவர்களின் கூற்று.

இவ்வளவு இருந்தும், ‘நாம் எல்லா சூழ்நிலைகளையும் தைரியமாக கையாள்கிறோமா?’ என்றால், அதை ஆணித்தரமாக ‘ஆம்’ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நவயுகத்திலும், இந்தத் திறமையை முன்னிறுத்துவதில் பெண்கள் ஏனோ பின்தங்கி உள்ளோம்.

வியக்கத்தக்கது யாதெனில், மேற்கூறிய இந்தத் திறமைகளுடன், போராட்ட குணத்தையும் இணைத்து முற்காலத்திலேயே பல பெண்கள் செய்த சாதனைகள்! இப்படிப்பட்ட சாதனைப் பெண்களுள் ஒருவர் தான், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் அவர்கள்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் (1890-1959)

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் சித்த மருத்துவம் பயின்று மருத்துவராக பணியாற்றியவர். பெரியாரின் மீதும், பெரியாரின் கருத்துக்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதால், ஒரு கட்டத்தில் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டவர்.

பெண் கல்வி, கலப்பு மணம், விதவைகளின் மறுமணம் ஆகிய விஷயங்களை கண்போல் போற்றினார், தர்மாம்பாள்.

விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் திருமண அரசின் உதவித் திட்டத்திற்கு ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’ என்றே பெயரிடப் பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, கணவனை இழந்த பெண்ணிற்கு நடக்கும் மறுமணத்துக்கு உதவி தொகை அளிக்கப் படும். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு

இவர் பெரும் முயற்சி செய்து, 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார்.

தனித்தமிழ் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய மறைமலை அடிகளாரின் மகள், நீலாம்பிகை அம்மையார் தலைமையேற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் தான், ஈ. வெ. இராமசாமி அவர்களுக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கப் பெற்றது!

தமிழ் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம்!

மேலும், தர்மாம்பாள் அம்மையார், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் இசையை முன்னேற்றுவதிலும் பெருமுயற்சி எடுத்து வந்தார்.

1940 வரையில் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தவர்களுக்கு சமூகத்தில் அங்கீகாரமோ மற்ற ஆசிரியர்களை போல் நிகரான ஊதியமோ இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இதுவே உண்மையாக இருந்தது. இந்த நிலையை எதிர்த்து, ‘இழவு வாரம்’ என்ற பெயரில் கிளர்ச்சி செய்து சாதித்தவர் தர்மாம்பாள் அம்மையார் தான்.

இவரது முயற்சியாலேயே தமிழ் ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படலாயிற்று.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறைவாசம் செய்த இவர் தமிழ் வளர்க்கும் ‘மாணவர் மன்றம்‘ அமைப்பினை உருவாக்கி, அதன் தலைவராகவும் பத்தாண்டுகள் பணியாற்றினார்.

இவர் ஆற்றிய தொண்டுகளை மெச்சி, இவருக்கு ‘வீரத் தமிழன்னை’ என்ற பட்டம் வழங்கப்பட்டது!

கலங்காமல், அஞ்சாமல் சாதிக்க நம்மாலும் முடியும்!

எந்தச் சூழலிலும் கலங்காமல் இடர்களைக் கண்டு அஞ்சாமல் தனக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கே வேண்டியது பெற்றுத் தந்த இந்த மாமகளுள் விழித்துக் கொண்ட அதே ஆற்றல், நம் அனைவரின் உள்ளும் இருக்கிறது. அதனை விழித்தெழச் செய்து, காட்ட வேண்டிய சூழலில் தைரியம் காட்டி, திறம்பட செயல்பட்டு வீடு செழிக்க வாழ்வோம் – ஏன், நாட்டையே செழிக்கச் செய்வோம்!

பட ஆதாரம்: YouTube

About the Author

4 Posts | 9,385 Views
All Categories