Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
இதெல்லாம் பெண்களின் வேலை என பெருக்குவதும், துடைப்பதும், குழந்தைக்கு டயாபர் மாற்றுவதும் முத்திரைக்குத்தப்பட்டுள்ளதா?
காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணும் இன்று சரிசமம், இரண்டு பேரும் வேலை செய்கிறார்கள், சமையலில்கூட இரண்டு பேருமே வேலையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருந்தும் என்ன இந்த தலைப்பு? எல்லாமும் இயல்பாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என நினைக்கத்தோன்றுகிறதா?
உண்மைதான் ஆண்கள் பலர் தங்கள் குடும்பத்தில் நன்றாக உதவி செய்கிறார்கள். அதேநேரம் இன்னும் சிலருக்குள் ஒளிந்திருக்கும் ‘தான்’ எனும் ஈகோ ஒழிந்தால் மிகவும் நன்றாகத்தான் இருக்கும். அப்போதுதான் இதெல்லாம் பொம்பளைங்க வேலை – எனும் வார்த்தை முழுமையாய் வழக்கொழியும்.
ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு வேலைக்கு மட்டுமே லாயக்கு எனும் மாய உருவாக்கம் இருந்தது. ஆனால் தற்போது பல பெண்களின் தைரியமான அணுகுமுறை மற்றும் விடாமுயற்சியால் அந்த எண்ணம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. இன்று பெண்கள் இல்லாமல் எந்த வேலையுமே இல்லை எனும் நிலையை அடைந்து விட்டோம் என்றால் அது மிகையில்லை.
ஆனாலும் இதெல்லாம் பெண்களின் வேலை என பெருக்குவதும், துடைப்பதும், குழந்தைக்கு டயாபர் மாற்றுவதும் முத்திரைக்குத்தப்பட்டுள்ளதா?
ஒரு சமூகத்தின் கண்ணாடியாக விளங்கும் ஊடகங்கள் குறிப்பாக அனைவரும் பார்க்கும் விளம்பரங்கள் உள்ளன. விளம்பரங்களில் வீடு துடைப்பது, டாய்லெட் சுத்தம் செய்வது, துணிகள் சுத்தம் செய்வது எல்லாவற்றுக்கும் பெண்களே தானே காட்சியாய் சமூகத்தின் சாட்சியாய் நிற்கிறார்கள்.
அட மிகப்பெரிய ஆண் பிரபலங்கள் டாய்லெட் கிளீனர் விளம்பரத்தில் வருகிறார்களே என்கிறீர்களா? அவர்கள் மட்டும் என்ன வீடுவீடாய் சென்று கதவைத்தட்டி அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்குத்தானே தங்கள் பிராண்ட் டாய்லெட் கிளீனரை அறிமுகப்படுத்துகிறார்கள். ஏன் வீட்டின் சுத்தத்திற்கு பெண் மட்டும்தான் பொறுப்பா என்ன? அபூர்வமாய் இப்போதுதான் மனைவிக்கு தேநீர் தருவதும், கர்ப்பமான மனைவியை உட்காரவைத்து வீடு துடைப்பது போன்ற காட்சிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன.
இப்போது குடும்பங்களை பார்ப்போம். இன்று பெரும்பாலும் தனிக்குடித்தனங்களே அதிகரித்து விட்டன என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் இன்றளவிலும் கூட்டுக்குடித்தனங்கள் பெண்களை மட்டுமே சமையலறைக்கு என பிரித்து வைத்துள்ளது என்பது மறுக்க முடியாத நிஜம்.
சரி தனிக்குடித்தனமென்று எடுத்துக்கொண்டாலும் அங்கே இருவரும் பகிர்ந்தே வேலை செய்வது உண்மை என்றாலும் அம்மா அல்லது மாமியார் என முன் தலைமுறையினர் வீட்டுக்கு வரும் காலங்களில் அம்மாவுக்கு எதிரில் காய்கறி நறுக்கித்தர சங்கடப்படும் ஆண்கள் இன்றும் அதிகம் உண்டு. வந்தவர்கள் திரும்ப ஊருக்கு திரும்பும்வரை அந்த வேலையை தனியே செய்தாக வேண்டிய கட்டாயத்தில் பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.
அப்படியே எல்லா வேலையையும் பகிரும் ஆண்களிலும் ஒரு சிலர் தவிர அதை மற்றவர் எதிரில் வெளிப்படுத்துவதில்லை. உண்மையில் அப்படி வீட்டில் மனைவிக்கு உதவி செய்தாலும் வெளியில் நான் கிச்சன் பக்கமே போகமாட்டேன் என்று சொல்லிக்கொள்வதில் இருக்கும் பெருமைதான் இன்றும் பெண்கள் முழமையாக அங்கீகரீக்கப்படாததன் சாட்சி.
