ஏன் இந்த வைரமுத்து பாடலுக்கு எதிராகப் பல குரல்கள் எழுந்துள்ளன?

அத்துமீறிய ஆசிரியரின் நடத்தை அளித்த அதிர்ச்சியே நீங்காத நிலையில், மேலும் ஓர் ஊசியாக கண்ணில் இறங்கியுள்ளது, "என் காதலா" என்கிற வைரமுத்து பாடல்.

சிறார்களிடம் அத்துமீறிய ஆசிரியரின் நடத்தை அளித்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில், மேலும் ஓர் ஊசியாக கண்ணில் இறங்கியுள்ளது, “என் காதலா” என்கிற வைரமுத்து பாடல்.

சமீப காலமாக, பெற்றோர்களுக்கு இருக்கும் கவலைகளுடன் புதிதாக இன்னொரு கவலை முளைத்து உறுத்திக் கொண்டிருக்கிறது. சிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் சம்பவங்களும் அது சார்ந்த செய்திகளும் அவ்வப்போது வெளிவந்து அனைவரையும் உலுக்கிக் கொண்டிருக்கின்றன.

தன்னிடம் பயின்ற மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ஆசிரியரின் நடத்தை அளித்த அதிர்ச்சியில் ஏற்கனவே உறைந்து போயுள்ள இந்த நிலையில், கண்ணில் ஊசியாக இறங்கியுள்ளது, தற்போது தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் “என் காதலா” என்கிற பாடல்.

இல்லை, பாடலில் ஆபாசமான வார்த்தைகளோ, காட்சிகளோ இல்லை – அதாவது வெளிப்படையான விரசம் இல்லை. என்ன பிரச்சனை என்றால், வயது முதிர்ந்த ஆணின் மேல் பள்ளிக்கூடம் செல்லும் ஒரு சிறு பெண்பிள்ளைக்கு காதல் மலர்கிறது. இது தான் விபரீதம்.

உரிய வயதும், மனமுதிர்ச்சியும் உடைய பெண்கள், தங்கள் மனதுக்கு உகந்தவரை விரும்புவது இயற்கை. அப்படி அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை முடிவு செய்வது அவர்களது உரிமை.

ஆனால், இன்னும் உலகம் விளங்காத, குழந்தைத் தன்மை நீங்காத பள்ளி மாணவி, ஒரு நடுத்தர ஆணின் மேல் ஆசை கொள்வதாக காட்டப்படுத்துவது விஷமுள்ளாக சங்கடப் படுத்துகிறது.

வயது வித்தியாசமான பாட்டு?!

இந்தப் பாடலை தன்னுடைய ‘நாட்படு தேறல்’ தொகுதியின் ஒரு அங்கமாக எழுதி வெளியிட்டுள்ள, கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்த பாடலுக்கு அளித்திருக்கும் அறிமுக உரை, இது தான்:
“இது ஒரு வித்தியாசமான பாட்டு. ஆமாம்! வயது வித்தியாசமான பாட்டு. வயதில் மூத்தவரை இளம்பெண் காதலிக்கும் காமம் கடந்த பாட்டு. காதலுக்குக் கண்ணில்லை; சிலநேரங்களில் வயது வேறுபாடும் இல்லை.”

பாடலில் வரும் பெண், பள்ளிச்சீருடை அணிந்து வருவதாக காட்டப்பட்டுள்ளதால், அவள் பள்ளி மாணவி என்று அறிகிறோம். அவர்களுடைய ஸ்கிரிப்ட் படி பார்த்தால் கூட, அதிக பட்சமாக பதினைந்து, பதினாறு, இல்லை பதினேழு வயதிருக்குமா அந்த சிறுமிக்கு? அந்த வயது சிறுமிக்கு தன்னை விட வயதில் மூத்த ஆணின் மேல் பிரேமை உண்டாவதான கருத்தை முன்வைக்கும் இந்தப் பாடல், இளம்பிஞ்சுகளை காமக்கண்ணோடு நோக்கும் எத்தனை விஷ நெஞ்சங்களுக்குள் என்னென்ன விதைகளை விதைக்கப் போகிறது?

