பிரியமான தோழி!

பிரியமான தோழி. ஒவ்வொரு பெண்ணிற்கும் இது மிக மிக அவசியம், என்கிறார் நம் வாசகி கல்பனா. என்ன சொல்கிறார் என்று படித்துப் பாருங்களேன்!

பிரியமான தோழி. ஒவ்வொரு பெண்ணிற்கும் இது மிக மிக அவசியம், என்கிறார் நம் வாசகி கல்பனா. என்ன சொல்கிறார் என்று மேற்கொண்டு படித்துப் பாருங்களேன்!

வணக்கம்! தலைப்பைப் பார்த்தவுடனே, என்னமா நீ? இந்த படத்தை நாங்க பல முறை பார்த்தாச்சு! ஆண் பெண் நட்பு தவறில்லை, அதானே! சரி தான். ஆனால் சற்றே வேறுபட்ட சிந்தனை எனக்கு.

ஒவ்வொரு பெண்ணிற்கும் சக வயது அல்லது சக தலைமுறை நட்பு மிக மிக அவசியம் என்பதே அது.

நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ள, என்ன பேசினாலும் (புலம்பிக் கொட்டினாலும்) கேட்டுக்கொள்ள, நம் நிலைமையை உள்ளவாறே புரிந்து கொள்ள, ஆறுதலும் தேறுதலும் சொல்ல, இது போல் இன்னும் பல பல…

நிகழ்வு ஒன்று: சவிதாவின் மகன்

சவிதாவிற்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான். வகுப்பு தோழனுடன் கைப்பேசியில் பேச்சு. பேச்சினூடே ஓரு தடித்த கெட்ட வார்த்தை. எனக்கு சவிதாவின் படபடப்பு இங்கேயே கேட்கிறது. வீட்டில் சொன்னால், “நான் அப்போவே சொன்னனேன், சாப்பிட வைக்க போன் தராதே, தராதே” எனலாம். “நீ ஒரு பக்கம் laptop, அவன் ஒரு பக்கம் online, அப்புறம் அவன சொல்லி என்ன” எனலாம்.

பொதுவாக இதில் இரண்டு பக்கங்கள் இருக்கும்.
ஒன்று: தீர்வு – கண்டிப்பாக கணவரிடம் பேசி நல்ல வார்த்தை நாலு சொல்லி திருத்துவது.
இரண்டு: மன ஆறுதல் – இது தான் நான் சொல்ல வருவது!
மகனின் பேச்சை கேட்ட சவிதா, படபடப்பில், “ஐயோ, யாரோட பேசறான் இவன்? ஒரு வேளை, இவனுக்கு வேற பல வார்த்தைகளும் தெரியுமோ? இது தான் முதல் தடவையா, இல்லைனா நான் இப்போ தான் கேட் கிறேனா? ஒரு வேளை, இவன் வகுப்பில் இதே போல் பேசுகிறானோ! நட்பு வட்டம் சரி இல்லையோ! ‘ஷின்-சான்’ சொல்லி இருப்பானோ!… தடக் தடக்…”என்று பேசிக் கொண்டே போகையில்…

நான் சவிதாவிற்கு ஒரு நிஜமான, பிரியமான தோழியாக, “நிறுத்து நிறுத்து சவிதா.. போன வாரம் பாத்த சினிமாவோ என்னவோ.. விட்டுத் தொலை! சொன்னா புரிஞ்சுப்பான். நானே என் பொண்ணுக்கு கராத்தே கிளாஸ் போடலாமா வேணாமா கேக்க வந்தேன்”, என்று சொல்லும் போது, உலக அம்மாக்களின் சிந்தனைக் கடலில் சவிதாவும் ஒரு துளி ஆகிப் போகிறாள்.

நிகழ்வு இரண்டு: நளினியின் தங்கை

நளினிக்கு ஒரு தங்கை. பெற்றோர் வரன் பார்க்கத் துவங்கி இருக்கிறார்கள். ஒரு ஞாயிறு மதியம் நிதானமாக தொலைப்பேசியில் அவள் காதலை சொல்கிறாள், தங்கை.

நளினியோ, சவிதாவோ… பதட்டம் வந்தால் ஒரே சத்தம் தான்.. அதே தடக் தடக் தான் .. “யாருன்னு சொன்னா..? அந்த  சுரேஷ்.. அட என் கல்யாண வரவேற்புக்கு வந்தானே..! நான் தான்  சரியா கண்டு கொள்ளலயோ..? என் மாமியார் கிட்ட என்னன்னு சொல்றது..? அடச்ச! இன்னும் நம்ம அப்பா அம்மா கிட்டயே அவ சொல்லலியே..” என்று தவிக்கிறாள் நளினி!

