இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் பங்காற்றி சாதனை படைத்த பெண்கள்

இந்திய அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய, ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் சட்டசபையின் இடம்பெற்ற சாதனைப் பெண்களை நினைவு கூர்வோம்.

இந்த 72ஆவது குடியரசு தினத்தில், நம் நாட்டின் அரசியல் சாசன உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய, ஒருங்கிணைந்த இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபையின் இடம்பெற்ற சாதனைப் பெண்களை நினைவு கூர்வோம்.

உலகெங்கும் பெண்களுக்கான வாக்குரிமை போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவிலும் பெண்களுக்கு ஓட்டுரிமை மற்றும் அரசியல் சார்ந்த ஆட்சி அதிகாரப் பொறுப்புகளில் அமர உரிமை இல்லாத காலங்களில், அவற்றை வேண்டி நிகழ்ந்த போராட்டத்திற்கு வித்திடப் பட்டது நமது தமிழகத்தில், சென்னை அடையாறில் தான்.

1917 இல் மார்கரெட் கசின்ஸ் அவர்களால் அடையாறு பகுதியில் ‘விமன்ஸ் இந்தியன் அசோசியேஷன்‘ (WIA) எனப்படும் இந்திய மாதர் சங்கம் தொடங்கப் பட்டது. இந்த அமைப்பின் தலைவராக அன்னி பெசன்ட் அம்மையார் தேர்ந்தெடுக்கப் பட்டார். இது தான் முதல் படி.

மெல்ல மெல்ல வேகமெடுத்த இந்த போராட்டம், கவிக்குயில் சரோஜினி நாயுடு, டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, ஸ்ரீமதி. ஸ்ரீரங்கம்மா, உமா நேரு, திருமதி Z. லாசரஸ், திருமதி. மஸூல்-அல்-ஹக், ஹீரா பாய் டாடா முதலானோர் இணைய நாடெங்கும் பரவிய உரிமைக் குரலாக உருவெடுத்தது.

இதன் பலனாக, 1946 ஆம் ஆண்டில், ஒருங்கிணைந்த இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டசபையின் 389 உறுப்பினர்களுள் 15 பெண்களும் இடம்பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கத்தில் குறிப்பிடும் படியாக பங்களித்தனர்.

இந்த குடியரசு தினத்தில், நாம் மறந்துபோன அந்த 15 சாதனைப் பெண்களையும், நம் நாட்டின் இறையாண்மை சார்ந்து அவர்கள் ஆற்றிய முக்கிய பங்களிப்பையும் நுகர்வோம்.

அம்மு சுவாமிநாதன்

கேரள பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த அம்மு சுவாமிநாதன் அடையாறு இந்திய மாதர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவர் 1946 இல் மெட்ராஸ் தொகுதியில் இருந்து இந்திய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாட்சாயணி வேலாயுதன்

கொச்சினில் உள்ள போல்கட்டி தீவில் பிறந்த இவர், கொச்சின் சட்டமன்ற சபைக்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு, 1946 இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் ஒரே தலித் உறுப்பினரும் ஆவார்.

பேகம் ஐசாஸ் ரசூல்

சுதேச குடும்பத்தில் பிறந்த பேகம் ஐசாஸ் ரசூல், அன்றைய இந்திய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே முஸ்லீம் பெண் உறுப்பினர் ஆவார். 1937 இல் நடந்த தேர்தலில், உ.பி. சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1952 இல் மாநிலங்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 1969 முதல் 1990 வரை உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

துர்காபாய் தேஷ்முக்

ராஜமுந்திரியில் பிறந்த இவர் 12 வயதிலேயே ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவர் ஆவார். 1930
இல் ஆந்திர கேசரி டி பிரகாசத்துடன் சேர்ந்து, மெட்ராஸ் உப்பு சத்தியாக்கிரகத்திலும் பங்கேற்றார். 1936 ஆம் ஆண்டில், இவர் நிறுவிய ஆந்திர மகிளா சபா பின்னர் மெட்ராஸ் மாநகரில் கல்வி மற்றும் சமூக நலனுக்கான ஒரு சிறந்த நிறுவனமாக வளர்ச்சி அடைந்தது பெருமைக்குரியது.

