பெண்ணாக பிறந்தது பெருமையா, இல்லை கொடுமையா?

'பெண்ணாக பிறந்தது பெருமையா, இல்லை கொடுமையா' என்ற கேள்விக்கு நம் வாசகர்கள் சொல்வது என்ன?

சமீபத்தில், ‘பெண்ணாக பிறந்தது பெருமையா, இல்லை கொடுமையா?’ என்ற கேள்வியை நமது விமென்ஸ் வெப் தமிழ் வாசகர்களுக்கு முன் வைத்தோம். அவர்கள் சொன்னது என்ன? மேற்கொண்டு வாசித்து பாருங்கள்!

விமென்ஸ் வெப் வலைத்தளம் என்றுமே வாசகர் பின்னூட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய களமாகவே இருந்து வருகிறது. வாசகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ளும் பேராவலில், சில நாட்களுக்கு முன் ‘பெண்ணாக பிறப்பது பெருமையா, இல்லை கொடுமையா?’ என்ற கேள்வியை நமது விமென்ஸ் வெப் தமிழ் வாசகர்களுக்கு முன் வைத்தோம்.

இந்த கேள்விக்கு விடையளித்த அனைவரும் பெண்களே. அவர்கள் அளித்த, வெளிப்படையான, சிந்திக்கத் தூண்டும் பதில்களை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

பெண்ணாக பிறந்தது பெருமையே!

பதிலளித்தவர்களுள் 36 சதவிகிதம் பேர் பெண்ணாக பிறந்ததில் மிகவும் பெருமையே என்று கூறியுள்ளனர்.

“பெருமை தான். அதிலும் பாரதி கண்ட புதுமை பெண் என்பதில் தனி கர்வம்” என்று ஒரு வாசகி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

“மங்கையாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் மற்றொருவர்.

“நல்ல மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக இருந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். மொத்தத்தில் பெண்ணாக இருப்பதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்” என்று தனது ஒவ்வொரு பரிமாணத்தையும் உணர்ந்து, மகிழ்ந்து பதிவிட்டுள்ளார், நமது மூத்த வாசகியரில் ஒருவர்.

சந்தேகமே வேண்டாம்…கொடுமை தான்!

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்ன என்றால் கருத்தளிப்பில் பங்கேற்ற இன்னொரு 36 சதவிகிதம் பேர், பெண்ணாக பிறந்தது கொடுமையே என்று பதிவிட்டு இருப்பது தான்.

“ஆயிரம் பெண் சுதந்திர போராட்டம் நடந்தாலும் பெண்களுக்கு இன்னும் கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சீக்கிரம் கல்யாணம்; குழந்தை இல்லை என்றால் மலடி. ‘பெண் குழந்தையை ஈன்று விட்டால் தரித்திரம்‘ என்று இன்னும் பல கிராமங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது. பெண் சிசுக் கொலைகளுக்கு மாற்றாக இன்று பெண் சிசுக்களை கூட பலாத்காரம் செய்யும் உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை நாம் மறுக்க முடியுமா?” என்று சாட்டை வீசிச் சாடியுள்ளார் ஒரு வாசகி.

இதில் வேதனையும் அளிக்கும் விஷயம் என்ன என்றால், அவர் சொன்னதில் ஒன்று கூட பொய் இல்லை என்பது தான்.

இதை ஆமோதிக்கும் மற்றொரு வாசகி கூறியுள்ளதும் மறுக்க முடியாததே:
“பெண்ணாக பிறந்தது கொடுமை தான். எங்காவது தனியாக வெளியில் சென்றால், எதேச்சையாக யாராவது நம் பின்னால் வந்தால் கூட பயம் வந்து விடுகிறது. ‘ஏதாவது பண்ணி விடுவார்களோ? செயின் எதையாவது பிடுங்கி விடுவார்களோ?’ என்று உள்ளுக்குள் பதறுகிறது. ஒரு ஆணுக்கு இந்த பயம் இருப்பதாக நான் அறிந்ததில்லை. பெண்ணாக நான் பயப்படாமல் இருக்க வேண்டும் என்று உள்ளார்ந்து நினைத்து தைரியத்துடன் இருந்தாலும், நம்மை சுற்றி நடப்பவை, கேள்விப்படும் செய்திகள் எல்லாம் மீண்டும் அச்சத்தையே அளிக்கின்றன…இதில் எங்கே பெருமை கொள்வது?” என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

மணவாழ்க்கை தான் முடிவு செய்யும்

இந்த இரண்டிலும் சேராத இன்னொரு சாரார், “பெண் பெருமை அடைவதும் கொடுமை என்று சொல்வதும், அவளுக்கு அமையும் கணவனையும் அவர்களது மணவாழ்க்கையையும் பொறுத்தே அமைகிறது” என்று கூறியுள்ளதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

இன்றளவும் பெண்ணின் அடையாளம், திருமணத்தை, நல்ல மனைவியாக இருப்பதை பொறுத்தே அமைகிறது; கணவன் அனுமதித்தால், சம்மதித்தால் தான் பெண்ணுக்கான எந்த முன்னேற்றமும் சாத்தியம் என்ற பெரும்பான்மையை பறைசாற்றுகிறது இந்த வகை கருத்துகள்.

இந்தக் கோணத்தில், திருமணமே வேண்டாம் என்று தனித்து வாழும் பெண்கள், விவாகரத்து ஆகி தனியே வாழும் பெண்களின் அடையாளம் என்ன என்றொரு புதுக் கேள்வியும் எழவே செய்கிறது.

மேலும், பெண்களின் படிப்பையோ, தனித்திறமையையோ, அவர்கள் பார்க்கும் வேலையையோ நிர்வகிக்கும் பிஸினஸையோ ஒரு தகுதியாக, அடையாளமாக, அளவுகோலாக ஏன் பார்ப்பதில்லை என்றும் கேட்கத் தோன்றுகிறது.

நடுநிலை நோக்கு

“ஆணாதிக்கம் உள்ள இடத்தில் கொடுமை; பெண் சுதந்திரம் இருக்குமிடத்தில் பெருமை”, என்று எந்தக் கட்சியிலும் சேராமல் மையமாக நின்று அருமையாக நிதர்சனம் பகன்றுள்ளார் வாசகச் சகோதரி ஒருவர்.

“கொடுமையான பெருமை” என்று கருத்துக்குள் ஒரு குட்டி ஹைக்கூ வைத்திருக்கிறார் மற்றொரு வாசகி!

“கொடுமை பெருமை இரண்டும் இல்லை. மனித பிறப்பு அனைத்தும் சமம்; இதை மனதில் வைத்தால் வாழ்வே இனிமை” என்ற ஆழமிக்க கருத்தினை பதிவு செய்து, பெண்ணியத்தின் ஆணிவேரான பாலிடை நிகர்மை அருமையாக கோடிட்டு காட்டியுள்ளார் ஒரு வாசகி.

ஆக மொத்தம், பெண்ணாக பிறந்தது பெருமையோ கொடுமையோ, நிச்சயம் பெண்ணாக பிறந்த நம் வாசகிகள் அனைவரும் அனுபவ அறிவும், மனதில் பட்டதை உள்ளபடி சொல்லும் குணமும் நிறைந்தவர்கள் என்பது மட்டும் ஐயமின்றி நிரூபணம் ஆகிறது!

(தலையங்கப் புகைப்படம் ‘இருவர்’ திரைப்படத்திலிருந்து எடுக்கப் பட்டது.)

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 61,833 Views
All Categories