முடிவு எடுக்கும் உரிமை மீட்டெடுப்போம்.

"சுயமாக முடிவெடுப்பது பெண்ணின் உரிமை. 'நாமே முடிவு எடுக்கக் கூடாது!' என்று பேசி ஆணாதிக்க குழியில் விழாதீர்கள்" என்கிறார், ஸ்ரீஜா வெங்கடேஷ்.

“சுயமாக முடிவெடுப்பது பெண்ணின் உரிமை. சில சமயம் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போனாலும் ‘இதுக்குத்தான் நாமே முடிவு எடுக்கக் கூடாது!’ என்று பேசி ஆணாதிக்க குழியில் விழாதீர்கள்” என்கிறார், ஸ்ரீஜா வெங்கடேஷ்.

அன்புத்தோழிகளுக்கு எழுத்தாளர் ஸ்ரீஜாவின் அடுத்த கடிதம்.இந்த வாரம் நான் பேசப்போவது முடிவு எடுக்கும் உரிமை பற்றித்தான்.

பெண்களுக்கு பல விதத்திலும் முடிவு எடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என சில ஆணாதிக்க அமைப்புகள் பேசுகின்றன. அந்த வார்த்தையையே நான் கண்டிக்கிறேன்.

“ஆண்கள் வழங்கித்தான் பெண்களுக்கு உரிமை கிடைக்க வேண்டுமா? நாங்கள் என்ன உங்களிடத்தில் எங்கள் உரிமைகளை அடகு வைத்தோமா? நீங்கள் எங்களுக்குத் தர வேண்டியதில்லை நாங்களே எடுத்துக்கொள்வோம்” என அவர்களுக்கு நம்மால் பதில் சொல்ல முடியும்.

முடிவுகளின் தன்மை

பொதுவாக முடிவுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. வாழ்க்கையை பாதிக்கும் முக்கியமான முடிவுகள்
  2. அன்றாடம் எடுக்க வேண்டிய எளிய வகை முடிவுகள்.

மேற்கூறிய இரண்டில் பெண்கள் பொதுவாகவே இரண்டாவது வகை முடிவுகளை எடுக்கவே கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

அதாவது, “இன்று என்ன சமையல் செய்வது? குழந்தைகளுக்கு என்ன உடை அணிவிக்கலாம்? வீட்டில் அரிசி பருப்பு, காய்கறி முதலியவை எங்கே வாங்கப்பட வேண்டும்?” போன்ற அன்றாடம் எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்க பெண்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

நாமும்,  “ஆஹா! எங்க வீட்டுல நான் வெச்சது தான் சட்டம்” என மகிழ்ந்து போகிறோம்.

சில வீடுகளில் இந்த எளிய முடிவுகளை முடிவுகளைக் கூட ஆண்களே எடுத்து விடுகிறார்கள். எப்படி? அவர்கள் கடைக்குப் போய் காய் வாங்கி வருவதை வைத்தே தான் வீட்டுப் பெண்கள் சமையல் செய்ய வேண்டும்.

கேவலத்திலும் கேவலமாக அன்றாடம் பயன் படுத்த வேண்டிய மளிகைப் பொருட்கள், எண்ணெய் போன்றவை தீர்ந்து போய் விட்டது என்றால் “எப்படி அதுக்குள்ள தீரும்? நீ எல்லாத்தையும் வாரிக்கொட்டி சமைக்குற. அப்படியாவது நல்லா இருக்கா? அதுவும் இல்ல” என்ற வாக்கியங்களை அவமானங்களை சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் சில பெண்கள்.

முக்கியமான முடிவுகள்

இப்போது முக்கியமான முடிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

உதாரணமாக வீடு வாங்குவது என்ற முடிவை எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரு முக்கியமான வாழ்வை பாதிக்கும் ஒரு முடிவு.