ஹன்சா ஜிவ்ராஜ் மேத்தா

பரோடா மனுபாய் நந்தசங்கர் மேத்தாவின் திவானுக்கு மகளான ஹன்சா மேத்தா இங்கிலாந்தில் பத்திரிகையியல் மற்றும் சமூகவியல் பயின்றவர் ஆவார். கல்வியாளரும் சீர்திருத்தவாதியுமான இவர், குஜராத்தி மொழியில் குழந்தைகளுக்காக பல புத்தகங்களை எழுதியதுடன், கல்லிவர்ஸ் டிராவல்ஸ் உட்பட பல ஆங்கிலக் கதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். 1926 இல் பம்பாய் பள்ளிகள் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1945-46 இல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவரும் ஆனார்.

கமலா சௌத்ரி

லக்னோவில் வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கல்வியைத் தொடர போராடிய லட்சிய மங்கை. ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்த தனது குடும்பத்திலிருந்து விலகி, தேசியவாதிகளுடன் இணைந்த இவர், 1930 இல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றவர் ஆவார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 54 வது அமர்வில் துணைத் தலைவராக அமர்ந்த இவர், எழுபதுகளின் பிற்பகுதியில் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு புனைகதை எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

லீலா ராய்

அசாம் பகுதியை சேர்ந்த இவர் அனைத்து வங்காள மகளிர் வாக்குரிமைக் குழுவின் உதவிச் செயலாளராக இருந்தவர். பெண் உரிமைக்காக பல முயற்சிகள் எடுத்தவர். 1923 ஆம் ஆண்டில், தனது நண்பர்களுடன், ‘தீபாலி சங்கம்’ என்ற அமைப்பினை நிறுவி, பல பள்ளிகளை திறந்து வைத்தார். அரசியல் விவாத மையங்களாக மாறிய இந்த பள்ளிகளில் முன்னணி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பின்னர், 1926 இல், வங்கதேசத்து தாக்கா மற்றும் கொல்கத்தாவில் மாணவியருக்கான சத்ரி சங்கத்தையும் நிறுவினார் லீலா ராய். ஜெயஸ்ரீ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார்.

மாலதி சவுத்ரி

மாலதி சவுத்ரி 1904 ஆம் ஆண்டில் அப்போதைய கிழக்கு வங்காளத்தில், இப்போதைய பங்களாதேஷில் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். 1921 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், சாந்திநிகேதனுக்கு அனுப்பப்பட்ட இவர், அங்கு விஸ்வ-பாரதியில் அனுமதிக்கப்பட்டார். உப்பு சத்தியாக்கிரகத்தின் போது, தனது கணவருடன் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து பங்கேற்றவர் ஆவார்.

பூர்ணிமா பானர்ஜி

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் இந்திய தேசிய காங்கிரஸ் குழுவின் செயலாளராக இருந்தவர், பூர்ணிமா பானர்ஜி. 1930-40 களில் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் நின்ற உத்தரபிரதேசப் பெண்களின் இவரும் ஒருவர்.
சத்தியாக்கிரகம் மற்றும் ‘க்விட் இந்தியா’ இயக்கத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட இவர் சட்டசபையில் ஆற்றிய உரைகள், மிக முக்கியமானவை. சோஷியலிச சித்தாந்தத்திற்கான இவரது உறுதியான அர்ப்பணிப்பு, குறிப்பிடத்தக்க ஒன்று. இத்துடன் இவர் நகரக் குழுவின் செயலாளராகவும், தொழிற்சங்கங்கள், விவசாயிகள் நலக் கூட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்வோருக்கான ஒருங்கிணைந்த முன்னேற்றம் மற்றும் செயல்பாடு போன்ற சமூகப் பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவர் ஆவார்.

