Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
"போலி சாமியார்கள் அளிக்கும் நம்பிக்கை வார்த்தைகள் எல்லாம் பணத்திற்காக என்று புரிந்து கொண்டு சிக்காமல் இருப்பது நல்லது" என்கிறார், வாசகி ரம்யா.
“‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று போலி சாமியார்கள் கூறும் வார்த்தைகள், பணத்திற்காக என்று புரிந்து கொண்டு, மூட நம்பிக்கையில் சிக்காமல் இருப்பது நல்லது” என்று எழுதுகிறார், நம் வாசகி ரம்யா.
“அச்சோ! எனக்கு என்ன பண்றதுனே புரியல அம்மா!”“இங்கே பாரு செல்லம், என்ன பிரச்சனையா இருந்தாலும் சரி, கடவுள் கிட்ட சொல்லு. வேணும்னா ஒரு எட்டு கோவிலுக்கு போயிட்டு வா”
இந்த வாக்கியங்கள் கடவுள் நம்பிக்கை உள்ள அனைவரது வீட்டிலும் கேட்கக் கூடிய ஒன்று தான். அன்றாட வாழ்க்கையில் நடக்க கூடிய சகஜமான ஒரு உரையாடல். பிரச்சனை என்பது ஏதோ ஒரு ரூபத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பது தான் இதற்கு காரணம்.
‘உண்மை தான். ஆனால் அதனால் என்ன?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
சில நாட்களுக்கு முன்பாக பெண்களை சாட்டை மற்றும் கம்பால் அடித்த நாமக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கனுரில் உள்ள கருப்பசாமி கோயிலில் பூசாரியாக இருந்த அனில் குமார் எனும் போலி சாமியாரை வேலகவுண்டம்பட்டி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
‘அப்பாடா! நல்ல வேளை, அவன் அகப்படுகொண்டான் ‘ என்று மனம் நிம்மதி அடைகின்ற போதிலும், ‘ஏன் பெண்கள் போலி சாமியார்களை நம்பி செல்கின்றனர்?’ என்கிற கேள்வியும் உடன் எழுகிறது.
பிரச்சனைகள் நம்மை அக்னி நட்சத்திர வெயில் காலம் போல் வாட்டி வதைக்கும் போது நம் மனம் நாடுவது தீர்வு மட்டுமே.
‘ஆனால் அந்த தீர்வு எங்கே உள்ளது? கண்களுக்கு புலப்படவில்லையே?’ என்று மனம் உழலும் தருணங்களில், பிரச்சனை சரி ஆகிறதோ இல்லையோ, ‘சரி ஆகிவிடும்’ என்ற நம்பிக்கையான வார்த்தைகள், கோடை காலத்தில் அருந்தும் இளநீர் போல் சற்றே மனதை குளிர வைக்கவே செய்கிறது.
இந்த ஆறுதல் யாரிடம் இருந்து வருகிறது?
நல்ல வாழ்க்கைத்துணை அமைந்திருந்தால், பெண்கள் பொதுவாக இந்த ஆறுதலை எதிர்பார்ப்பது கணவனிடம் தான். ஆனால் சில நேரங்களில் பிரச்சனையே கணவனோடு இருந்தால்?
அடுத்த நபர் நம் தாய். நம்மை ஈன்ற பொழுதில் இருந்து நம்மை நன்கு அறிந்தவர். ஆனால் சராசரி இந்தியப் பெண்ணின் மனசாட்சி என்ன சொல்லும்?
‘வேண்டாம், பாவம் அம்மா. தேவை இல்லாமல் அவரும் கவலைப் படுவார்; அவருக்கு கஷ்டம் கொடுக்க கூடாது.’
அடுத்தது, உடன் பிறந்தவர்கள். அவர்களிடமும் ஏதோ ஒருமுறை இருமுறை என்றால் பரவாயில்லை. எப்போதுமே புலம்பிக்கொண்டே இருந்தால், அதன் பிறகு நாம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டால் கூட பயந்து ஓடிவிட்டால்? அவர்களுக்கும் அவரவர் வாழ்க்கை, ஏற்றத்தாழ்வு என்று இருக்கும் தானே?
இவர்கள் அனைவருக்கும் அப்பாற்பட்ட ஓர் உறவு தான் தோழி.
உண்மை தான். நம் தாயிடம், சகோதர சகோதரியிடம் சொல்ல முடியாத பிரச்சனைகளைக் கூட நாம் நம் தோழியிடம் மனம்திறந்து பகிரலாம்.
தோழியிடம் சொல்லியும் மனம் ஆறுதல் அடையவில்லை என்றால், கடவுள் நம்பிக்கை உள்ள பல பெண்கள் செல்வது கோவில்களுக்கு தான்.
‘ஆனால் அது ஒரு வழி தொடர்பாக இருக்கின்றதே! நாம் சொல்வது கடவுளுக்கு கேட்கிறது, அதற்கு பதில் வரவில்லையே?’ என்று மனதிற்குள் கேள்வி எழும்.
இது போன்ற சூழலில் தான், ‘ஏதாவது வழி பிறக்காதா?’ என்று துன்பமுற்று நிற்கும் பெண்களின் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகிறார்கள், இந்தப் போலி சாமியார்கள்.
