பெண்களுக்கு அரசியல் எட்டாத கனியா, என்ன?

பெண்ணுக்கு அரசியல் எட்டாத கனியல்ல. தன்னுடைய வீட்டை பற்றி யோசிப்பது போல் பத்து வீட்டைப் பற்றி யோசித்தால் அதுவே நாட்டு அரசியல்.

அரசியல் ஒன்றும் பெண்ணுக்கு எட்டாத கனியல்ல. தன்னுடைய வீட்டை பற்றி மட்டுமே யோசித்தால் அது வீட்டு அரசியல், அதுவே பத்து வீட்டைப் பற்றி யோசித்தால் நாட்டு அரசியல்.

“நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல்,மனித குல விடுதலை சாத்தியமே இல்லை” என்கிறார் லெனின்.

வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்று சொல்லவில்லை. வீட்டைத் தாண்டி பிற களங்களிலும் பெண்கள் செயல்பட வேண்டும் என்று மொழிகிறேன். அரசியலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

நமது தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற பெண் அரசியல் தலைவர் சொல்லி இருப்பதும் இதையே:
“உலகில் மிகவும் தேவைப்படும் துறைகளில் ஒன்று அரசியல்,மற்றும் பெண்கள் அரசியலில் வெற்றி பெறுவது என்பது உலகளவில் இன்னும் அரிதானது.”

பெண்களும் அரசியலும்

பெண்கள் அரசியலில் வெற்றி பெறுவது ஏன் அரிதானது?

‘வீடு பெண்ணுக்கு, நாடு ஆணுக்கு’ என்று சொல்லிவைத்தது போல் ‘குடும்ப நிர்வாகம் மட்டுமே பெண்ணுக்கு’ என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். இதனால் சட்டமன்ற நடப்புகளிலும், மற்ற அரசியல் நிகழ்வுகளிலும் சராசரி பெண்கள் பலர் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

இதையும் தாண்டி அரசியலில் ஈடுபட்டு, தேர்தல் களம் கண்டு அமைச்சர்களாகவும் பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்களுக்குள் எத்தனை பேருக்கு முக்கிய இலாகாக்கள் வழங்கப்படுகின்றன?

முக்கிய கட்சிப் பதவிகள் பெண்களுக்கு கொடுக்கப் படுவதும் அரிது. பெண் வாக்காளர்களை கவர பெண் தலைவர்கள் தேவைப்பட்டாலும், பெண்கள் பெரிய அளவில் தனிப்பட்ட புகழ் அடைவது மிகவும் அரிது.

சாலச் சிறந்த பெண் அரசியல் தலைவர்களை கடந்து வந்திருக்கிறோம், இருப்பினும் ஏன் நிலைமை இன்னும் பெரிய அளவில் மாறாமல் இருக்கிறது?

உளவியல் ரீதியாக பார்க்கும் போது, சமூகம் சார்ந்த பொதுவான அணுகுமுறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் வேற்றுமை இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது விளங்குகிறது.

சமூக-உளவியல் விளக்கங்கள்

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் புறநிலை வேறுபாடுகளை சுட்டிக்காட்டும்படியாக கண்கூடாக பல உதாரணங்கள் இருந்தாலும், அதை மீறி புறநிலை சூழ்நிலைகளில் இருந்து மாறுபட்ட மற்ற உளநிலை வேறுபாடுகளை பற்றியும் சமூக-உளவியல் (socio-psychological) ஆராய்ச்சிகள் பேசுகின்றன.

பெண்ணுக்கும் ஆணுக்கும் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயிற்றுவிக்கப்படும் வேறுபாடுகளை மையமாகக் கொண்டு இது அமைகிறது என்பது அறியப்படுகிறது. கில்லிகன் அவர்கள் 1982-இல் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியின்படி பெண்கள், ஆண்களை விட ‘தனித்துவமான அடையாளம்’ என்ற வகையில் பின்தங்கி உள்ளனர் என்று அறியப்படுகிறது!