ராஜ்குமாரி அம்ரித் கவுர்

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் சுகாதார அமைச்சர் ஆவார். மேலும் பத்து ஆண்டுகள் அதே பதவியை வகித்தார். இங்கிலாந்தின் டார்செட் பகுதியில் உள்ள ஷெர்போர்ன் பெண்கள் பள்ளியில் படித்த இவர், மகாத்மா காந்தியின் செயலாளராக 16 ஆண்டுகள் இருந்தவர் ஆவார்.
இவரே ‘ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஒப்பி மெடிக்கல் சயின்சஸ்’ என்றறியப் படும் நம் நாட்டின் புகழ்பெற்ற ‘எய்ம்ஸ்’ (AIIMS) மருத்துவ கழகத்தின் நிறுவனர் ஆவார். பெண்கள் கல்வி, விளையாட்டுகளில் பங்கேற்பதுடன் அவர்களது உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர் இவர்.

ரேணுகா ரே

ரேணுகா ரே லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பி.ஏ. பட்டம் பெற்றவர் ஆவார். இந்தியாவில் பெண்களுக்கு சட்டரீதியாக பல தரப்புகளில் உரிமையின்மை குறித்து விசாரித்து அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி எடுத்து ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்தவர் இவரே. 1943 முதல் 1946 வரை மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் சட்டசபை மற்றும் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார், இவர். 1952-57 இல், மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சராக பணியாற்றிய இவர், 1957 ஆம் ஆண்டிலும் பிறகு 1962 ஆம் ஆண்டிலும் மால்டாவில் மக்களவை உறுப்பினராக இருந்தார்.

சரோஜினி நாயுடு

‘நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா’ என்றும் அழைக்கப்படும் கவிக்குயில் சரோஜினி நாயுடு, இந்தியாவில் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் அரசியல் ரீதியாக, அதிகாரப் பூர்வ உரிமைகள் பெற்று தந்தவர்களுள் தனியிடம் பிடித்தவர். அபார மொழிப் புலமை பெற்ற இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவரான இவரே நம் நாட்டில் ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.

சுசேதா க்ரிபளானி

ஹரியானாவின் அம்பாலா நகரில் பிறந்த சுசேதா க்ரிபளானி, 1942 இல் ‘க்விட் இந்தியா’ போராட்டத்தில் பங்கேற்றவர்களுள் குறிப்பிடத் தக்கவர் ஆவார். 1940 இல் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவை நிறுவியவர் இவரே. சுதந்திரத்திற்குப் பிறகு, புதுதில்லி எம்.பி.யாகவும் பின்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் ‘தொழிலாளர், சமூக மேம்பாடு மற்றும் தொழில்துறை’ அமைச்சராகவும் பணியாற்றிய சிறப்பு இவருக்கு உண்டு.

விஜயலக்ஷ்மி பண்டிட்

அலகாபாத் நகரில் பிறந்த விஜயலக்ஷ்மி பண்டிட், ஜவஹர்லால் நேருவின் சகோதரி ஆவார். 1932-1933, 1940 மற்றும் 1942-1943 ஆகிய மூன்று வெவ்வேறு காலங்களில் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டவர்.
அலகாபாத் நகராட்சி வாரியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தொடங்கிய இவரது அரசியல் வாழ்க்கை, 1936 ஆம் ஆண்டில், ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்றத்திற்குத் தேர்வு, 1937 ஆம் ஆண்டில் இந்தியாவின் இன்டெரிம் தன்னாட்சி அரசின் பொது சுகாதார அமைச்சர் பொறுப்பு என்று தொடரந்தது. இந்திய அமைச்சரவையில் அமைச்சராக அமர்ந்த முதல் இந்தியப் பெண் இவரே.

அன்னி மஸ்கரீன்

அன்னி மஸ்கரீன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். திருவிதாங்கூர் மாநில காங்கிரஸ் செயற்குழுவில் அங்கம் வகித்த முதல் பெண் இவர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்திய தேசத்துடன் ஒருங்கிணைத்த தலைவர்களில் ஒருவராக இருந்த இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அயராது உழைத்த பெண்மணி ஆவார்.

தலையங்கப் பட ஆதாரம்: CWDS ஆர்க்கிவ்

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,825 Views
All Categories