சமூக ஊடகங்களில் வலுக்கும் எதிர்ப்பு

இந்தப் பாடலின் தத்துவத்தையும் காட்சிப்படுத்தலையும் விமர்சித்து சமூகப் பொறுப்புள்ள பல குரல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

https://www.facebook.com/100001065395934/posts/4385398688172268/

விக்னேஷ் என்பவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில்,
“‘சிறார்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ஆசிரியர் ஒருவர் கைதான அதே நேரத்தில், வைரமுத்து, பள்ளி மாணவிக்கு நடுத்தர வயது ஆணின் மீது காதல் ஏற்படுவதாக ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்’ என்ற முன்னுரையுடன் பகிரப்பட்டது, இந்தக் காணொளி…

…குழந்தைகளிடம் அத்துமீறும் மிருகங்கள் இது போன்ற உதாரணங்களை காட்டியே அவர்களுக்கு வலை விரிப்பர். கவிதை நயம் கொண்டு இப்படி ஒரு பாடலை உருவாக்கி, இந்த வன்மத்தை நியாயப்படுத்த முயன்றுள்ளார், கவிஞர். போலிச் சாமியார்கள், தங்களிடம் அகப்படும் இளம்பெண்களிடம் ‘நான் கிருஷ்ணா, நீ ராதா, நம்முடைய உறவு மனித புரிதலுக்கு அப்பாற்பட்டது’ என்று பேசி மயக்கி தங்களுடைய இச்சைக்கு இணங்க வைப்பது போல் தான் இதுவும்.

…உங்கள் குழந்தைகள் ஜாக்கிரதை!”
என்று தன் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இதே பதிவை மேற்கோள் காட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ட்வீட் ஒன்றினை வெளியிட்டுள்ளார், பாடகி சின்மயி.

என்ன சொல்லப் பட்டுள்ளது, பாடலில்?

‘இது காமம் கடந்த காதல்’ என்று முன்னுரையில் இருந்தாலும், பாடலின் வரிகள் பதற வைக்கின்றன.

**
“வயதால் நம் வாழ்வு முறியுமா?
வாய் முத்தம் வயது அறியுமா?

என்வாழ்வில் தந்தை இல்லையே!
தந்தைபோல் கணவன் வேண்டுமே!

ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?”
**

எங்கு சென்று கொண்டிருக்கிறோம் நாம்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்து வரும் குழந்தைத் திருமணத்தை அடியோடு ஒழித்துக்கட்ட ஒரு பக்கம் சமூக செயற்பாட்டாளர்கள் போராடிக் கொண்டிருக்க, இது போன்ற கருத்துகள் பொதுவெளியில் துளியும் நாணம், இங்கிதம் இன்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இளம்பிள்ளைகளை தன் பிள்ளைகளாய் பார்க்கும், வயதில் முதிர்ந்தவரை தந்தையாய் மதிக்கும் அளவுக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை. பள்ளி மாணவியை இச்சையில் உழலும் பொருளாக வெளிப்படுத்தி இருப்பது வன்மம் இல்லையா?

கவிதை நயத்துடன் தமிழ் சொட்டச் சொட்டச் சொன்னாலும், வஞ்சம் வாய்மை ஆகுமோ?

மொழி ஆளுமை வேறு. நெறி ஒழுகுதல் வேறு. சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்துடன் இருக்கும் மனிதர்கள் செய்வதை கேட்டு, அவர் வழியே பலரும் செல்லக் கூடும் என்பதை உணர்ந்து, இனியேனும் ‘பெரிய மனிதர்கள்’ சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வார்களா?

‘பீப் சாங்க்’க்கு எதிராக எழுந்த குரல்கள் இதையும் தட்டிக்கேட்குமா?

யார் கேட்கிறார்களோ இல்லையோ, தயவு செய்து நம்மளவில் இந்தப் பாடலை பொறுத்தவரையில் எச்சரிக்கையுடன் இருந்து, நம் பிள்ளைகளை கவனமாய் பாதுகாப்போம்.

பட ஆதாரம்: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடலின் ஒரு காட்சி

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,009 Views
All Categories