Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
திரைத்துறையில் சிறந்த பலர் கூடி உருவாக்கிய இந்த படைப்பில், குறிப்பிடும்படியாக ஒரு கருநிறத்துப் பெண் கூட திரையில் தோன்றவில்லை.
திரைத்துறையில் தனியிடம் பிடித்த சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் எடிட்டர்கள் என பலர் ஒன்றுகூடி ஒவ்வொரு frame-ஐயும் அழகியல் சொட்ட உருவாக்கிய ‘புத்தம் புது காலை’யில், குறிப்பிடும்படியான பாத்திரத்தில் ஒரு கருநிறத்துப் பெண் கூட திரையில் தோன்றவில்லை.
‘புத்தம் புது காலை’. கொரோனா என்ற ஒற்றை இழையில் கோர்க்கப்பட்ட ஐந்து கதைகள். ஐந்தும் வெவ்வேறு பாணி, வெவ்வேறு வகை. இருந்தாலும், கிட்டத்தட்ட பத்து பெண்கள் திரையில் தோன்றும் இந்தக் ‘காலை’யில் தோன்றும் நாயகிகளில் ஒருவர் கூட தென்தமிழ்ப் பெண்கள் பலரின் இயல்பான நிறத்தை பிரதிபலிப்பதாக இல்லை. மாநிறம் தோன்றாத, கருநிறம் காணாத இது நிச்சயமாய் விடியலும் அல்ல, புதிய காலையும் அல்ல.
தமிழ் சினிமாக்களில் ‘வெள்ளை வெள்ளேரென்று’ பெண்களுக்கென்றே வரையறுக்கப் பட்டிருக்கும் ‘திரை இருப்பு’ (screen presence) என்பது இன்றும் நமது திரைப்படங்களின் மூலமாக அழகியல் சார்ந்த நம் அணுகுமுறையை ஆக்கிரமித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
திரைப்படத் துறையின் படைப்பாளிகள், தென்னகத்து பெண்களுக்கு இயல்பாய் அமைந்திருக்கும் கருநிறத்து அழகினை திரையில் கொண்டாடும் முயற்சிக்கு தங்கள் கண்களைத் திறக்காது இருக்கும் வரை, திரையில் ‘diversity’ எனப்படும் பன்முகத்தன்மையும், ‘equal representation’ எனப்படும் ‘சம பிரதிநிதித்துவமும்’ உறங்கிக் கொண்டே தன் இருக்கப் போகிறது என்பதே உண்மை.
அது வரையில் திரையில் ஒரே ட்ரெண்ட், ஒரே மாதிரியான தன்மை, தான் விழித்திருக்கும்.
‘புத்தம் புது காலை’ என்ற மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இந்த ‘anthology’ வகைத் திரைப்படத்தில் ஏதோ ஓரிரு பெண்கள், அதிலும் சில விநாடிகள் மட்டுமே திரை இருப்பைக் கொண்ட பெண் திரைக்கலைஞர்கள் மட்டுமே இந்த ‘வெள்ளைத்தோல்’ வரையறையின் கீழ் வராமல் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களைத் தவிர, கதையில் உள்ள எல்லா பெண்களும், குறிப்பாக கதாநாயகிகள் அனைவரும் – எனது ஆச்சி சொல்வார்கள், “பால் வெள்ளை” என்று – அந்த நிறத்தில் அமைந்த பெண்களாகவே இருக்கிறார்கள்.
நாம் இருக்கும் இந்த ‘முற்போக்கான‘ காலக்கட்டத்திலும் வெள்ளைத் தோல் என்பது அழகின் இன்றியமையாத ஒரு பரிமாணமாக பரவலாக, வெளிப்படையாக கருதப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம்முடைய சமூகத்தின் அழகு சார்ந்த எண்ணங்களை, beauty standardகளை, யதார்த்தமாக மாற்றி அமைத்து திருத்தி எழுதி, கற்றுக்கொள்வதற்குள் காலங்கள் பல ஓடிவிடும். கசந்தாலும், இதுவே உண்மை.
