தமிழ் சீரியலும் பெண்களின் சித்தரிப்பும்: காலகாலமாய் தொடரும் கொடுமைகள் மாறுமா இந்த நிலை?

பெண்களை கொண்டாடுகிறோம் என பலர் பெருமையாகச் சொல்லும் நம்மிடையே தினசரி வாழ்வில் உலாவரும் தொலைக்காட்சித்தொடர்களில் பெண் கதாபாத்திரங்கள் நன்றாக உருவாக்கப்பட்டு இருக்கிறதா?

பெண்களை கொண்டாடுகிறோம் என பலர் பெருமையாகச் சொல்லும்  நம்மிடையே தினசரி வாழ்வில் உலாவரும் தொலைக்காட்சித்தொடர்களில் பெண் கதாபாத்திரங்கள் நன்றாக உருவாக்கப்பட்டு இருக்கிறதா?

கதாபாத்திர உருவாக்கங்கள் பெண்களை உயர்த்தும் விதத்திலும், அவர்கள் உணர்வுகளை இயல்பாக பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கிறதா  இந்த கேள்விகளுக்கான விடை தேடலே இந்த கட்டுரையின் நோக்கம்.  

Change is hard at first. Messy in the middle, Gorgeous at the end” – Robin Sharma

மாற்றங்கள் முதலில் கடினமாகவும் இடையில் குழப்பமானதாகவும் கடைசியில்  அருமையானதாகவும் இருக்கும் என்பது ராபின்ஷர்மாவின் மேற்கோளின் பொருள்.

தொலைக்காட்சிகளில் மாற்றங்கள் மிக தேவையாக இருக்கின்றவை.

இன்றைய தொலைக்காட்சி தொடர்களில் பெண்கள்

நேர்மறை எண்ணங்களுக்கு நம்மை வடிவமைக்கும் சக்தி உள்ளது. நல்ல எண்ணங்கள் நல் விதைகளாக நம் மனதில் தூவப்படுகின்றன.தொலைக்காட்சித் தொடர்கள் இந்த நேர்மறை எண்ணங்களை நம்மிடையே ஏற்படுத்துகிறதா? 

இன்றைய பெண்கள் தங்கள் உழைப்பு, கல்வி, இடைவிடா முயற்சி மூலம் பெண்கள் இன்று மேன்மையான மற்றும் பெருமை கொள்ளும் அளவில் வளர்ந்து வருகின்றனர். அவர்களின் இயல்பான இயற்கையான மனஅழகை, கம்பீரத்தை தொடர்கள் பதிவு செய்கின்றனவா? 

தொலைக்காட்சித் தொடர்கள் பொறுத்தவரை நம்மால் ஜீரணிக்க இயலாத காட்சிகள் இன்றும் பல உலவிவருகிறது. ஒவ்வொரு தொடரிலும் பெண்களின் ஆதிக்கம் அதிகம்தான். ஆஹா என அதில் நாம் பெருமை அடைய முடியாதவாறு பல வன் செயல்களும், செய்யத்தகாத செயல்களும் செய்யும் கதாபாத்திரங்களாகவே அங்கே பெரும்பாலும் பெண்கள் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

வன்முறையாளர்களா பெண்கள்?

பெண்களை வன்முறையாளர்களாகவும், பேராசையின் மறு வடிவங்களாகவும், நகைக்கடை பொம்மைகளாகவும்,அடுத்தவர் வாழ்விற்கு ஆசைப்படுபவர்களாகவுமே உருவகப்படுத்தி வரும் இத்தகைய தொலைக்காட்சி தொடர்கள் நம் கலாச்சாரத்திற்கே ஒரு கேடு.

சமீபத்தில் வெற்றிகரமாக உலாவந்து கொண்டிருக்கும் பிரபல தொலைக்காட்சி தொடர்களை எடுத்துக்கொண்டால், அப்பாவி மருமகள் அராஜக மாமியார், ஒரு பெண்ணின் கணவனை அடையத்துடிக்கும் ஒரு பெண். நாள் முழுதும் அடுத்தவர் குடும்பத்தை அழிப்பதற்காகவே திட்டம் போடும் பெண்,சவால் விட்டு வீட்டில் கலகம் விளைக்கும் மருமகள், கொலை செய்ய எளிதாக திட்டமிடும் வில்லி, இவைதான் முக்கிய கதாபாத்திரங்கள்.

என்னைப் பொறுத்தவரை மகளிர் மன்றங்களும், பெண்ணியவாதிகளும் இதற்கு எதிராகவே முதலில் குரல் கொடுக்கவேண்டும். ஒரு பெண்ணை தொலைக்காட்சி தொடர்களைப் போல இத்தனை கேவலமாக வேறு யாராலும் சித்தரிக்க முடியாது. இவ்வளவு விகார சிந்தனைகளை பெண்கள் கொண்டுள்ளதாக சொல்வதே பெண்களுக்கு எதிரான அவதூறாக தோற்றமளிக்கிறது.

