Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
பெண் படித்து வேலைக்கு போகும் கால கட்டத்தில் 'பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தான் இருக்கிறதே' என நினைக்கலாம். ஆனால் உண்மை நிலை என்ன?
பெண்களும் படித்து வேலைக்கு போகும் கால கட்டத்தில் ‘பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தான் இருக்கிறதே’ என நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை நிலை என்ன?
வாசகர்களுக்கு எழுத்தாளர் ஸ்ரீஜாவின் வணக்கங்கள். சென்ற முறை ஆணாதிக்க மனப்பான்மை பற்றியும் பெண்களின் மனநிலை மீது அதன் தாக்கத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன்.
இம்முறை பெண்களின் பொருளாதார சுதந்திரத்தைப் பற்றி எழுதி இருக்கிறேன். நம் நாட்டில், இப்போது ஓரளவுக்கு பெண்கள் நன்கு படித்து வேலைக்கு போகும் இந்த கால கட்டத்தில் ‘பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தான் இருக்கிறதே’ என நம்மில் பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை நிலை என்ன?
மிகப்பெரிய படிப்புகள் படித்து கார்ப்பரேட்களில் வேலை செய்யும் பெண்களானாலும் சரி, சாதாரணமான வேலையில் இருக்கும் பெண்களானாலும் சரி, பொருளாதார சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறதா எனக் கேட்டால், இல்லை என்ற பதில் தான் முகத்தில் அடிக்கிறது.
முதலில் பொருளாதார சுதந்திரம் என்றால் என்ன? என்று பார்ப்போம்.
மேற்கூறிய நான்குமே பொருளாதார சுதந்திரத்திற்கான ஆதாரமான அளவு கோல்கள்.
பெண் சம்பளம் வாங்கியவுடன் அதனை தன் கணவனிடமோ அல்லது தகப்பனிடமோ அப்படியே ஒப்படைக்கும் பெண்கள் இன்னமும் இருக்கிறார்கள். பெண்களுக்கு, தனது வருமானத்தைக் கொடுத்து விட்டு அன்றாடச் செலவுகளுக்கு அவர்களிடம் கையேந்தி நிற்பது ஒரு வழக்கமாகவே மாறி விட்டது.
இதில் அடிப்படையாகவே ‘தனது பொருளாதார சுதந்திரம் பறி போகிறதே’ என்ற எண்ணமே இது வரையில் பல பெண்களுக்குத் தோன்றவில்லை என்றால் பெண்களின் மனதில் ஆணாதிக்கத்தை எப்படி விதைத்திருக்கிறார்கள் என நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு தனது பிறந்த வீட்டுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என நினைப்பதே பாவம் என்ற மனநிலை நிலவுகிறது. ஆனால் ஒரு ஆணுக்கு அதற்கான உரிமை என்றும் உண்டு என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. ஏன் இந்த பாரபட்சம்?
ஆணைப் பெற்றவர்கள் மட்டும் தான் மனிதர்களா? பெண்ணைப் பெற்றவர்கள் மனிதர்கள் இல்லையா? தங்கள் தேவைக்கு தான் பெற்ற பெண்ணிடம் பொருளாதார உதவி பெறுவது பாவமா?
இன்னமும் மகள் வீட்டுக்கு வருவதையோ, உண்பதையோ தவிர்த்துவிடும் எத்தனையோ பெற்றோர் இருக்கிறார்கள். ஏன் இந்த மனநிலை?
யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமில்லை – ஆனால் கேள்வி தவிர்க்க முடியாதது: ஆணைப் பெற்றவர்கள் தான் வலிக்கப் பெற்றார்களா? பெண்ணைப் பெற்றவர்கள் என்ன இளித்த வாயர்களா?
ஒரு பெண் தன் வருமானத்தைத் தன் பெற்றோருக்குக் கொடுப்பது என்பது நகைப்புக்கும், கேலிக்கும் விவாதத்துக்கு உண்டான விஷயமாக இருக்கிறது என்பதிலிருந்து நம் மனங்களில் ஆணாதிக்கம் அவ்வளவு தூரம் தன் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
சில வீடுகளில் தனது வருமானத்தை ஓரளவு தானே செலவழித்துக்கொள்ளும் உரிமை பெண்களுக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
அப்படி இருந்தாலும் அதை ‘எதற்கு செலவழித்தார்கள்? எப்படிச் செலவழித்தார்கள்?’ என்ற கணக்கை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும்.
ஆனால் இதையே ஒரு ஆண்மகன் செய்தால் அவர்கள் தன் மனைவிக்கோ தாய்க்கோ கணக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் சிலர் பெண்கள் அனாவசியமாகச் செலவு செய்வதாகப் புகார் வேறு கூறுகிறார்கள்.