என்றாலும், திரைத்துறையில் தனக்கென ஒரு தனியிடத்தை நிறுவியிருக்கும் தலைசிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் எடிட்டர்கள் என பலர் ஒன்று கூடி வீடு, மரம், விளக்கு, அமரும் இருக்கை என்று ஒவ்வொரு frame-ஐயும் செதுக்கி, அழகியல் சொட்டச் சொட்ட உருவாக்கிய இந்த படைப்பில், குறிப்பிடும்படியாக ஒரு கருநிறத்துப் பெண்ணிற்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை என்ற உண்மை மிகவும் வருத்தம் அளிக்கிறது.
நீங்கள் சொல்லலாம் – “ஓ, இந்த கதை எப்படியிருந்தாலும் உயர் வர்க்கப் பின்னணியை சார்ந்து எடுக்கப் பட்டிருக்கிறது; இதற்குள் கருநிறத்துப் பெண்களை எங்கே காட்டுவது?” என்று.
உண்மை என்னவென்றால் தென்னகத்தில் வர்க்கங்கள், வகுப்புகள், சாதிகள், பொருளாதார சூழ்நிலைகள் தாண்டி எல்லா இடங்களிலும் குடும்பங்களிலும் பெண்கள் பலதரப்பட்ட வடிவங்களிலும் அளவுகளிலும் நிறங்களிலும் இன்றும் இருக்கிறார்கள். They come in all shapes and sizes. கருப்பான பெண் என்றாலே “அவள் இந்த வகுப்பைச் சார்ந்தவள் தான்” என்று அறுதியிட்டு நிறுவ நம்மால் முடியுமா?
சில திரைப்படங்கள் கரிய நிறமுள்ள பெண்களை தங்கள் கதைகளில் கொண்டுவந்தாலும் கூட, அது பெரும்பாலும் திணிக்கப் பட்டது போல் பார்ப்போருக்கு படுகிறது (ஒரு சில படங்களைத் தவிர). உதாரணமாக இயற்கையாக வெள்ளைத்தோல் உடைய நாயகியை திரையில் கருப்பு சாயம் பூசி ‘கருப்பான’ பெண்ணாகக் காட்டுவது, இங்கே ஒரு வாடிக்கையாக இருந்து வருகிறது.
சில நேரங்களில், “உண்மையிலேயே கருத்த நிறமுடைய பெண்களை திரையில் காட்ட இவர்களுக்கு அப்படி என்ன கஷ்டம்?” என்று கூட தோன்றுகிறது.
இதற்கு நிச்சயம் ஒரு எதிர் வாதம் எழும்பும் – “ஓ! போதும். இதற்கு தான் டிமாண்ட் (demand) அதிகம். பார்வையாளர்கள், சினிமா பார்ப்பவர்கள் வெள்ளை வெள்ளேரென்ற ஹீரோயின்களைத் தான் விரும்புகிறார்கள்” என்று.
இது ஒரு எரிச்சலூட்டும் சாக்கு; மீண்டும் மீண்டும் மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.
இதை யார் படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியப் போவதில்லை. ஆனால், ஒருவேளை நீங்கள் கருத்த நிறமுடைய பெண் பார்வையாளராக, குறிப்பாக வளரும் கலைஞராக இருந்தால், இந்த படத்தின் காட்சிகளையோ, வேறு எந்தத் திரைப்படத்தையோ காணும்போது நினைவில் கொள்ளுங்கள்:
நீங்களே இந்தப் படத்தில் இருந்திருக்கலாம், அந்தத் திரையில் இடம்பெற்று இருக்கலாம்; அவ்வாறு நடந்திருந்தால், படம் இன்னும் அழகானதாக, நிஜத்தை ஒட்டியதாக இருந்திருக்கக் கூடும் என்பதை உணருங்கள்.
இனி ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு படைப்பாளியாக நீங்களே உங்களது படைப்பை உருவாக்கும் வேளையில், அதில் உங்கள் இருப்பை, உங்கள் இயல்பு நிறமான கருப்பை, ஆழப் பதிந்து உங்களுடைய அந்த signature வெளிப்பாட்டை பெருமையோடு கொண்டாடுங்கள்.
அது வரை மாற்றத்திற்காக காத்திருப்போம்.
(மேற்காணும் புகைப்படம் ‘புத்தம் புது காலை’ திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது.)
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address