இதைப்பார்க்கும் மனங்களில் விதைக்கப்படும் விஷத்தை எளிதில் விவரிக்க இயலாது.விஷ விதையாய் தூவப்படும் இம்மாதிரியான காட்சிகள் மனதளவில் பார்க்கும் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஒரு சமுதாயத்தின் தலைமுறையையே பாதிக்கலாம்.குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளிடம் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும் பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறைகளை விதைக்கும் இத்தகைய தொடர்களுக்கு மனதில் மட்டுமல்ல வீட்டிலும் கூட இடம் கொடுக்கக் கூடாது.

என்னென்ன மாற்றங்கள் வேண்டும்

முதலில் மெகா தொடர்களுக்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும். பெண்களை கேவலமாக (ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை ஆள்வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிடுவது உட்பட) தரமிழந்த காட்சிகளை தடை செய்ய தணிக்கைக் குழு நிச்சயம் வேண்டும். அழுகையும் ஆர்வமுமாய் தரம் குறைந்த தொடர்கள் டிஆர்பி ரேட்டிங் உயர ஏதோ ஓடட்டும் என தொலைக்காட்சி சேனல்களை ஓடவிடும் நாமும் காரணமாகிறோம்.

அதே நேரம் இயற்கையான இயல்பான கதாபாத்திரங்களை வடிவமைப்பது ஒரு ஆரோக்கியமான குறியீடு. எடுத்துக்காட்டாக சில காட்சிகள் சித்தி, மெட்டி ஒலி போன்ற பழைய தொடர்களில் பெண்களின் ஆளுமை மிக அழகாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். துரதிர்ஷ்டவசமாக சில காட்சிகள் மட்டுமே உதாரணமாக சொல்ல முடிகிறதே தவிர ஒட்டுமொத்தமாக இந்த தொடர் சிறந்தது என சொல்ல இயலாத அளவு ஒவ்வொன்றிலும் சில திருஷ்டி பரிகாரங்கள்.

அபூர்வமாய் சில அழகான காட்சிகள்

அதே நேரம் சில தொடர்கள் பாலுமகேந்திராவால் சில பிரபல கதைகளை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைநேரம் மாதிரியான  குறுந்தொடர்கள், 80-90s களில் வெளியான உணர்வுகளை மட்டுமே இயல்பாக பேசிய

விழுதுகள் – எத்தனை நிறங்களில் மனிதர்கள், அகிலனின் சித்திரப்பாவை, பாலச்சந்தரின் இரயில் சிநேகம், ஸ்ரீப்பிரியாவின் மறக்கமுடியுமா ஆகிய தொடர்கள் இன்றும் மக்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருப்பதிலேயே அதன் சிறப்பு வெளிப்படுகிறது.

தற்போது மிகைப்படுத்தல் ஒன்றையே மையம் கொண்டு உலா வருகின்றன பல கதாபாத்திரங்கள், கொலையே செய்யத்துணியும் வில்லி கேரக்டர் அல்லது உலகின் எல்லா அநியாயங்களையும் பொறுத்துப்போகும் உத்தம குண பாத்திர படைப்பு இப்படி மிகைப்படுத்தல் அதிகமாகிவிட்டது.

சமீபத்தில் வெளிவரும் சில குறும்படங்கள் ஆறுதல் அளிக்கின்றன ஆனால் தொலைக்காட்சி தொடர்கள் இந்த டிபிக்கல் கதாபாத்திர வடிவமைப்புகளில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கையுடன் ஒன்றி தினசரி பிரச்சனைகளை பேசுவதாகவும் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கற்பனைக் கதைகள் போன்றவையும் நிறையவரவேண்டும். 

நல்ல பொழுதுபோக்கு என்பது ஒன்று கவலைகள் மறந்து சிரிக்க வைக்க வேண்டும் அல்லது நம்மை மேன்மை படுத்தும் அளவில் சிந்திக்க தூண்டுவதாக இருக்கவேண்டும். இவை இரண்டிற்கும் ஒத்துவராத தொடர்களை குப்பை என ஒதுக்கும் தெளிவு நமக்கும் வேண்டும்.

மாற்றங்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளியின் பின்னாவது நம் மனநிலை மாறவேண்டும். நம் இரசனைக்காகத் தான் எடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு நம் மனதையே விஷமாக்கும்  தொடர்களிலும் மாற்றம் ஏற்படவேண்டும். 

 ராபின்ஷர்மா சொன்னது போல் மாற்றங்கள் தொலைக்காட்சி தொடர் விஷயத்திலும் நடக்கட்டும்…காத்திருப்போம் மாற்றங்களுக்காக!

Image: கல்யாண வீடு தொலைக்காட்சியில் ஒரு காட்சி

About the Author

Akila Jwala

writer , poetess, educationist and social activist read more...

9 Posts | 15,981 Views
All Categories