பல வீடுகளிலும் மனைவி/மகள் சம்பளம் வங்கிக்கணக்கிலிருந்து அப்படியே கணவனுக்கோ/தகப்பனுக்கோ அப்படியே போய் விடும். அவர்களது டெபிட் கார்டுகளைக் கூட தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் ஆண்கள்.
அலுவலகத்தில் ஏதாவது எதிர்பாராத செலவு வந்தால் ஆயிரம் முறை விளக்கம் கேட்டு கேட்கும் பணம் அளிக்கப்படும் அல்லது நிரகாரிக்கப்படும். இதில் கொடுமை என்னவென்றால் படித்த பெண்களும் கூட இதனை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்வது தான்.
வருமானம் முழுவதையும் அப்படியே செலவு செய்ய வேண்டுமா? சேமிப்பே கூடாதா? என சிலர் கேட்கலாம். கட்டாயம் சேமிப்பு வேண்டும்.
ஆனால் அது எந்த வகை சேமிப்பு? எத்தனை ஆண்டுகள் சேமிப்பு? அந்த சேமிப்பை எதற்குப் பயன்படுத்த வேண்டும்? என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
கணவருடன்/தகப்பனுடன் கலந்தாலோசிக்கலாமே அன்றி அவர்களது சொல்லே முடிவு அல்ல என்பதைத்தான் சொல்கிறேன்.
ஒரு சில பெண்களுக்கு பொருளாதார விவகாரத்தில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் கூட மனைவியின்/மகளின் வருமானத்தை இப்படிச் செலவு செய்கிறேன் அல்லது இப்படி சேமிக்கிறேன் என்று கட்டாயம் கணவன்/தந்தை சொல்லத்தான் வேணும். ஆனால் அப்படி நடப்பதில்லை.
சில பெண்களின் இந்த ஆர்வமின்மையை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக்கொள்கிறார்கள் ஆண்கள். “அவளுக்கு ஒண்ணுமே தெரியாது” என்ற வாக்கியம் சர்வ சாதாரணமாகப் பிரயோகிப்படுகிறது.
அப்படி ஒன்றும் தெரியாமல் ஒரு பெண்ணை வைத்திருப்பது யாருடைய குற்றம்?
இவற்றையெல்லாம் நாம் நன்கு யோசிக்க வேண்டும்.
இன்றைய தகவல் தொழில் நுட்ப காலத்தில் ஆண்களுக்கு என்னென்ன தகவல்கள் கிடைக்குமோ, அத்தனை தகவல்களும் பெண்களுக்கும் கிடைக்கும். அதனைக் கொண்டு ‘சிறந்த சேமிப்பு எது? எதில் முதலீடு செய்ய வேண்டும்’ என முடிவு செய்ய நம்மால் முடியாதா?
ஆனாலும் ஏன் இன்னமும் நாம் பொருளாதார சுதந்திரம் அடையவில்லை? என யோசித்தால் வரும் விடை நமது குடும்பச் சூழல். பெண்களை வேலை செய்யும் இயந்திரமாக, பிள்ளை பெறும் இயந்திரமாக மட்டுமே பார்க்கும் நமது பாரம்பரியமான ஆணாதிக்கக் கண்ணோட்டம்.
இதனைத்தான் நாம் மாற்றியே ஆக வேண்டும். அது நம் கையில் தான் இருக்கிறது.
பொருளாதாரச் சுதந்திரம் நாம் அடைவது அத்தனை எளிது அல்ல. ஏனெனில் நம்மை பொருளாதார அடிமைகளாக வைத்திருக்கும் வரையில் தான் ஆண்களின் ஆதிக்கத்துக்கு நாம் அடிபணிந்து இருப்போம். ஆகையால் நம்மை பொருளாதார சுதந்திரத்தோடு இருக்க விட அவர்கள் தயங்குவார்கள். ஆனால் அது நமது பிறப்புரிமை. அதை நாம் அடைவது நம் கைகளில் தான் இருக்கிறது.
தெளிவான சிந்தனை, திறந்த கண்ணோட்டம் இவைகள் இருந்தால் போதும் பொருளாதார சுதந்திரத்தை நாம் கையில் எடுத்துக்கொள்ள இயலும். கட்டாயம் செய்வோம் தோழிகளே!
இப்படிக்கு உங்கள் அன்புத்தோழி, ஸ்ரீஜா வெங்கடேஷ்
பட ஆதாரம்: ‘ரிதம்’ திரைப்படம்
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address