பெண்ணே! பெண்ணிற்கு துணை நிற்பாயா?

சாதிக்கத் துடிக்கும் பெண்ணின் கனவுகளை கைவசமாக்க பெண்ணே பெண்ணுக்கு துணையாக இருக்கிறோமா? இது குறித்த சுயபரிசோதனை முயற்சியே இக்கட்டுரை.

ஒரு காலத்தில் பெண்ணடிமை மலிந்து, பெண்கல்வி மறுக்கப்பட்ட நாடாய் இந்தியா இருந்தாலும், குழந்தை திருமணம், மறுக்கப்பட்ட பெண்கல்வி ஆகியவற்றிலிருந்து இன்று குறிப்பிடத்தக்க அளவு வெளிவந்திருக்கிறோம்.

ஆம்புலன்ஸ் ஓட்டுவது முதல் நாட்டை ஆள்வது வரை, “எங்களால் முடியும்” என இந்தியப்பெண்கள் உலகத்திற்கு உணர்த்தி வருகிறோம்.

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்” என்ற பாரதியின் கனவை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம். 

சாதிக்கத் துடிக்கும் பெண்களின் கனவுகளை கைவசமாக்க பெண்களே பெண்களுக்கு துணையாக இருக்கிறார்களா? இது குறித்த சுய பரிசோதனை முயற்சியே இக்கட்டுரை.

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்?

“எல்லா ஆண்களும் அது போல் இல்லை” என்றாலும் பெண்களை போகப்பொருளாய் காணும் ஆண்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

அதைவிட கசப்பானது பெண்களுக்கு பெண்களே சில நேரங்களில் தடைக்கற்களாய் மாறிப்போவதுதான்.

“பேசினால் வாயாடி !
பேசாவிட்டால் உம்மணா மூஞ்சி !
அழுதால் நீலிக்கண்ணீர் !
அழாவிட்டால் நெஞ்சழுத்தகாரி !
துணிச்சலாய் இருந்தால் திமிர் பிடித்தவள் !
துணிவில்லை என்றால் அப்பாவி !
அமைதியாக இருந்தால் அது ஒரு ஜடம் !
கேள்வி கேட்டால் ஆணவக்காரி !
ஆண்களிடம் சிரித்து பேசிவிட்டால் மோசம்!
காரமாய் பேசினால் முசுடு !
நாங்கள் நின்றாலும், நடந்தாலும், அமர்ந்தாலும், எழுந்தாலும் குற்றம் என்று பேர் வைக்க மட்டும் இந்த உலகம் மறப்பதில்லை… !!!”

இது பெண்களைப் பற்றிய சிந்திக்கத்தூண்டும் ஒரு முகநூல் பதிவு. இதில் விசித்திரம் என்னவெனில் பெண்களைக் குறித்த இம்மாதிரியான கருத்துக்களை பெண்களே பிரகடனப் படுத்துவது தான். 

பெண்களின் மனவலிமையை பாதிப்பது எது?

பெண்கள் முன்னேற கல்வி மிக மிக அவசியம் தான். ஆனால் அதைவிட முக்கியமான ஒன்று உண்டு – அது மனரீதியான பலம்.

அந்த மனரீதியான பெண்ணின் பலம் குறைய இன்னொரு பெண்ணே காரணமாக அமைவது மிகப்பெரிய கொடுமை.

மறைமுக புகைப்பிடித்தலில் (Passive smoking) பாதிக்கப்படுபவர்கள் போல மறைந்தே கொல்லும் வார்த்தைகள், உடல் மொழிகள், பாவனைகள் என ஒவ்வொன்றும் பெண்ணை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்துகிறது. ஒரு நொடி கண்ணை மூடி யோசித்தால் இதை நாமே எதிர்கொண்டிருப்பதை உணர்வோம். சொல்லப்போனால் இந்த அனுபவத்தை கடக்காதவர்கள் எவருமில்லை இங்கு.

எங்கே, சொல்லுங்கள் – அது அம்மா, மாமியார், நாத்தனார், சகோதரனின் மனைவி, மேலதிகாரி அல்லது உடன் வேலை செய்யும் பெண்ணாகவே கூட இருக்கலாம்.

இவர்களில் யாராவது உங்களை சொல்லாலோ, செயலாலோ மனரீதியாக பலவீனமாக்கவில்லையா? நம்முள்ளே இருக்கும் இந்த குறையைக் களையாமல் நாம் எப்படி முழுமையாக முன்னேற முடியும்?

எது நம்மை பலவீனப்படுத்துகிறது?

அடுத்தவரோடு சதா நம்மை ஒப்பிடும் பெற்றோர்.
கொஞ்சம் அழகாய் உடுத்திப்போனால் எரிந்து விழும் பெண் மேலதிகாரி.
எத்தனை செய்தாலும் அலட்சியமாய் நடத்தும் மாமியார்; எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மாமியார்த்தனம்.

சக ஊழியரோடு கருத்து வேற்றுமை ஏற்படும் பொழுதுகளில், “அவர்தான் ஆண்பிள்ளை கொஞ்சம் கோபப்படறார், இவள் பேசாமல் இருக்கவேண்டியதுதானே” என ஆண்களுக்கு மட்டும் பரிவு காட்டும் சக பெண் ஊழியர்கள்.

இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். 

