அகத்தினை உறுதிசெய்: மனநலம் பேணுதல் மிக அவசியம்!

அனைத்து பிரிவு மக்களிடையேயும் கொரோனா காலம் உருவாக்கியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனநலம் பேணுதல் மிக அவசியம்!

இந்த கொரோனா காலத்தில், பலருக்கும் பலவிதங்களில் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் மனநலம் பேணுதல் மிக முக்கியம்!

வழக்கமான நாட்களைவிட இந்த கொரோனா பெருத்தொற்று நாட்களில் பலருக்கும் பலவிதங்களில் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது. இது அனைத்து பிரிவு மக்களிடையேயும் ஒரு விதமான கவலையும் பீதியும் உருவாக ஒரு தூண்டுதலாக அமைந்துவிட்டது.

கோவிட்-19 காலத்தில் இயல்பாகவே கடுமையான மனஅழுத்த பிரச்சனைகளும், ஒரு அதிர்ச்சிக்கு பிந்தைய மனஉளைச்சல் கோளாறுகள் (PTSD), தற்கொலை எண்ணம் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பல உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு வலுவாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவிடம் தப்பிப்பிழைத்து ஆதரவை நாடும் தினக்கூலிகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், சமுதாய பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கும் பெரிய பாதிப்பினை மேன்மேலும் கொடுக்கின்றது.

கொரோனா மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மன பாதிப்புகள்

தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் ஏற்படும் மன பாதிப்புகளை நாம் சில பொதுப்பிரிவுகளாக  வகைப்படுத்தலாம்.

Anxiety – மனப்பதற்றம்: எப்போதும் கவலையுடன் கூடிய அதிகப்படியான பதற்றம் மற்றும் நிச்சயமற்ற முடிவைப் பற்றிய அதிதீவிரமான நினைவலைகள். எந்த செயலிலும் அமைதி இழந்து ஒருவிதமான பீதியுடன் காணப்படுதல்.

Depression – மனச்சோர்வு:  ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து உற்சாகமின்றி மந்தமான மனநிலையுடன் இருப்பது.

Insomnia – உறக்கமின்மை: தொடர்ந்து 1-2 மாதத்திற்கு குறைவான அல்லது விருப்பமில்லாத தூக்கம், போதிய ஆழ்ந்த உறக்கமின்மையால் விழித்திருக்கும் நேரத்தில் சோர்வோடு செயல்படுவது.

Stress-induced dementia – மறதி நோய்: பெருத்தொற்று, இயற்கை சீற்றங்கள் காரணமாக அதிகரிக்கும் மனஅழுத்தத்தினாலோ மிகுந்த மனச்சோர்வினாலோ ஏற்படும் ஞாபக மறதி.

Suicidal Ideation – தற்கொலை எண்ணம்: தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளுதல் அல்லது தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ண ஓட்டங்கள்.

இவற்றுள் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு எந்த வகை? என்ன விதம்? அதன் தீவிரத்தன்மை என்ன? என்பதை பொறுத்து குணப்படுத்தும் செயல்முறையும் அமையும்.  சிலருக்கு தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டிய பிரச்னைகளும் ஏற்படலாம்.

சில பாதிப்பால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மனநல மருத்துவர்களால் மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
எனினும் எந்த விதமான மனநல பிரச்சனைகளுக்கும் தொடர் சிகிச்சை என்பது மிகவும் முக்கியம். சத்தான சரிவிகித உணவு, நல்ல தூக்கம் ஆகியவை கட்டாயம்.

குழந்தைகளின் மனநலனை பேணுதல் அவசியம்

இத்தருணத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியம் பேணுதல் அவசியம். அந்தக்காலத்தில் ஒரு குடும்பத்தில் நிறைய குழந்தைகள் இருந்தனர். கஷ்டங்களைப் புரிந்து வளர்ந்தார்கள். எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களுக்குக் கிடைத்தது. விருப்பப்பட்டது கிடைக்கவில்லையென்றால் விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மை இருந்தது. தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்ற கூட்டுக் குடும்பச் சூழல் நிலவியது.