ஆண்கள் இளம்பிராயம் முதலே தனக்கான சுயகௌரவம், தன்னை முன்னிலைப் படுத்துதல், போட்டி மனப்பான்மையுடன் விளங்குதல், தன்னுடைய உரிமைகளை நிலைநாட்டுதல் போன்றவற்றில் ஈடுபாட்டுடன் வளர்கின்றனர் என்கிறது இந்த ஆராய்ச்சி.
பிறரின் உரிமைகளை மதிப்பதும், அதன் வழியாக தன்னுடைய உரிமைகளை காத்துக் கொள்வதும், தன்னுடைய லட்சியங்களை அடைவதும் ஆண்களின் தார்மீக பகுத்தறிவின் முக்கிய அம்சங்கள் என்று அறியப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரை உறவுகளை முதன்மையாகக் கருதி, மாறுபட்ட, முரணான (conflicting) பொறுப்புகளை திறம்பட கையாள்வதே முக்கியம் என்பதாக அமைந்து விடுகிறது என்று கில்லிகனின் ஆராய்ச்சிக் கட்டுரை மொழிகிறது.
அடிப்படை சிக்கல்களை அடையாளம் கண்டு தீர்ப்பது தான் பெண்கள் தங்களது தார்மீகப் பொறுப்பாக பார்க்கின்றனர் என்பதையும் இங்கு அறிகிறோம்.

இப்படிப்பட்ட ஈடுபாடு மற்றும் தார்மீக ரீதியான அணுகுமுறையில் உள்ள மாற்றங்கள் தான், வீடு முதல் அரசியல் வரை ஆண்-பெண் இடையிலான வேற்றுமைக்கும் பாகுபாட்டிற்கும் அடித்தளம் இடுகிறது என்பதை முன்வைக்கிறது கில்லிகனின் கட்டுரை.

பெண்களுக்கு வணிகம் மற்றும் சந்தை சார்ந்த தீர்வுகள் மீதுள்ள நம்பிக்கை குறைபாட்டையும், ஏழைகளுக்கு நன்மை செய்ய அரசாங்கத்தின் தலையீட்டை பெண்களே அதிகம் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கிறது கில்லிகனின் ஆராய்ச்சி.

பொருளாதார சூழ்நிலைகள், வேலைவாய்ப்பு, வயது, பொறுப்பு, என அனைத்தையும் கடந்தவையாக இந்த பாலின வேறுபாடுகள் உள்ளது என்கிறது கில்லிகனின் ஆராய்ச்சி.

நடுநிலைப்படுத்தல்

இந்த வேறுபாட்டினை சமன் செய்து நடுநிலையாக்குவதற்கு, சரியான சமூக போதனை மற்றும் அறிவூட்டும் அணுகுமுறைகளை பின்பற்றி செயலாற்றுவது அடிப்படையான விஷயம். மக்களிடையே ஆண் பெண் பேதமில்லை என்று கற்பிக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு வீட்டிற்கு அப்பாற்பட்ட சமூகநீதியை செயல்படுத்தும் பொறுப்புகளும், மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வாய்ப்புகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இதை செயல்படுத்தும் வகையிலான கல்வித்திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரவேண்டும். ஆவணங்கள், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், வானொலி மூலமாகவும் இந்த உணர்வு பரப்பப் பட வேண்டும். இதற்கென நெறியாளர்களை நியமிக்க வேண்டும். ஆண்களுக்கு சமமான கூட்டாளிகளாக பெண்கள் தலைமை பண்புகள் பட்டைத் தீட்டப்பட்டு வெளிவர வேண்டும்.

முதலில் வீட்டில் சமநிலை வேண்டும்

பெண்கள் வீட்டில் அரசியலை பேசத் தொடங்க வேண்டும். பணியிடங்களில், நண்பர்களோடு உரையாடுகையில் நாட்டின் சூழலை, அரசியலை கலந்து ஆலோசிக்க பெண்கள் முன்வருவோம்.

இதன் மூலமாக நமக்கு அரசியல் நிலைமை பற்றிய சுயமான, தீர்க்கமான ஒரு தெளிவு கிட்டும். இதை கொண்டு நன்றாக யோசித்து நீங்கள் மற்றவரிடம் அதை பகிர்ந்து கொள்ளுங்கள். அதே நேரம் அவர்களுடைய கருத்துகளையும் கேட்க மறக்காதீர்கள்.

பெண்கள் வல்லமை வாய்ந்தவர்கள். நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். ஒரு விஷயத்தை பற்றி யோசனை செய்ய ஆரம்பித்தால், ஆர்வத்துடன் அதை கற்றுக் கொள்ளவும் முடியும்.

பெண்கள் அரசியலில் ஈடுபடுவது அவசியம். பெரிய விஷயம் ஒன்றும் இல்லை – தன்னுடைய வீட்டை பற்றி மட்டுமே யோசித்தால் அது வீட்டு அரசியல், அதுவே பத்து வீட்டைப் பற்றி யோசித்தால் நாட்டு அரசியல். அடித்தளம் இது தான்.

அதே பிரச்சனை தான். அதன் அளவு தான் மிகப்பெரிது. பெரிதாய் சாதிப்போம்.

பட ஆதாரம்: YouTube

About the Author

4 Posts | 9,573 Views
All Categories