எங்கே வாங்குவது? எத்தனை சதுர அடி? பட்ஜெட் என்ன? இது போன்ற விஷயங்கள் பெரும்பாலும் ஆண்களாலேயே முடிவு செய்யப்படுகின்றன. இன்னும் சில ஆண்கள் ஒரு படி மேலே போய், “திருமணமாகும் முன்னரே வீட்டை வாங்கி விட்டேன். என் மனைவி மகாலட்சுமி போல அங்கே வந்தால் மட்டும் போதும்” என்று பெருமை பேசுவார்கள்.

தன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டிய வீடு, எப்படி இருக்க வேண்டும், எங்கே இருக்க வேண்டும், போன்ற எதிர்பார்ப்புகள் பெண்ணுக்கு இருக்காது என்ற ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு தான் இது போன்ற செயல்கள்.

“வீடு வாங்கிட்டேன். உன் இஷ்டத்துக்கு திரைச்சீலைகள் போட்டுக்கோ” என்று தான் பெரும்பாலான ஆண்கள் சொல்லுவார்கள்.
அப்படி, நமது உரிமையின் எல்லை திரைச் சீலை வரை தான் என இவர்களே நிர்ணயித்து விடுகிறார்கள்!

பெண்கள் ஏதாவது யோசனை சொன்னால் கூட “ம்ச்! அதெல்லாம் சரியா வாராது. நீ இதுலே எல்லாம் தலையிடாதே” என்ற வாக்கியம் பெண்களின் வாயை அடைத்து விடுகிறது.

வாழ்க்கைத்துணையைத் தானே முடிவு செய்யும் உரிமை?!

இது ஒரு புறம் என்றால் இதை விடக் கொடுமை தன் வாழ்க்கைத்துணையைத் தானே முடிவு செய்யும் உரிமை கூட இன்னமும் நம் நாட்டில் பல பெண்களுக்கு இல்லை என்ற நிலை.

காதல் திருமணங்கள் அதிகமாக நிகழ்வதாக சொல்லப்படும் இன்றைய கால கட்டத்திலும் கூட இதுவே உண்மையாக இருக்கிறது. காதலானாலும் சரி, பெற்றோர்களாகப் பார்த்து முடிவு செய்யும் திருமணமானாலாலும் சரி, பெண்களுக்கு முடிவு எடுக்கும் உரிமை பெரிதாக இல்லை.

காதலில் கூடவா? என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். ஆம்! என அடித்துக்கூறுவேன். ஒரு ஆண் தான் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறானே அன்றி எங்காவது ஒரு பெண் ஒரு ஆணைத் தன் வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்கிறாளா?

அலுவலகத்தில் அல்லது படிக்கும் இடத்தில் “உன்னைப் பார்த்ததுமே என் மனசுக்குள்ள நீ வந்துட்டே” என்ற வாக்கியத்தைக் கூறாத காதலனைப் பார்க்கவே முடியாது.

பூ கொடுத்து, மயக்கும் வசனங்கள் பேசி, இறந்து போய் விடுவதாக பயமுறுத்தி எப்படியோ பெண்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்து விடுகிறார்கள் ஆண்கள். அந்தப் பெண்ணும், தனக்காக ஒருவன் உயிரையே கொடுக்கத் துணிகிறானே என எண்ணி அகமகிழ்ந்து காதலுக்கு ஓகே சொல்லி விடுகிறாள்.

ஆனால் அதன் பிறகு, அவள் எப்படி உடுத்த வேண்டும்? அவள் யாருடன் பேச வேண்டும்? எப்படி பொது இடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என அனைத்துமே காதலனால் நிர்ணயிக்கப்படுகிறது. காரணம் தன் காதலியின் மேல் அவன் வைத்திக்கும் காதல், ‘பொசஸிவ்னெஸ்’ என்று சொல்லி அவனது செயல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

பெண்களும் இதனை ஒப்புக்கொண்டு அடிபணிகிறார்கள் என்பதை விட அதனை தங்களுடைய அழகுக்குக் கிடைக்கும் ஒரு அங்கீகாரமாக நினைக்கிறார்கள் என்பது தான் வேதனை.