துயரத்தின் வடு

ஏன், என் சொந்த அனுபவத்திலேயே சொல்கிறேன். நாங்கள் நான்கு பெண்கள். எந்தக் குறையுமின்றி அருமையாய் சிறந்த கல்வித்தகுதியுடனே வளர்க்கப்பட்டோம். அனைவரும் நல்ல வேலையிலும் இருக்கிறோம். இடையில் அப்பா உடல்நலம் பாதித்து இறந்துபோனார். பிள்ளைகள் யாருமில்லாததால் எங்கள் வீட்டின் மூத்த மாப்பிள்ளையும் இறுதி சடங்கு செய்ய தயாரானார்.

அந்நேரம் அவருடைய சகோதரியின் அழுகை அதிகமானது; என் துரதிர்ஷ்டம், பக்கத்தில் நின்றிருந்த என் காதில் அதன் காரணமும் விழுந்தது.

“…என் தம்பி ஏன் இவர்களுக்கு எல்லாம் கொள்ளி போடவேண்டும்?” என்ற ஆதங்கத்தில் வந்த அழுகை அது என தெரியவந்த போது நான் கொண்ட துயரத்தின் வடு, இன்று வரை ஆறவில்லை என்பதுதான் உண்மை. 

ஏன் இப்படி?

என்ன மாதிரியான பெண்கள் இவர்கள்? பெண்ணைப் பெற்றவர் என்றால் அவர் அங்கே அனாதையா? அவருக்கு கொள்ளி வைப்பது என்பது உறவாய் இல்லாவிட்டாலும் மனிதாபிமானம் சார்ந்த கடமை அல்லவா?

மனிதாபிமானமற்ற இது போன்ற வார்த்தைகள் எத்தனை சிறகுகளை முறிக்கும்?!

‘பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடுங்கள், பெருமை கொள்ளுங்கள்’ என்று பேசும் நவீன சமூகத்தில் இது போன்றவர்களின் வார்த்தைகள் அபஸ்வரம் தானே?

அலுவலகத்தில், எதிர்பாலினத்தவர் உயர் அதிகாரியாக இருந்தால் தான் அலுவல் தடையின்றி அமையும், சூழல் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருபாலினத்தவர்களில் பலருக்கும் இருக்கிறது; இதற்கு என்ன காரணம்?

ஆழ்ந்து சிந்திக்கையில், பெண்களிடம் பெண்களுக்கேயான பயம் என்பது மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய உண்மை என்பது மிகவும் தெளிவாகிறது.

மனோதத்துவ பார்வை

பெண்கள் மென்மையானவர்களே. அவர்களின் சில தவறான புரிதலுக்குக் காரணம் அவர்கள் சமுதாயத்தால் சிறுவயதில் பாதிக்கப்பட்டதன் எதிரொலியே.

ஏமாற்றங்களையும் அடக்குமுறைகளையும் சகித்து வாழ்ந்த பெண்களுக்கு தங்கள் எதிரில் இன்று துள்ளித்திரியும், தற்சார்புள்ள இன்றைய தலைமுறைப் பெண்களை காணும்பொழுது, அவர்கள் தங்கள் வாழ்வில் இழந்த சுதந்திரங்கள் நினைவுபடுத்தப்பட்டு ஒருவித வலியை உணர்வது  இயல்பே.

ஆனாலும், போதும் அடக்குமுறைகள்.

நாம் இழந்த சுதந்திரத்தை நம் கண்ணெதிரே கொண்டாடும் பெண்களைக் கண்டு பெருமை கொள்வோம் – பெருமை கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வோம்.
சக பெண்களை மனம் விட்டு பாராட்டும் மனநிலையை அடைவோம்.

வளர்வோம்

தவறுகளை மனம் நோகாமல் எடுத்துச் சொல்லும் நேர்த்தியை வளர்ப்போம். ஓப்பீடு செய்யாமல், தட்டிக்கொடுத்து, தைரியம் அளிக்கும் சிறப்பினை பெறுவோம்.

அதிகாரத்தினை கையிலெடுக்காமல் அன்பும் கண்டிப்புமாய் வேலை வாங்கும் குணமும், மாமியாரே ஆனாலும் தன் பெண்ணைப் போல் மருமகளை பார்க்கும் தாய்மையும், இன்னும் இவ்வழியில் இனிய பல மாற்றங்களையும் வளர்க்க வேண்டியது மிக அவசியமாகிறது!

இந்த குணங்களை நாம் வளர்த்துக்கொள்ளப் போவதில்லை எனில், பிரிந்து நிற்கும் மாடுகளை சிங்கம் விழுங்கிய கதையாய் உலகம் நம்மை வைத்தே நம்மை அடிமைப்படுத்தத்துவங்கும் என்பதை உணர்ந்து சிந்திப்போம், செயல்படுவோம்; சிறப்போம்.

வாழ வைக்கும் பெண்மை

பெண்மை தெளிவானது, அன்பில் மென்மை கொள்வது.
அச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டுமாம். துயர் பல வரினும் எழுந்து வெற்றிநடை போட பெண்ணால் இயலும். ஆனால் அதை பெண்குலமே கொடுவார்த்தைகள் வீசி தளரவிடாதீர்கள்.

தனித்து வாழும் பெண்களும், ‘சிங்கிள் மாம்’ எனப்படும் தனித்தாய்மார்களும் வீறுநடை போட்டால் அதை திமிர் என விமர்சிக்காதீர்கள்.
பெருமையாய் உணருங்கள். 

பெண்மை வாழும்; வாழவும் வைக்கும்.

Image credits: Kzenon/Canva Pro

About the Author

9 Posts | 14,541 Views
All Categories