அன்பு, அர்ப்பணிப்பு, உழைப்பு என்றே இயங்கும் ‘ரமணி அத்தை’!

அர்ப்பணிப்பு, உழைப்பு என்று இயங்கும் ரமணி அத்தை, வீடுகளில் உதவும் யாரோ என்றில்லாமல் குடும்பங்களில் ஒருவராகவே ஒன்றி விடுவதில் ஆச்சர்யம் இல்லை!

அர்ப்பணிப்பு, உழைப்பு என்று இயங்கும் திருமதி ரமணி அவர்களை, ‘ரமணி அத்தை’ என்றே குழந்தைகள் அழைக்கிறார்கள். வீடுகளில் உதவும் யாரோ என்றில்லாமல் குடும்பங்களில் ஒருவராகவே அவர் ஒன்றி விடுவதில் ஆச்சர்யம் இல்லை!

எங்கு வேலை செய்தாலும், அவருடைய அன்பும் அர்ப்பணிப்பும் அவர் பெயரில் நல்லெண்ணத்தையும் நற்பெயரையும் சம்பாதித்துக் கொடுக்கின்றன.

வேலை என்றால் வெறுமனே வீடுகளை சுத்தம் செய்வது, பாத்திரம் துலக்குவது என்றில்லை; சமயங்களில் அவர் பணி செய்யும் வீட்டுப்பெண்களின் பேறுகால நேரத்தில் கூட உற்ற உதவியாக இருந்து வந்துள்ளார், ரமணி அத்தை!

மெல்ல மெல்ல பணி செய்யும் வீடுகளில் ஒரு அங்கமாகவே ஒன்றிவிடும் இவர், தன்னுடைய பதினோராம் வயது தொடங்கி உழைத்து வருகிறார். நடுவில் சில வருடங்கள் தேனாம்பேட்டை மார்க்கெட் பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தவர், மீண்டும் வீடுகளுக்கு உதவியாக இருக்கும் பணியேற்று செய்து வருகிறார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக ரமணி அத்தை பம்பரமாய் சுழன்று உழைத்து வருகிறார். ஒரு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு விரைகிறார். இப்படியாக அவர் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையுமாக நான்கு வெவ்வேறு வீடுகளுக்கு உதவுகிறார்.

காணும்பொங்கல் ஒரு நாள் தவிர்த்து பெரும்பாலும் விடுப்பு என்பதே எடுக்காமலே உழைக்கிறார். “வேலை செய்யாவிட்டால் ஏதோ போல் இருக்கும்” என்று கூறுபவருக்கு கொரோனா கால லாக்டவுன் சிறிது ஓய்வு அளித்தது; அத்துடன் நெருக்கடியும் கொடுத்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கு இருந்த தட்டுப்பாடு தாக்கினாலும், நிலைமையை சமாளித்தார், ரமணி அத்தை.

சூழ்நிலையை குறை கூறாமல், எவ்வளவு பெரிய துன்பத்தையும் சோர்வையும் சிறு புன்னகையால் துடைத்தெறிந்து தன்னுடைய நகைச்சுவை கொண்டே அனைத்தையும் தாண்டுகிறார், ரமணி அத்தை.

தனக்கு கிடைக்காமல் போன கல்வி, தன்னுடைய பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யவே ரமணி அத்தையும் அவரது கணவரும் அயராது உழைத்து வருகின்றனர்.

இன்று, ரமணி அத்தையின் மூத்த மகன் பொறியியல் பட்டபடிப்பினை புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் முடித்து, சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு சிவில் இன்ஜினியர்! தன்னுடைய இளைய மகனாகக் கண் போல் வளர்த்த தங்கையின் மகன், புத்தகக் கடை வணிகத்தை நிர்வகிக்க உதவுகிறார்.
மகளோ கணிதத்தில் பி.எஸ்சி படிப்பு முடித்து, தற்போது வங்கி வேலையில் அமர்வதற்கான தேர்வுகளுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு இருக்கிறாள்.

Never miss real stories from India's women.

Register Now
மகன் மற்றும் மகளுடன் ரமணி அத்தை

இவர்களுடன், தன்னை ஈன்ற தாயையும் தன் பிள்ளை போல் பார்த்துக் கொண்டு வருகிறார், ரமணி அத்தை.

ஆனால் இன்றும் ஓயாமல் பணி செய்து வருகிறார்; கேட்டால் ‘வேலை செய்வதில் கிடைக்கும் திருப்தி வேறெதிலும் கிடைக்கவில்லை’ என்று முறுவலுடன் பதில் வருகிறது.
“என்னோட ஒத்தாசையும் எல்லார்க்கும் வேணும் இல்லையா?” என்று நகைச்சுவையுடன் கடமை உணர்வும் அன்பும் பொங்க சொல்கிறார்.

இந்த உறுதிப்பாட்டில் ஊறிய புன்னகை தான் இங்கே குடும்பங்களில் ஒருவராக நன்மதிப்புடன் இதயங்களை வென்றெடுக்கிறது! வெறும் வாய்ப்பேச்சுக்காக அல்ல, உண்மையில் ரமணி அத்தை, ரமணி ‘அத்தை’ தான்!

வாசகர்களே!

விமன்ஸ் வெப் ஒரு திறந்த வலைதளமாகும். இது பலவிதமான பார்வைகளை/கருத்துக்களை வெளியிடுகிறது. தனிப்பட்ட கட்டுறைகள் எல்லா நேரங்களிலும் தளத்தின் பார்வைகளையும் கருத்துகளையும் குறிக்காது.  ஏதேனும் கட்டுறையில் உங்களுக்கு தொடர்புடைய அல்லது மாறுபட்ட கருத்து இருந்தால் எங்கள் வலைதளத்தில் பதிவுசெய்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள்!

கருத்துக்கள்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 53,537 Views
All Categories