தி கிரேட் இந்தியன் கிட்சன்: நம் வீட்டுப் பெண்களின் சொல்லப்படாத கதை

'டாக்ஸிக்' உறவிலிருந்து பெண் வெளியேற முடியுமா? வெளிவருவதால் அவள் இழக்கப்போவது என்ன? என சிந்திக்க வைக்கிறது, 'தி கிரேட் இந்தியன் கிட்சன்'.

‘டாக்ஸிக்’ உறவுக்குள் இருக்கும் பெண்ணுக்கு அந்த உறவை விட்டு வெளியேறும் சுதந்திரம் இருக்கிறதா? வெளிவருவதால் அவள் இழக்கப்போவது என்ன, அதன் ஆழம் என்ன? என பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது, ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்‘.

மலையாள சினிமாவிற்கு யதார்த்தக் கதைகள் உள்ளங்கை நெல்லிக்கனி போலாகும். உலக அளவில், கும்பளாங்கி நைட்ஸ் போன்ற கேரளத் திரைப்படங்கள் பலரும் சொல்லத் தயங்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்காக மிகவும் பாராட்டப் படுகின்றன. இந்த வகையில், இம்முறை மீண்டும் நம் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது, ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்‘ எனும் திரைப்படம்.

உணர்ச்சிக் குவியல்களின் கோர்வை

தி கிரேட் இந்தியன் கிட்சன் திரைப்படத்தை நான் உணர்ச்சிக் குவியல்களின் கோர்வையாக பார்க்கிறேன். திரைப்படத்தின் நாயகியோடு இணைந்து நாம் பயணிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் – அவளது சமையலறையில், அவளுடைய படுக்கையறையில், அவள் தனிமையில் இருக்கும் தருணங்களில், நான் இதையே உணர்ந்தேன்: அவளுக்குள் இருந்து ஒரு சிறிய குரல் கத்திக் கொண்டிருப்பதைப் போல, அது அவளை அந்த வீட்டையும் உறவையும் விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்வது போல் உணர்ந்தேன்.

ஒவ்வொரு இந்தியன் கிட்சன் உள்ளும், சொல்லப்படாத கதைகள் பல ஓய்வெடுப்பதை இந்த கதை உணர்த்துகிறது. வேகவைத்த கோழிக்கறியின் மணம் நிறைந்த ஆவியை போல நம் வீட்டுப் பெண்களின் சொல்லப்படாத கதைகளும் ஆவியாகி மறைந்து போகும் பட்டறைகள் அவை.

‘டேபிள் மேனர்ஸ்’?

இந்தக் கதையில் சில மாந்தர்கள் முழுமையாகவும் சிலர் ஒரு பகுதியாகவும் வந்து போகின்றனர். ஆனால் படம் நெடுக யாரோ நம் முகத்தில் நீரை இரைத்து கண்டும் காணாமல் கிடக்கும் பல விஷயங்களை உற்றுநோக்கும்படியாக நம்மை விழித்தெழச் செய்கிறது.

ஒவ்வொரு முறையும் கன்னாபின்னாவென சோறும் உணவுத்துண்டங்களும் இறைந்து கிடக்கும் அந்த டைனிங் டேபிளை அவள் துடைக்கும் பொழுது அவள் முகத்தில் எட்டிப்பார்க்கும் ஒரு துளி அருவருப்பு, ஒரு மனுஷியாக அவளது சுயமரியாதையின் மீது இழைக்கப் படும் அத்துமீறலை கோடிட்டு காட்டிவிட்டு போகிறது.

உணவு உண்பது போன்ற சாதாரணமான அனுதினம் நடக்கும் நிகழ்வுகளில் கூட, நம் வீட்டுப் பெண்கள் என்று வருகையில், ‘டேபிள் மேனர்ஸ்’ போன்ற ஒழுக்கக்கூறுகள் சர்வசாதாரணமாக ஓரங்கட்டப்படுவதை சத்தமின்றி முன்வைக்கும் காட்சிகள் யாரையும் பாதிக்கும்.

உணவு எச்சில்களை அள்ளும் வீட்டுப் பெண்களின் மேல் குறைந்த பட்சம் நன்றியுணர்வு ஏற்படுவதற்கு மாறாக ‘இது ஒரு விஷயமா’ என்கிற தோரணையில் அனைவரும் போகும் போக்கை இதற்கு மேல் விளக்கிக் கூற முடியாது.

ஹோட்டல்களில் உண்ணும் போது மட்டும் குறைவின்றி அவளது கணவன் வெளிப்படுத்தும் ‘டேபிள் மேனர்ஸ்’ பற்றி அவள் ஜோக் அடிக்கும் இடத்தில், ‘மேனர்ஸ்’ எனும் ஒழுக்கக்கூறுகள் அவளின் மீதே அம்புகளாக எறியப்படும் காட்சி கண்ணில் நிற்கிறது. இந்த ஒரு காட்சி, பெண்கள் தங்கள் மனதில் தோன்றியதை யதார்த்தமாக பேசுவதற்காக, எத்தனை வீடுகளில் எத்தனை முறை, பெருந்தவறு செய்தது போல் மன்னிப்பு கோரும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள் என்று யோசிக்க வைக்கிறது.

தொடரவோ, விட்டு விலகவோ அறிவுறுத்தும் உரிமை?