‘பிரச்சனைகளுக்கு இது தான் தீர்வு’ என்று ஏதோ ஒரு பதிலும் நம்பிக்கையும் கிடைக்கிறது. ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று போலி சாமியார்கள் கூறும் வார்த்தைகள் பணத்திற்காக செய்யும் வேலை என்று இந்தப் பெண்களுக்கு தெரியாமல் போவது தான் வேதனையான விஷயமாக உள்ளது.
இந்த கொஞ்சம் நம்பிக்கைக்குள் ஒளிந்திருக்கும் பெரிய பிரச்சனை, அந்தப் பெண்களுக்கு தெரிவதே இல்லை. இதற்கு தீர்வு தான் என்ன?
நம்மால் இயன்ற அளவில், நம்மைச் சுற்றி உள்ள பெண்களுக்கு நாம் எவ்வகையிலேனும் உதவ முடியுமா?
இந்த லாக்டவுன் சூழலில் இல்லையென்றாலும், பொதுவாக நாம் நமது அன்றாட வாழ்வில் சில பெண்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. பூ வாங்கும் போது, காய்கறிகள் வாங்கும் போது, ஏன் நம் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் என்று நமது வாழ்வில் நாம் சந்திக்கும் பெண்கள் இருக்கிறார்கள்.
அவர்களிடம் ஸ்நேகமாக நட்பு பாராட்டலாமே. அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கலாமே. நாட்கள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில், பரஸ்பர நம்பிக்கை வளர்ந்து, அவர்களும் நம்மிடம் தைரியமாக தங்களது பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுவார்கள்.
அப்போது நாம் தோழமையுடன் அவர்களது பிரச்சனையை காது கொடுத்து கேட்டு, அவர்களுக்கு நாம் இருக்கிறோம், என்ற நம்பிக்கையை உண்டாக்க முயல்வோம்.
இதிலும் கவனமாக இருக்க வேண்டும். ‘இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒன்று தானே, இதற்கு போய் நீ கண் கலங்கலாமா?’ என்று அவர்களிடம் சொல்லாமல் இருக்க வேண்டும். ஒரே பிரச்சனையாக இருந்தாலும், ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் பிரச்சனையை அணுகும் போது சிலருக்கு அது சாதாரணமாகவும், ஒரு சிலருக்கு அது மிகப் பெரிய கஷ்டமாகவும் தோன்றும்.
‘எல்லாம் நன்மைக்கே’ என்று இந்த நிலையில் கூறுவது ‘டாக்சிக் பாசிட்டிவிட்டி’யின் வெளிப்பாடாக அவர்களை மேலும் தாக்கக் கூடும் என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.
நம்மிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்பவர்களுக்கு நாம் தீர்வோ, அறிவுரையோ அளிப்பதை விட, ‘உங்கள் சூழ்நிலை எனக்கு புரிகிறது. என்னால் இயன்ற அளவு நான் உங்களுக்கு ஆறுதலாக, நம்பிக்கையாக இருப்பேன்’ என்று சொல்லும் போது, நமக்கு ‘தோள் கொடுக்கும் தோழி இருக்கிறாள்’ என்கிற நம்பிக்கையில் அவர்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
ஒரு வேளை, பிரச்சனைகளின் தாக்கத்தால் அவர்கள் மனச்சோர்வு (எ) டிப்ரெஷன் போன்றவற்றில் மூழ்கி விடாமல் இருக்க, அவர்களை மன நல ஆலோசகருடன் கலந்தாலோசிக்கும் படி எடுத்துச் சொல்லுங்கள். ‘உடல் நலப் பிரச்சனைகளுக்கு மருத்துவர்களை நாடுவது போல் தான் இது. இதில் எந்த அவமானமும் இல்லை, இக்கட்டான சூழலில் மனநலம் பேணுதல் மிக முக்கியம்‘ என்று கனிவுடன் புரிய வையுங்கள்.
ஒரு வேளை அவர்கள் ‘டொமெஸ்டிக் வயலென்ஸ்’ எனப்படும் வீட்டு வன்முறை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தால், அவர்களுக்கு ‘மேரேஜ் கவுன்செலிங்’ செய்து கொள்ள பரிந்துரை செய்யுங்கள்.
விஷயம் கைமீறிப் போனால், பிரச்சனைகளை சட்டப்பூர்வமாக தீர்க்குமாறு எடுத்துச் சொல்லுங்கள். பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அரசு சாரா அமைப்புகள் நிறைய உள்ளன. ‘சாஹஸ்‘ எனப்படும் செயலி இதற்காகவே வடிவமைக்கப் பட்டு பல பெண்களுக்கு உற்ற உதவியை செய்து வருகிறது. இதை பற்றி எடுத்துக் கூறி, துன்பப்படும் பெண்களுக்கு தைரியம் சொல்லுங்கள்.
அப்போது பிரச்சனைகளை எதிர்கொள்ள அவர்களே ஆயுத்தம் ஆவார்கள். போலி சாமியார்களை நாட வேண்டிய அவசியமும் இல்லாமலே போய்விடும்.
பெண்ணுக்கு பெண் தோழியாய் தோள் கொடுப்போம்!
பட ஆதாரம்: ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம்
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address