பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு ‘தொடாதே’ சொல்ல சொல்லிக்கொடுத்தீர்களா?

பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி எழுத நினைத்தபோது யூடுயூபில் சமீபத்தில் வெளியான ஒரு குறும்படம் ‘தொட்ட’ எனும் எச்சரிக்கும் பெயரில் பார்க்க நேர்ந்தது.

பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி எழுத நினைத்தபோது யூடுயூபில் சமீபத்தில் வெளியான ஒரு  குறும்படம் ‘தொட்ட’ எனும் எச்சரிக்கும் பெயரில் பார்க்க நேர்ந்தது. 

ஒரு ஆசிரியை மாணவ மாணவர்களுக்கு நல் தொடுதல் மற்றும் தீய வழி தொடுதல் குறித்து மிக அழகாக சொல்வதையும் அதனால் அதுவரை தான் மாமா என்று அழைக்கும் ஒருவன் தினமும் தன்னைத் தவறாக  தொடுவதை உணர்ந்த பெண் அவனை எச்சரிப்பதுமாக செல்கிறது கதை. இந்த குறும்படம் என்னுள் பல சிந்தனைகளை எழுப்பியது.

குறும்படம் சொல்லும் அழகாக சொல்லப்பட்டுள்ள செய்திகள் 

1. இன்றைய காலகட்டத்தில் ஆண் குழந்தை பெண்குழந்தை என இரு பாலரும் அறிய வேண்டிய விஷயம் இந்த குட் டச் பேட் டச்

2. சரியான தொடுதலோ தவறான தொடுதலோ எதுவானபோதும் அதை நாம் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. 

படம் முடியும்போது அவர்கள் வலியுறுத்தும் ஒரு விஷயம், சரியோ தவறோ நம்மை தேவையில்லாமல் தொடும் அனைவருக்கும் சொல்லுங்கள், “Don’t touch!” என்பதுதான் இந்த தொட்ட குறும்படத்தின் சாராம்சம்.

உண்மையில் இது அனைவருக்குமான ஒரு பாடம். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் சேர்க்க வேண்டிய ஒன்று. 

வாடிக்கை ஆகிப்போன வன்முறைகள்

இன்று பெரும்பாலும் பத்திரிக்கைகளிலும் நாளிதழ்களிலும் கிட்டத்தட்ட தினசரி செய்தியாகவே ஆகிவிட்டது சிறு குழந்தைகளிடம் பாலியல் வன்முறை. தூக்கி கொஞ்சும் அனைவரையுமே சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது என்பது உண்மை.

குழந்தைகளிடம் காட்டும் பாலியல் சார்ந்த வன்முறைகள் மனித இனத்திற்கே அவமானம்.

குழந்தைகளின் உரிமைகள்

பொதுவாக குழந்தைகள் என்றாலே குழந்தைதானே என்ன கத்தினாலும் தூக்கலாம் கொஞ்சலாம் என்ற வழக்கம் பலரிடம் இருக்கிறது. குழந்தைகளின் விருப்பு வெறுப்புகள் உண்டு, அவை மதிக்கப்பட வேண்டும். சின்னக்குழந்தைகளை அவர்கள் விருப்பம் இன்றி தொடுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் குழந்தைகள்  பேரில்  நடக்கும் இத்தகைய வன்முறைகளை எதிர்த்து பலர் குரல் கொடுத்தாலும் கட்டுப்படாத வைரஸாகவே பரவி வருகிறது. இத்தகைய நேரத்தில் வெளிவந்திருக்கும் இந்த வீடியோ நிச்சயம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பயிரை மேயும் வேலிகள்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்களின் எண்ணிக்கையில்  60 வயதை கடந்தவர்களும் இருக்கிறார்கள். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

வன்கொடுமைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருமை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், 2018–19ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 22,200 குழந்தைகள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டு இருப்பதாகவும், உடல் ரீதியாக அடித்து கொடுமைப்படுத்தியதில் 16200 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7,800 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் தான் 1,742 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், 2வது இடத்தில் தமிழகம் இருப்பதாகவும், மஹாராஷ்டிரா 3வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களே குழந்தைகளிடம் அதிகம் தவறாக நடந்து கொண்டிருப்பதாகவும் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

சட்டம் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு கவசங்கள்

1.போக்சோ

இத்தகைய பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. அது, 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது. பெண்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பெண் வக்கீல்களே அரசு தரப்பில் நியமிக்கப்பட்டனர். 

2. சைல்டு லைன் என்கிற குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன்

1098 என்ற எண்ணில் இலவச தொலைபேசி சேவையுடன் இந்த அமைப்பு இயங்குகிறது, சைல்டு லைன் எனப்படும் ஹெல்ப் லைன். அக்கறையுள்ள எவரும் சைல்டுலைன் அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சைல்டுலைன் அமைப்பு பார்த்துக்கொள்ளும். 

தேவை அதிக விழிப்புணர்வு

தகவல் தொழில்நுட்பம் மற்றும் இரவு பகல் ஷிப்ட் களில் பணீபுரியும் கட்டாயம் கொண்ட வேலைகளில் நம்மில் பலர் பறந்து கொண்டுதான் இருக்கிறோம். அதனால் குழந்தைகளை அந்த வகுப்பில் சேர்த்து விட்டேன் இந்த வகுப்பில் சேர்த்துவிட்டேன், அவர்களது நேரம் சரியாகவே போகிறது எனும் நம்பும் பெற்றோர்களும் அனுப்பும் வகுப்பு, அதை நடத்தும் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதோடு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் குழந்தைகளின் நேரம் சரியாக செலவாகிறதா என்பதை கண்காணிக்கவும், அவர்களது கருத்துக்களை கேட்கவும் தவறக்கூடாது. 

‘தொட்ட’ போன்ற விழிப்புணர்வு தரும் படங்களை குழந்தைகளுடன் பார்க்கிறது மிக முக்கியம். நேரம் பொன்னானது – அதை  நம் குழந்தைகளுக்காக செலவழிப்பது முக்கியம்; ஏனென்றால் நேரத்தை விட, விலை மதிப்பற்றது நம் மழலைச் செல்வங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம்.

About the Author

Akila Jwala

writer , poetess, educationist and social activist read more...

9 Posts | 15,960 Views
All Categories