காதலிக்கும் போதே இந்த நிலை என்றால் திருமணமான பிறகு கேட்கவே வேண்டாம். சந்தேகம் என்ற நோய் தாக்கி விட்டாலோ, கள் குடித்த குரங்கை தேள் கொட்டிய கதை தான்.

அந்தப் பெண்ணின் அனைத்து சுதந்திரமும் பறி போய் சிறகிழந்த பறவையாக வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க வேண்டிய கதிக்கு ஆளாகிறாள். சில சினிமாக்களில் இவ்வாறு தன் மனைவியை வீட்டுக்குள் பூட்டி வைப்பதை ஒரு நகைச்சுவை போலக் காண்பித்திருக்கிறார்கள். இது ஆணாதிக்க மனப்பான்மை புரையோடிப்போன சமூக மனநிலையைத்தான் காட்டுகிறது.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்

அடுத்து பெற்றோர்களால் முடித்து வைக்கப்பட்ட திருமணம் பற்றிப் பார்ப்போம். ஆரம்ப முதல் முடிவு வரை ஆணாதிக்கமே கோலோச்சும் இடம் அது. ஒரு ஆண் தன் குடும்பத்தோடு பெண் வீட்டுக்கு வந்து ஒரு காட்சிப் பொருளைப் போல பெண்ணைப் பார்ப்பானாம். அவன் வீட்டினர் கேட்கும் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் அந்தப் பெண் மட்டுமல்ல பெண் வீட்டாரும் ஆட்பட வேண்டுமாம். சகித்துப் போக வேண்டுமாம். இது தவிர வரதட்சிணைப் பேரம் வேறு நடக்கும்.

வரதட்சிணை கொடுத்து பெண் தானே தன் வாழ்க்கைத்துணையை விலைக்கு வாங்குகிறாள்? அப்படியானால் அவள் வைத்தது தானே சட்டமாக இருக்க வேண்டும் புகுந்த வீட்டில்?

இந்த வாதத்தை நாம் முன் வைத்தால், அப்படி அல்ல! பெண் தனது தன்மானத்தை இழக்காமல் வாழ அவளது பெற்றோர் கொடுக்கும் சிறு காணிக்கை தான் வரதட்சிணை என்பார்கள்.

ஒரு வாதத்துக்கு சரி என்றே வைத்துக்கொள்வோம்!  ஒரு பெண்ணை தங்கள் செலவில் கணவனால் வாழ வைக்க முடியாதா என்ன? பெண்ணைப் பெற்றோர் கொடுக்கும் பணத்தில் தான் அவள் வாழ வேண்டுமா என்ன? பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு பெண்ணைச் சேரும் ஆண்களை என்னவென்று அழைப்பது?
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

“அவருக்கென்ன குறைச்சல்?”

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையைக் குறித்த உண்மையான அபிப்பிராயத்தைச் சொல்லக் கூட பல பெண்களுக்கு உரிமை இருப்பதில்லை.

“அவருக்கென்ன குறைச்சல்? ராஜா மாதிரி இருக்காரு. கை நிறைய சம்பாதிக்குறாரு, வீடு இருக்கு. அப்புறம் என்ன?” என்ற கேள்வியில் பெண்ணின் மன உணர்வுகளை, ரசனைகளைக் கொச்சைப் படுத்தி விடுவார்கள்.

வெறும் சம்பாத்தியமும், வீடுமா வாழ்க்கை? அந்த நபர் தனக்கு ஏற்றவன் தானா? தன்னை மதிப்பானா? வாழ்வியல் ரசனைகள் ஒத்துப் போகின்றதா? பெண்களை மதிப்பானா? விருப்புகள் என்ன? வெறுப்புகள் என்ன?

