பெண் முன்னேற்றம் வீட்டில் இருந்தே துவங்குகிறது: பிரியங்கா சிவப்பிரகாசம் ஐ.ஏ.எஸ் பேசுகிறார்!

மாட்சிமை மிகுந்த 'ஐ.ஏ.எஸ்' பணியில் அமர்ந்திருக்கும் இளம் அதிகாரி பிரியங்கா சிவப்பிரகாசம், அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னோடி!

இந்திய ஆட்சிப் பணி எனப்படும் மாட்சிமை மிகுந்த ‘ஐ.ஏ.எஸ்’ பணியில் அமர்ந்திருக்கும் இளம் அதிகாரி பிரியங்கா சிவப்பிரகாசம், அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னோடி!

அகில இந்திய அளவில் 68 வது ரேங்க், தமிழகத்தில் 3 வது ரேங்க் என்று சாதித்த இந்த இளம் மங்கையுடனான தொலைபேசி வாயிலான பேட்டியின் சாரம் இதோ!

வணக்கம், பிரியங்கா. உங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளவும்.

என்னுடைய சொந்த ஊர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி. அங்கே உள்ள பாலவிஹார் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்த பின் சென்னையில் உள்ள அண்ணா யூனிவெர்சிட்டியின், ‘காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங், கிண்டி’ (CEG)யில் ‘பயோமெடிக்கல் என்ஜினியரிங்’ பட்டப்படிப்பு பயின்று வந்தேன்.

என்னுடைய கல்லூரி நாட்களில், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளில் ‘சிவில் சர்வீஸ்’ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் தன்னார்வத்துடன் இணைந்து பயின்று வந்தேன். ‘இது தான் எனக்கான பாதை’ என்று தெளிவாக உணர்ந்த நான், 2017 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பினை நிறைவு செய்தவுடன் ‘சிவில் சர்வீஸ்’ தேர்வுகளுக்கான பயிற்சியில் நம்பிக்கையுடன் முழுமூச்சாக இறங்கினேன். அந்த முயற்சி கைகூடியது.

உங்களுக்குள் இந்த உத்வேகம் உருவாக மூலகாரணமாக இருந்தது எது?

என்னுடைய குடும்பம், எனக்கு கிடைத்த வரம். என்னுடைய தாய், தந்தையர் இருவருமே அரசுப் பணியில் சிறப்புறப் பணியாற்றி வருபவர்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பண்டரக்கோட்டையில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார், அப்பா திருவாளர்.சிவப்பிரகாசம் அவர்கள். பண்ருட்டியில் போஸ்ட் மாஸ்டர் பணிவகிக்கும் அம்மா திருமதி.பரிமளா அவர்கள் தான் எனக்கு முன்னோடி. அம்மா, ‘பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும்’ என்ற கொள்கையை தானும் கடைபிடித்து, எனக்கும் முழுமையாக உணர்த்தியவர்.

பெற்றோருடன் பிரியங்கா

என்னுடைய இளைய சகோதரருக்கும் எனக்கும் நடுவில் எந்த வகையிலும் எங்கள் பெற்றோர் பாரபட்சம் காட்டியதே இல்லை!

நான் என்னுடைய கல்லூரியில் நடைபெற்ற, படிக்கும்போதே சிறந்த நிறுவனங்களில் நல்ல பணியினை உறுதி செய்யும் ‘கேம்பஸ் இன்டெர்வியூ’வில் பங்கேற்க வேண்டாம் என்று செய்த முடிவினை, முழுமனதுடன் ஆதரித்து, என்னை எனக்கு விருப்பமுள்ள சிவில் சர்வீஸ் பணிக்கான ஆயத்த முயற்சியில் இறங்க உற்ற துணையாய் இருந்தவர்கள், என் குடும்பத்தினர்.

ஒருமனதாக நான் இரண்டு வருடம் சென்னையிலேயே தங்கி பயின்று, சிவில் சர்வீஸ் தேர்வில் உயர்ந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற மூலகாரணம் என் குடும்பமே.

‘தவம் போல் அனைத்தையும் தவிர்த்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்’ என்ற கருத்து உண்மையா?

இதைப் பொறுத்த வரையில் சமநிலை என்பதே பிரதானம் என்று நான் கருதுகிறேன். படிக்கும் பொழுது மனமொன்றி படிக்க வேண்டும், அவ்வளவே. அதற்காக விளையாட்டு, வாசிப்பு என்று மனதிற்கு பிடித்தவற்றை தியாகித்து இதை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தெளிவாகத் திட்டமிட்டு, நேரம் ஒதுக்கி, மனம் குவிந்து படித்தால், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி என்பது சாத்தியமே.

உங்களைப் போன்றே சாதிக்கத் துடிக்கும் இளம் மாணவிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

நீங்கள் எளிமையான பின்னணியில் இருந்து வருபவராக இருக்கலாம். உங்களுடைய ஆங்கிலம் குறித்த ஒருவித தயக்கம் இருக்கலாம். ஆனால் இவை எதுவுமே உங்களுக்கு சாதிப்பதற்கு ஒரு தடை அல்ல.

நானும் இதே சூழ்நிலையில் இருந்து, படித்து, இன்று இந்த ஆட்சிப் பணியில் அமர்ந்துள்ளேன் என்கிற முறையில் உங்களுக்கு சொல்வது இதுவே. உங்கள் நம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகள்.

நம் சமூகத்தில் பெண் பிள்ளையை குடும்பப் பொறுப்பினை சுமப்பதையே முன்னிறுத்தி, அவர்களுடைய தனிப்பட்ட லட்சியங்களை பின்னிக்குத் தள்ளுவது இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், பெற்றோருக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

சமத்துவம், பெண் முன்னேற்றம் என்பது நிச்சயம் வீட்டில் இருந்தே துவங்குகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையாய் ஆதரவாய் நீங்கள் இருந்தால் உங்கள் வீட்டுப் பெண்களும் சாதிக்க முடியும்.

சமநிலையுடன் விருப்பு, பொறுப்பு என்று அனைத்தையும் கையாளும் திறனை வளர்த்துக் கொள்ளும் சூழலை உருவாக்கி கொடுத்தால், உங்கள் மகளும் ஆட்சிப் பணியில் அமர முடியும். முயற்சி திருவினையாக்கும்.

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 68,115 Views
All Categories