இதனால் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மனம்விட்டுப் பேசி பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள். பள்ளிகளில் நீதி போதனை (Moral Science) வகுப்புகள் நடத்தப்பட்டன. அறநெறிக் கதைகளும் போதிக்கப்பட்டன.

இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு செயலின் பின்விளைவுகள் குறித்தெல்லாம் தெரிவதில்லை.  தனிமை மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது. பல குழந்தைகள் தனிமையில் நேரம் செலவழிக்கின்றனர்.
அவர்களை ஆசுவாசப்படுத்தி, சூழல் ஏற்படுத்தியுள்ள சிக்கலையும் அதைச் சமாளித்துக் கடந்துசெல்ல வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறவேண்டும்.

உங்களைப் போலவே பலரும் இதையே எதிர்கொள்கிறார்கள்

இந்த பெருத்தொற்று நாட்களில் பலருக்கும் பலவிதங்களில் மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது.

என்னிடம் மனநல ஆலோசனையை பெற வருபவர்களிடம், மனநலம் பேண முக்கியமான ஆலோசனையாக நான் வழங்குவது, நமக்கு நடந்துகொண்டிருப்பது நமக்கு மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை மாற்றுவதுதான். “எனக்கு மட்டும்தான் இது எல்லாமே, எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்” என்பதுபோன்ற மாய எண்ணத்தைக் கொண்டிருக்கும் பிம்பத்தை உடைத்தெறிய முனைவேன். அவர்களிடம், உங்களைப் போலவே பல ஆயிரக்கணக்கானோருக்கும் இதே நிலைதான் என்ற உண்மையை எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பேன்.

பொதுவாகவே எல்லாவிதமான பிரச்சனைகளும் நாம் மண்டையை குழப்பிக்கொண்டு தீர்வுகளை யோசிக்க முனைவோம். நமக்கு தெரிந்த உறவுகள், நண்பர்களிடம் அந்த பிரச்சனையை சொல்லும் போது சிலர் நமக்கு பளிச்சென்று தீர்வு சொல்வார்கள். உண்மையில் சில நேரங்களில் அது நமக்கு தெரிந்த விஷயமாகவே இருக்கும். ஆனாலும் இந்த யோசனை நமக்கே தெரியுமே ஏன் நமக்கு இது தோன்றவில்லை? என்று  யோசிப்போம். ஒருவருக்கு தெளிந்த மனநிலை வந்தபின் தான் எளிதான தீர்வுகள் கூட  புரிய ஆரம்பிக்கும். தீர்வுகள் வெளியில் இல்லை என்பதும் புரியும். இதை நாங்கள் ‘Obvious is always invisible’ என்று சொல்வோம்.

உடலுக்கான சிகிச்சையால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியாது!

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் இது போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள்  பல்வேறு செயல் திட்டங்கள் உருவாக்கும் முயற்சியில் உள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான Mental health and Psychosocial Support (MHPSS) என்ற மனநலம் மற்றும் சமூக உளவியல்சார் சேவைகளை வழங்குவதற்கான பயனுள்ள வழிகளைக் கடைப்பிடிப்பதில் அதிக சவால்களை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது.

நம்முடைய சமுதாயத்தின் கோட்பாடுகளுக்குள் மனநல, உளவியல் மற்றும் சுகாதார பிரச்சனைகளை கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்வது, மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதையும், ஆக்கிரமிப்பு நிகழ்வுகளை தடுப்பதும் மிகவும் சிரமத்திற்குரிய செயல்பாடாகவே உள்ளது. 

எனினும், எந்தவிதமான சூழ்நிலையிலும் வெறும் உடலுக்கான சிகிச்சையால் மட்டுமே வியத்தகு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மிகச்சரியான உளவியல் சிகிச்சையால் மட்டுமே இதை நாம் சாத்தியமாக்க முடியும் என்பதை உணர்வோம்.

(தலையங்கப் புகைப்படம் ‘பிரியாணி’ திரைப்படத்தில் இருந்து எடுக்கப் பட்டது.)

About the Author

1 Posts | 1,324 Views
All Categories