நலமுடன் வாழ வேண்டும் பெண்ணே!

மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர், Dr. வாணி ஷியாம்சுந்தர் அவர்கள், பெண்கள் நலமுடன் வாழ அவசியமான கூறுகளை எடுத்துரைக்கிறார்.

40 வருடங்களுக்கு மேலாக மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவராக பணியாற்றி வரும் Dr. வாணி ஷியாம்சுந்தர் அவர்கள், பெண்கள் நலம் சார்ந்த முக்கியமான கூறுகளை எடுத்துரைக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் மிகப் பிரபலமான கைனகாலஜிஸ்ட், Dr. வாணி ஷியாம்சுந்தர். 1979 ஆம் வருடம் துவங்கி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை என பல களங்களில், பல பெண்களுக்கு மகப்பேறு, பெண் நோயியல் என பல சூழல்களில் மருத்துவம் பார்த்தவர். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் வரை இது வரை பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு பிரசவம் பார்த்தவர்.

விமென்ஸ் வெப் வாசகியர்களுக்கென்றே பிரத்யேகமாக பெண்கள் நலம் பேண ஒரு மருத்துவராக அவருடைய அறிவுரை என்ன என்று அவரிடம் கேட்டிருந்தோம்.

மருத்துவர் என்பதையும் தாண்டி, ஒரு பெண்ணாக, தாயாக, நீங்கள் நலமுடன் வாழ அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட பரிந்துரைகள் இதோ:

பெண் குழந்தைகளுக்கு அவர்களது உடல் குறித்த புரிதல் அவசியம்

இன்றைய சூழல்களில், பெண் பிள்ளைகள் மிக இளம் வயதிலேயே பூப்பெய்தி விடுகின்றனர். இது குறித்த முறையான முழுமையான புரிதலை ஏற்படுத்த வேண்டியது அந்த பெண் குழந்தையின் தாய் அல்லது வீட்டில் உள்ள முதிர்ந்த பெண் உறவுகளின் கடமை ஆகும். தோழிகளிடமோ, இன்டர்நெட் மூலமோ, அவர்கள் ஏதாவது அரைகுறையாக அறிந்து கொள்வதை விட, தாயிடம் இருந்து அந்த பெண் குழந்தை இதை அறிந்து கொள்வது ஏற்புடையது.

இது அவளை, பூப்படைந்த பின் ஏற்படும் மன மற்றும் உடல் அளவிலான மாற்றங்களுக்கு தயார்ப்படுத்தும். இப்போதெல்லாம் 9-10 வயதுகளிலேயே இளம் பெண்பிள்ளைகளுக்கு மார்பக வளர்ச்சி போன்றவை ஏற்படும் தருணத்தில், அவர்களுக்கு மாதவிடாய் என்பது 28 நாள் சுழற்சியில் வயது வந்த பெண்களுக்கு இயல்பாய் ஏற்படும் ஒரு வளர்ச்சியின் அறிகுறி என்று புரிய வைத்தல் மிக அவசியம்.

இத்துடன், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், ஆண்-பெண் சேர்க்கை குறித்த அடிப்படை புரிதல் அளிப்பது நல்லது. இளம் பெண் பிள்ளைகளிடம் யாரேனும் பாலியல் ரீதியாக அத்துமீறாமல் தடுப்பதற்கு, இது தான் அத்துமீறல் என்று புரிந்து கொள்வதற்கு, இது குறித்த அறிவூட்டல் அந்த பெண்களுக்கு தேவை. நம் ஊரில் இது குறித்த சங்கோஜம் இன்றி, சொல்ல வேண்டிய பருவத்தில், தாய் தன் மகளுக்கு இதை நாசூக்காக எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.

பெண்ணுக்கு சத்தான உணவு மிக அவசியம்

பெண் உண்ணும் போது அவளுக்காக மட்டும் உண்பதில்லை, அவள் ஈன்றெடுக்கப் போகும் தலைமுறைக்காக உண்கிறாள் என்பதை முன்னிறுத்த வேண்டும்!