நளினியிடம், “இரும்மா. நான் வரேன் உங்க வீட்டுக்கு. அந்த பையனோட facebook id என்னனு பாரு அதுக்குள்ள. அவன் எங்க வேலை பாக்கறான்னு கேளு. ஒரு நாள் வெளியில எங்காவது கூட்டிட்டு வர சொல்லு. நாம ரெண்டு பேரும் போய் பாக்கலாம். நீ அவசர பட்டு எதுவும் பேசிடாதே…” என்று ஆறுதல் சொல்ல, அவளது தவிப்பும் அந்த மனநிலையும் புரிய ஒரு நட்பே தேவை.

ஒரு மனம் விட்ட உரையாடல்!

இதே போல என்னால் இன்னும் நிகழ்வுகளை நினைவு கோர முடியும். உண்மையில், நாம் சந்திக்கும் பெரும்பான்மை சோதனைகள், பிரியமான தோழியுடனான ஒரு மனம் விட்ட உரையாடலால் தெளிந்து விடும். கோர்வையாக ஒரு கதை போல சொல்லும் அந்த ஓட்டத்திலேயே விடையும் வந்து சேரும். மலை போல் தோன்றுவதும் சிறு கல் என்று தெரிந்து விடும்.

அந்த ஓட்டத்திற்கு தடை,  அந்த பிம்பத்திற்கு குறுக்கே, ‘இவர் என்னை பற்றி என்ன நினைப்பார்? நாளை இதை வேறு யாரிடமாவது சொன்னால் என்ன ஆகும்’ என்ற நினைப்பே. அந்த நிலை என்றுமே பிரியமான தோழியிடம் வருவதில்லை!

சக தலைமுறை நட்பு முக்கியம்!

‘இதெல்லாம் சரி தான். இதே போல நான் எங்க அம்மாவிடம் சொல்லிவிட்டு போகிறேனே!’ என்று சொல்லலாம். வாஸ்தவம் தான். ஆனால் பெரும்பாலும் அங்கேயும் ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது.

இன்னும் எத்தனையோ பாட்டிகளுக்கு தங்கள் பேத்திகள் நீச்சல் வகுப்புகள் போவதில் ஒப்புதல் இல்லைதான். ஒரு வகையில் ஒத்துக்கறேன்.

‘என்னோட கணவர், அப்படியே விக்ரமன் பட நாயகர் – அவ்வளவு நல்லவர்! அவரிடம் சொல்றேன்’ என்கிறீர்களா? சொல்லுங்க, சொல்லுங்க! மாப்பிள்ளை விருந்துக்கு பரிசு சேலை-வேஷ்டியா, சுடிதார்-பாண்டா? இதுக்கு அவர் என்ன பதில் சொல்லறாரு?!
நான் குறை ஏதும் சொல்லவில்லை. அன்றாடம் பெண்களுக்குப் பெரிதாகத் தெரிவது, கண்டிப்பாக ஆண்களுக்குப் பெரிதாக தெரிவதில்லை.

எனவே, வேற வழியே இல்லை, இன்றைய  தேவை, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தோழி!

வீட்டுக்கு உள்ளேயே தீர்க்க வேண்டியதும் இருக்கத்தான் செய்கிறது. கணவருடன், புகுந்த-பிறந்த வீட்டில் பேசி செய்யும் எதையும் நிறுத்த நான் சொல்லவில்லை. இதை எல்லாம் தாண்டி, தங்கு தடை இன்றி கொட்டித் தீர்க்க, எப்போதும் எங்கேயும் திறந்த மனது ஒன்று வேண்டும் நம் போல் பெண்களுக்கு!

ஆழம் சென்று பேசி விடுங்கள், கீழே தங்கும் எதுவும் ஒரு நாள் விஷம் ஆகலாம். உங்கள் அமைதியைக்  குடிக்கலாம். அது வரை ஏன் செல்ல வேண்டும்? இப்போதே பேசிவிடலாம். செவி நிறைய கேட்டு விடலாம். வாருங்கள், சொல் கோர்த்துச் செல்வோம்!
ஒரே கடலில், அந்த துளி நான், பக்கத்து துளி நீங்கள்.

பட ஆதாரம்: மகளிர் மட்டும் (2017)

About the Author

3 Posts | 6,057 Views
All Categories