அத்தனையும் பகிர்ந்து செய்து அதைப் பெருமையாய் உணரும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் மரியாதைக்குரிய வணக்கங்கள். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், என் வேலைகளில் முக்கியமாக வெயிட் அதிகம் தூக்கவேண்டிய வேலைகள், காய்கறி நறுக்கித்தருதல் ஆகிய வேலைகளை பகிர்ந்து கொள்ளும் என் கணவர் சில நேரங்களில் வீடு பெருக்குகிறேன் எனவும் வேலை செய்வதுண்டு.
திருமணமான புதிதில் அதை யாரும் பார்த்துவிடக்கூடாதே என நான் சங்கடப்படுவேன். அப்போதெல்லாம் அவர் அதென்ன நம் வீடு நாம் வேலை செய்கிறோம் இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்பார். ஆனால் பலரும் மதிக்கத்தக்க ஒரு பதவியில் இருக்கும் அவர் அப்படி செய்வதை என்னாலே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.
நம் சமுதாயத்தின் பார்வை அப்படித்தான். இது காலகாலமாய் உள்ளே ஊறி இருக்கும் உணர்வு. இன்றும் உனக்கென்ன எல்லா வேலையையும் அவர் பகிர்ந்து செய்கிறார் என்பதுதான் உறவுகளின் கேலிக்குரலாக ஒலிக்கிறது. இதில் நான் செய்யும் சமையலையும் அவரே செய்து தருகிறார் என கேலி செய்பவர்களும் அடக்கம். இது எதையுமே அவர் சிறிதும் சட்டை செய்வதில்லை, எனக்குத்தான் பழக நெடுங்காலம் ஆனது.
இது பெண்ணியம் பேசும் கட்டுரை அல்ல. நம் பொறுப்புகள் பற்றி பேசுவதே இதன் நோக்கம். சக உயிர்களை மனிதாபிமானத்தோடு அணுகுவது, நாம் தற்சார்பாக வாழ்வது நம்குழந்தைகளையும் தற்சார்புடையவர்களாக வளர்ப்பது – இதுதான் இங்கு இன்றைய தேவை.
அம்மா அடுப்படியில் வேலை செய்து கொண்டிருக்கையில் தொலைக்காட்சியை சிறிது நேரம் பார்ப்பதை விட்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்க உங்கள் மகனையோ மகளையோ நீங்கள் பழக்கம் செய்யவில்லை எனில் நீங்கள் அவர்களை தற்சார்பின்றி வளர்ப்பதாகவே பொருள்.
சாப்பிட்ட தட்டை கழுவி வைப்பது, வீடு சுத்தம் செய்வதில், கழிவறை சுத்தம் செய்வதில் வாரம் ஒருவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வது என எல்லா வேலைகளையும் பிரித்து கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. பாலினப் பாகுபாடு காட்டாமல் இன்று நாம் வளர்க்கும் ஆண்குழந்தைகள்தான் நாளை பெண்களை மதிக்கும் சமூகத்தின் அங்கம் ஆவார்கள். அப்போதுதான் எதிர்காலத்தில் நிர்பயா, வினோதினி என ஆண்களால் பாதிக்கப்படும் பெண்கள் உருவாகக் காரணமாய் எதிர்கால இளைஞர்கள் உருவாகாமல் இருப்பார்கள்.
அதைவிடுத்து என் பிள்ளை ராஜா மாதிரி என்று சொல்லிக்கொண்டு “அண்ணனுக்கு தட்டெடுத்து வை”, “தம்பிக்கு முதல்ல சாப்பிடட்டும்”என வளர்த்தால் நாளை தன்னையும் கவனித்துக்கொள்ளத் தெரியாமல், பெண்களையும் மதிக்கத்தெரியாமல் ஒரு தவறான சிந்தனைப்போக்கு கொண்டவனாய்த்தான் அவனால் வளரமுடியும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
பெண்ணினத்தை மதிக்கும் கலாச்சாரமே மிகச்சிறந்ததாக இருக்க முடியும். பெண்ணை தோழியாய், சகோதரியாய், தாயாய் எந்த உருவில் கண்டாலும் அவளுக்கு உரிய மரியாதையை, கெளரவத்தை கட்டிக்காப்பது சமூகத்தின் கையில்தான் உள்ளது. சமூகம் என்பது நம் ஒவ்வொரு குடும்பத்தையும் உள்ளடக்கியது. குடும்பங்களில் கொடுக்கும் மரியாதை நிச்சயம் நாளை நம் சமூகத்தினை ஒரு பெண்களை போற்றும் பொறுப்புள்ள சமூகமாக உருவாக்கும்.
Image source: வாஷிங் பவுடர் விளம்பரம்
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address