ஆண்கள் சாப்பிட்ட மிச்சத்தை உண்பது, பிள்ளைகள், மற்றவர்கள் வேண்டாம் என்று வைத்த உணவை உண்பது, இது எதுவும் பெண்ணின் உடல் நலத்திற்கு நல்லது அல்ல. பெண்ணுக்கு முழுமையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு மிகவும் முக்கியம். நேரத்தில் சரியான அளவில் சத்தான உணவை உண்ணும் பெண்கள் நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விளங்கி, ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்கி பராமரிக்க வல்லவர்கள்.

பெண்கள் துரித உணவுகளை தவிர்ப்பதும் மிக அவசியம். சத்தில்லாமல் வயிற்றை நிரப்பும் பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை இளம் வயது முதலே பெண் குழந்தைகள் தவிர்ப்பது நல்லது. இதை தவிர்ப்பதால் தேவையற்ற உடல் எடை கூடுதலையும் தவிர்க்க முடியும். இளம் பெண்களுக்கு PCOD (எ) கருப்பை நீர்க்கட்டி ஏற்பட இம்மாதிரி உணவுகளை உட்கொண்டு எடை கூடுதலும் ஒரு காரணம் என்று கண்டறியப் பட்டுள்ளது.

உங்கள் குழந்தைகள் இந்த ‘ஜங்க்’ வகை உணவுகளை உண்ணாமல் நீங்கள் தவிர்த்தீர்கள் என்றால் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வளர்வது சாத்தியம் ஆகும்.

பொதுவாகவே பெண்கள் இரத்தப்போக்கினால் எதிர்கொள்ளும் சோர்வு, இரத்தசோகை (எ) அனீமியா போன்ற உபாதைகளை நீங்கள் கீரைகள், பீட்ரூட், இன்ன பிற காய்கறிகள், முட்டை போன்ற சத்தான உணவுகளை உட்கொண்டு வந்தாலே தவிர்க்க முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தான் உங்கள் குடும்பத்தை தாங்குகிறீர்கள் என்பதை உணர்ந்து, அங்கீகரித்து, நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

தாய்மை அடைந்த பெண்ணுக்கு ஆரோக்கியமான உணவும் சூழலும் அத்தியாவசியம்!

பெண்கள் கருவுற்ற காலம் முதல், பிள்ளை பெற்று, பாலூட்டும் காலங்களிலும் அவளுக்கும் அவள் ஈன்ற பிள்ளைக்கும் ஆரோக்கியமான, அனுசரணையான சூழல் மிக அவசியம்.
‘போஸ்ட்-பார்ட்டம் டிப்ரெஷன்’ எனப்படும் மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வினை இதன் மூலம் வெகுவாக தவிர்க்கலாம்.

இதனால் தான் பெண்ணுக்கு பேறுகாலம் தாய்வீட்டில் என்ற வழக்கம் வந்தது – தாய் வீட்டில் அவளுக்கு அதிக அன்பு கிடைக்கும் என்ற அடிப்படையில்.

பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரையில் தாயின் அரவணைப்பும், திருமணம் ஆன பின் தாய் ஸ்தானத்தில் மாமியாரின் அன்பும் கிடைத்தால் அடுத்த தலைமுறை சிறப்பாய் வளரும் என்பது திண்ணம்.

ஆனால் காலம் காலமாக நம் சமுதாயத்தில் மாமியார்கள் மருமகள்களிடம் அன்போடு நடப்பது அரிதாகவே உள்ளது. பேரப்பிள்ளைகளிடம் அன்பை பொழியும் மாமியார்கள் இதை புரிந்து கொள்ளுங்கள்:
நீங்கள் உங்கள் மருமகளிடம் அன்போடு இருந்தால், அவள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறந்து, அவள் உங்களுக்கு அருமையான பேரப்பிள்ளைகளை ஈன்று அளிப்பாள்.
அவளுக்கு நல்ல உணவு, நல்ல சூழல் என்று தாயன்போடு அமைத்துக் கொடுங்கள். உங்கள் குடும்பமே இதனால் சிறந்து நிற்கும்.

(டாக்டரின் உரை தொடரும்…)

பட ஆதாரம்: Pexels.com

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,879 Views
All Categories