எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: குழைந்து போகும் பெண்ணைப் பெற்றோர்

பெரும்பாலும், பெண்ணைப் பெற்றோர் மகளை கல்யாணம் கட்டிக் கொடுத்த பின் பையன் வீட்டார் முன் கம்பீரம் குழைந்து, பணிந்து போவது ஏன்?

பெண்ணைப் பெற்ற பெரும்பாலான பெற்றோர், மகளை கல்யாணம் கட்டிக் கொடுத்த பின், பையன் வீட்டார் முன் கம்பீரம் குழைந்து போவது ஏன்?

அசுரன் படத்தில் ஒரு காட்சி வரும். ஊரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேர் கால்களிலும் விழுந்தால் தான் சிவசாமி (தனுஷ்) உடைய மகனை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்க முடியும் என்ற நிபந்தனை ஒன்றை இடுவார்கள். அதன்படி சிவசாமி வீடு வீடாய் போய் வாசலில் வைத்து ஊர் பார்க்க அனைவரின் கால்களிலும் விழுந்து மகனை மீட்டுக்கொண்டு வருவார்.

அப்புறம் இடைவேளை தாண்டி ஃப்ளாஷ்பேக் வரும்: வாலிபத்தில் வீரமும் வீராப்புமாக இருந்த சிவசாமி, தன் குடும்பத்திற்காக ஒடுங்கி, இப்படி மாறிப்போனார் என்று புரிய வரும். மீண்டும் கிளைமாக்ஸ் காட்சியில் கையில் ஆயுதம் எடுத்து விடுவார் – அது வேற கதை. இப்போது நம் கதைக்கு வருவோம்.

எவ்வளவு ‘கெத்து’ இருந்திருந்தாலும், பெண்ணைப் பெற்றால்…

சிவசாமிக்கும் பெண்ணைப் பெற்ற அத்தனை பேருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை பற்றி தான் பேசப் போகிறோம். அதற்கு முன் எப்படி, எவ்வளவு ‘கெத்து’ இருந்திருந்தாலும், பெண்ணைப் பெற்ற பெரும்பாலான பெற்றோர், மகளை கல்யாணம் கட்டிக் கொடுத்த பின் சற்று குழைந்து தான் போகிறார்கள். தென்னை மரம் போல், ஆலமரம் போல் நிமிர்ந்தும் கம்பீரமாய் வியாபித்தும் இருப்பவர்களின் நடையும் பாவனையும் பையனைப் பெற்றவர்கள் முன் நாணலாய் போய்விடுகிறது.

“இதற்கு ஏன் அசுரன் தனுஷ் பட்ட பாட்டை சொல்கிறீர்கள்? அது வேற மாதிரி பிரச்சனை, நீங்கள் பேசுவது வேற டிபார்ட்மென்ட்” என்று கேட்கிறீர்களா?

பேதம் என்று வந்துவிட்டால், ஆதிக்கம், ஒடுக்குதல் என்று வந்து விட்டால், எல்லாத்துக்கும் அதே விதிகள் தான். சாதி பேதமோ, இன பேதமோ, பாலின பேதமோ – பேதம் பேதம் தான். பாதிப்பு பாதிப்பு தான். “எனக்கு வந்தால் இரத்தம், உனக்கு வந்தால் தக்காளி சட்னி” கதை எல்லாம் இதில் செல்லாது.

பெண்ணைப் பெற்றவரின் குழைவு

எத்தனையோ வகையான பேதம் நம் சமுதாயத்தில் இருக்கும்போதும், மேலைத் தெரு, கீழைத் தெரு என்று அத்தனை வீடுகளிலும், எல்லா ஊர்களிலும், சமூக அடுக்குகளின் வழி நெடுக, பெண்ணை கட்டிக் கொடுத்தால் வரும் இந்த குழைவு பொதுவான ஒன்றாக அமைந்து விட்டது.

“போற இடத்துல பொண்ணு நல்லா வாழணுமே” என்ற வலையில் விழுந்த மீன்களாய் பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கும் வரை ஒரு வகை பீதியிலும், நடந்த பின் வேறு வகை பீதியிலுமாக வாழ்வை கழிக்கின்றனர்.