இது எதைப்பற்றியும் கவலைப் படாமல் ஒரு மணி நேரமே தெரிந்த ஒருவனுக்குக் கழுத்தை நீட்டச் சொல்லிக் கட்டாயபடுத்தப் படுகிறார்கள் பெணக்ள்.
“கொஞ்சம் கோவக்காரர் போல. அதனால என்ன? கோவம் இருக்குற இடத்துல தான் குணமும் இருக்கும். இவ கொஞ்சம் ‘அட்ஜஸ்ட்’ செஞ்சு போயிட்டான்னா அவர் ஏன் கோபப்பட போறாரு?” என்று வாதம் செய்வார்கள்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் வாழும் ஆணாதிக்கத்தைத் தெள்ளத் தெளிவாகக் காட்டும் கண்ணாடி இந்த வாக்கியம்.

“ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்” எனும் சமூகத்தில்…

‘ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவனுக்குக் கோபம் வராமல், எரிச்சல் வராமல் பார்த்து நடந்து கொள்ள வேண்டியது பெண்ணின் கடமை’ என்பது தான் இதன் உள்ளீடாக இருக்கும் அர்த்தம். இப்படித்தான் பல குடும்பங்களில் பெண்கள் செதுக்கப்படுகிறார்கள்.

அதை மீறி சுயமாக சிந்தித்து முடிவெடுத்தால் சமூகம் அவளை ‘திமிர் பிடித்தவள்’, ‘அகங்காரி’ என பலவாறாகப் பேசும் விமர்சிக்கும். அவளது ஒழுக்கம் பொது வெளியில் பேசப்படும் ஒரு பொருளாக மாறும்.

இவற்றையெல்லாம் தான் நாம் வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எப்படிச் செய்யலாம் இதை?

பெண்கள் ஒன்றிணைவோம்!

பெண்கள் இணைந்தால் முடியாதது எதுவுமே இல்லை! சுயமாக ஒரு பெண் முடிவெடுத்தால் மற்ற பெண்கள் அதனைப் பாராட்டி அவளுக்குத் துணை நிற்க வேண்டும்.

சில சமயங்களில் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகவும் வாய்ப்புக்கள் உண்டு. அது போன்ற தருணங்களில் பெற்றோர் குறிப்பாக தாய், தோழிகள் அவளுக்கு தோள் கொடுத்து நம்பிக்கை அளித்து பேச வேண்டுமே அன்றி “இதுக்குத்தான் நாமே முடிவு எடுக்கக் கூடாதுன்னு சொல்றது! அந்தக் காலத்துல பெரியவுங்க சும்மாவா சொன்னாங்க” என்று பேசுவது மீண்டும் மீண்டும் ஆணாதிக்கப்படுகுழியில் பெண்ணைத் தள்ளுவதற்குச் சமம்.
அதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

ஆண்கள் எடுக்கும் முடிவுகள் தவறாகப் போவதில்லையா?
அப்படிப் போகும் போது பெண்கள் அவனுக்குத் துணை நின்று ஆறுதல் சொல்கிறார்களே அன்றி “உனக்கு முடிவெடுக்கும் திறமை இல்லை”, என்றா சொல்லிக் காட்டுகிறார்கள்?

இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். தெளிவான சிந்தனை, நான் பெண் என்ற பெருமிதம், இந்த உலகத்தின் சக்தி என்ற கர்வம் இவை ஒவ்வொரு பெண்ணும் அவசியம். இந்த உணர்வுகளை இழக்காமல் பெண்ணுக்குப் பெண் உதவி செய்தால் நம்மால் ஆணாதிக்க மனப்பான்மையை விரட்டியடிக்க முடியும்.

ஆகையால், தோழிகளே, எந்த வகையான முடிவுகளாக இருந்தாலும் சரி! நாமே எடுப்போம். கலந்தாலோசிப்பது, கருத்து கேட்பது எல்லாமே நல்லது தான். ஆனால் இறுதி முடிவு நம்முடையதாகவே இருக்கட்டும்.

தவறோ சரியோ! நம் முடிவுகளை நாமே எடுக்கும் உரிமையை நிலை நிறுத்துவோம்.

பட ஆதாரம்: ‘ஜாக்பாட்’ திரைப்படம்

About the Author

4 Posts | 8,431 Views
All Categories