படம் தொடங்கி கிட்டத்தட்ட 30-40 நிமிடங்களிலேயே எனக்கு அந்த நாயகியிடம் “இங்கிருந்து, இந்த உறவிலிருந்து சென்றுவிடு” என்று சொல்லத் தோன்றியது. இதை நம்மில் பலர் செய்கிறோம் – “நீ ஏன் இதற்குள் சிக்கித் தவிக்கிறாய்? இதை விட்டு வெளியேறி விடு” என்று ஆரோக்கியமற்ற ‘டாக்ஸிக்’ உறவுகளில், திருமணங்களில் இருந்து பெண்களை நாம் மிகச் சாதாரணமாக வெளியேறச் சொல்லி விடுகிறோம்.
ஆனால் இப்படி சொல்ல நினைக்கும் முன்,
“அந்த உறவு அவளுக்கு எவ்வளவு முக்கியமானது?
அதிலிருந்து வெளிவருவதால் அவள் இழக்கப்போவது என்ன, அந்த இழப்பின் ஆழம் என்ன?
முதலில், அந்த உறவை விட்டு வெளியேறும் சுதந்திரம் அவளுக்கு இருக்கிறதா?”
ஆகிய கேள்விகளை நாம் கேட்கிறோமா?

இதில் எந்த கேள்விக்குமே ‘இது தான் பதில்’ என்று வரையறுத்து சொல்லமுடியாது. உறவுக்கு உறவு, பெண்ணுக்கு பெண் இது மாறுபடும்.
இதனாலேயே யாருக்கும், ஏன் – ஒரு பெண்ணான எனக்கு கூட, மற்றொரு பெண்ணை தனது திருமண பந்தத்தில் தொடரவோ விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்தும் உரிமை எப்போதுமே இல்லை என்று உணர்கிறேன்.

அவளுடைய அந்த உறவைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயம் எதுவும் முக்கியம் இல்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எல்லாம் தெளிவாகத் தெரிவது போல் தோன்றலாம்; ஆனால் உறவுக்குள் இருப்பவர்களுக்கு எட்ட நின்று தெளிவுடன் முடிவெடுக்கும் வசதி இருப்பதில்லை. “இன்னொரு முறை இப்படி நடக்காது” என்று நம்பியே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தவறையும் அவர்கள் கடந்து போகக்கூடும்.

“இதெல்லாம் ஒரு காரணமா?”

இந்தப் படத்தில் வரும் நாயகிக்கு இந்த உறவை விட்டு வெளியேறும் தைரியமும் சுதந்திரமும் உள்ள சூழலே காட்டப்படுகிறது; ஆனாலும் ‘எல்லாம் சரியாகி விடும்’, ‘விஷயங்களை சரிசெய்ய முடியும்’ என்ற நம்பிக்கையில் நாயகி அந்த உறவில் தொடர்கிறாள். இந்த இடம், “உறவை விட்டு வெளியேறலாமா” என்று மனதளவில் நினைக்கக் கூட சலுகை இல்லாத பெண்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.

படம் முடியும் தருவாயில், நாயகியின் தாய் அந்தப் பெண்ணிடம், “திருமணத்தை விட்டு வெளியேற இதெல்லாம் ஒரு காரணமா?” என்பது போல் சொல்கிறாள்.

இந்த காட்சி மீண்டும் யதார்த்த சாட்டையை சுளீரென்று சொடுக்குகிறது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நம் சமூகத்தால் ‘இப்படித் தான் இருக்க வேண்டும்’ என்று முன்பே தீர்மானிக்கப்பட்ட திருமணம் என்கிற உறவு வடிவத்தில், எல்லா காலங்களிலும் இந்தியப் பெண்கள் தங்களால் இயன்ற அளவு அனுசரித்து செல்கிறார்கள். சமரசம் செய்து, தவறுகளை மறக்கிறார்கள்.

ஏதோ ஒரு கட்டத்தில், தாங்க முடியாமல் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம், தனது திருமண உறவில் தன் சுயகௌரவத்தை நசுக்கும் சிக்கலான சூழல் பற்றி பேசுகையில், சில பெண்கள்,
‘இதை நீ ஏன் பெரிது படுத்துகிறாய்? இது எல்லாம் உன்னுடைய தவறு தான். உன்னைப் பற்றி நீயே அதிகமாக எண்ணிக் கொள்கிறாய். பெண் என்றால் விட்டுக் கொடுத்து போகவேண்டும்’ என்றெல்லாம் பேசி அவளை வாயடைத்து விடுகின்றனர்.

ஆனால் ‘அனைவருக்கும் அவரவர்களது அமைதியையும் மரியாதையையும் மீட்டெடுக்க விரும்பும் உரிமை உள்ளது, அதை மீட்டெடுப்பதில் வேடிக்கையானது எதுவுமில்லை‘ என்பதை நம்மை உணர வைக்கிறது இந்தக் கதை.

என்னைப் பொறுத்தவரை, இந்தப் படத்தில் நாயகி அவள் புகுந்த வீட்டை விட்டு வெளியேறுவது மிகுந்த விடுதலையாக இருந்தது; ஆனால் எனக்குள் மேலும் பல கேள்விகள் எழுந்தன: எத்தனை தவறுகள், அத்துமீறல்கள் தாங்கக் கூடிய வரையறையில் வரும்? பாரமான திருமணத்தில் இருந்து ஒரு பெண் வெளியேறினாலும், அவள் விட்டுச் செல்லும் நபர் – அவர் மீண்டும் மணந்தால், அந்தப் பெண்ணுக்கு என்ன நேரிடும்? ஒரு வேளை அந்த பெண், ‘எல்லாம் சரியாகி விடும்’ என நம்பி என்றென்றும் காத்திருந்தால் என்ன செய்வது?

எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்க, கேட்கத் தூண்டுகிறது, இந்த கிரேட் இந்தியன் கிட்சன்.

About the Author

3 Posts | 4,466 Views
All Categories