நிச்சயமாக இதற்கு விலக்கானவர்கள் இருக்கிறார்கள் – என்றுமே இருந்திருக்கிறார்கள். ஆணை பெற்று விட்டாலே பெரும் சாதனையாக எண்ணிக் கொள்ளாத, வீட்டிற்கு வரும் பெண்ணை அன்பாய் அணைத்துச் செல்லும் மாமியார் மாமனார்கள் இருக்கிறார்கள். மனைவிக்கான மரியாதையை, மனைவியை பெற்றவர்களை தன்னை பெற்றவராய் மதிக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். நான் கண்டதுண்டு. என்னைக் கேட்டால் இது போன்றவர்களும் இன்றளவும் மழை பொய்க்காமல் பெய்வதற்கு காரணம் என்பேன்.

ஆனால், பெரும்பாலானோர் வீட்டுக்கு வாழ வந்த பெண்ணை, அவளை பெற்றவர்களை இரண்டாம் ரக சிட்டிசன்களை போல் தான் நடத்துகிறார்கள்.

இது குழந்தை ஆணாக பிறக்கும் நொடியில் இருந்தே தொடங்கும் கூத்து.

ஒரு கதை சொல்லட்டா (கதை அல்ல நிஜம்!)

நான் நேரில் கண்ட ஒரு சம்பவம் இது. எனக்கு தெரிந்த பெண் ஒருவர், வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டு அம்மாளும் அந்தப் பெண்ணும் பேசிக் கொண்டே அவரவர் வீட்டுத் துணிகளைத் துவைத்து கொண்டிருந்தனர்.

அந்தப் பெண் கைகளில் அரை டஜன் தங்க வளையல்களை அணிந்தபடியே துணியை கல்லில் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்ததை கவனித்த பக்கத்து வீட்டு அம்மாள், “ஏன் அம்மா கைகளில் புது வளையலை போட்டுக் கொண்டு துவைக்கிறாய்? நெளிந்து விடப் போகிறதம்மா” என்றார்.

அதற்கு சட்டென்று அந்தப் பெண், “நெளிந்தால் நெளியட்டுமே. நான் என்ன பெண் பிள்ளையா பெற்று வைத்திருக்கிறேன் மகளுக்காக என் நகைகளைப் பொத்தி வைத்து பாதுகாக்க? நெளிந்தால் புது வளையல் வாங்க என் மகன்கள் இருவர் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் வரும் மருமகளிடம் வாங்கிப் போட்டுக்க வேண்டியது தான்” என்றாரே பார்ப்போம்!
அவரது மகன்களுக்கு முறையே பத்து மற்றும் எட்டு வயது ஆகிறது.

‘இது தான் வருங்காலத்திலும் தொடருமோ’ என்று எனக்கொரு பீதி ட்ரெய்லரை ஓட்டிக் காட்டிவிட்டார் அந்தப் பெண் – நானும் பெண்ணைப் பெற்றவள் அல்லவா!

நாமும் எவ்வளவு நாட்கள் தான் வலிக்காத மாதிரியே நடிப்பது?

இப்படி சிந்துபாத் கன்னித்தீவு கதை மாதிரி, ‘விடாது கருப்பு’ மாதிரி எவ்வளவு நாட்கள் தான் நாம் இந்த வட்டத்துக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்க போகிறோம்?

மகளாக தன் பெற்றோர் அனுபவித்ததை பார்த்து மருகும் பெண்கள், ஏன் பையனை பெற்றதும் இன்னொரு பெண்ணுக்கு, அவளை பெற்றோருக்கு, அதே தர்மசங்கடத்தை நீட்டிக்க வேண்டும்? தெரிந்தோ தெரியாமலோ, ஆணாதிக்கத்தை பல்லக்கில் தூக்கிச் சென்று ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு அனுப்பி வைப்பதில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.

கோவிட் தடுப்பூசி போல் இதைத் தடுக்க வழி மனமாற்றம் தான். ‘நான் பையனை பெற்றவள்’ என்ற கர்வம் குறைந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும். எல்லாம் பெண்ணுக்கு பெண் துணை நிற்பதில் தொடங்குகிறது. நம்புவோம்.

பட ஆதாரம்: ‘ஜீன்ஸ்’ திரைப்படம்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,757 Views
All Categories