புத்தாண்டில் புதிது செய்வோம்!

இந்தப் புத்தாண்டில் பெண்களாகிய நாம் மேற்கொள்ளப் போகும் சுய பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் கௌரவத்தோடு நாம் வாழ்வதற்கான அடித்தளம் ஆகும்!

இந்தப் புத்தாண்டில் பெண்களாகிய நாம் மேற்கொள்ளப் போகும் சுய பராமரிப்பு, ஆரோக்கியம் மற்றும் கௌரவத்தோடு நாம் வாழ்வதற்கான அடித்தளம் ஆகும்!

புதியதோர் ஆண்டு பிறந்து விட்டது. எவ்வளவோ சோதனைகளுக்கு நடுவிலும், 2020 என்கிற மறக்க முடியாத, மறுக்க முடியாத காலகட்டத்தை நாம் நல்லபடியாக கடந்து, ‘தக்கன பிழைக்கும்‘ என்ற டார்வின் கூற்றின்படி தப்பிப் பிழைத்து இருக்கிறோம் என்பது மெய்யே!

எவ்வளவோ மாற்றங்களை கண்ட சென்ற ஆண்டிலும் மாறாத சில விஷயங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று தான்,  ‘78% அம்மாக்கள், தங்கள் குடும்பத்தினரின் நலத்தை, ஆரோக்கியத்தை முன்நிறுத்தி தன்னைத் தானே சரிவர கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்’ என்கிற உலகளாவிய ஒரு உண்மை.

வீட்டில் உள்ளவர்களுக்கு வேளைக்கு உணவு, மருந்து சார்ந்த தேவைகளையும், பிள்ளைகளின் தடுப்பூசி தொடங்கி ஹோம்வொர்க் வரையிலான எல்லா வேலைகளையும் செய்யும் பல பெண்களுக்கு அவ்வப்போது தாங்கள் சாப்பிடவும் மருந்து உட்கொள்ளவும் கூட மறந்து போவது நம் ஊரில், நம் வீடுகளில் கேட்டறியாத விஷயம் இல்லை. தாய்மை, தியாகம் என்று சொல்லி இதைப் பற்றி சிலாகித்தாலும், இது கவனமின்மையே.

இந்த கவனமின்மை முதுமைக் காலத்தில் பெண்களாகிய நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெருமளவு பாதித்து, நாம் பிறரை எதிர்பார்த்து, அவர்களுக்கு பாரமாக இருக்கும்படியான சூழலை ஏற்படுத்தி விடக்கூடும் என்பதை மறுக்க முடியுமா?

இன்று நம்மை நாம் நன்றாக கவனித்து கொள்வது, நாளை நாம் பிறருக்கு சுமையாக இல்லாமல், கௌரவத்தோடு வாழ்வதற்கான அச்சாரம் ஆகும்.

முழுமனதுடன் இதை உணர்ந்து, 2021-இல் அடியெடுத்து வைக்கும் பெண்களாகிய நாம் விருப்பத்துடன் கடைபிடிக்க வேண்டிய ஐந்து தீர்மானங்கள் இதோ:

1. இந்த வருடம் முதல் என்னையும் நான் நன்றாக கவனித்துக் கொள்வேன்.

பெண்கள் நேரத்தில் சாப்பிட்டு, நேரத்தில் தூங்குவது அத்தியாவசியத் தேவை, ஆடம்பரம் அல்ல. ‘பின் தூங்கி, முன் எழுபவள் பெண்’, ‘எல்லோரும் சாப்பிடப் பிறகே பெண் சாப்பிட வேண்டும்’, போன்ற பழைய பழக்கங்களை கைவிடவேண்டிய நேரம் இது.

குழந்தைகள் பெரியவர்களை பார்த்து, அவர்கள் செய்வதில் இருந்தே அனைத்தையும் கற்றுக் கொள்கின்றனர். நேரத்தில் சாப்பிட்டு, நேரத்தில் தூங்கி, தங்களது உடல் மன ஆரோக்கியத்திற்கு மதிப்பளிக்கும், சுய பராமரிப்பில் கவனம் செலுத்தும் தாயை பார்த்து வளரும் பிள்ளைகள், ‘அவரவரது வாழ்க்கைத் தரத்திற்கு அவரவரே பொறுப்பு’ என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

இப்படி வளரும் குழந்தைகளுக்கு சுய ஒழுக்கம் என்பது தானாகவே, இயல்பாகவே பிடிபட்டு விடுகிறது. தங்கள் வேலைகளை தாங்களே செய்யவும் இந்த குழந்தைகள் பழகிக் கொள்கிறார்கள்.

ஆக, மிகச் சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்க, நீங்கள் உங்கள் மீது காட்டும் அக்கறை ஒரு அடித்தளமாக அமைந்து விடுகிறது!

2. எனக்கே எனக்காக நேரம் ஒதுக்குவேன்!

புகழ்பெற்ற அமெரிக்க உளவியல் நிபுணர் எம்மா பென்னட் சொல்கிறார்: “பெண்கள் அவரவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். நம்மை நாமே கவனித்துக் கொள்ளாவிட்டால், மனக்குறை, மனக்கசப்பு மற்றும் வெறுமை போன்ற உணர்வுகள் ஏற்படக்கூடும்.

இதைத் திருத்தி அமைக்க, பெண்ணாகிய நீங்கள் தினமும் உங்களுக்கே உங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு பிடித்ததை,உங்களுக்காக மட்டுமே செய்யுங்கள். எழுத்து, பாட்டு, வாசிப்பு, உடற்பயிற்சி, குட்டித் தூக்கம் என எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் – தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், உங்களுக்காகவே பிரத்யேகமாக செய்யுங்கள்.

தினமும், குறைந்த பட்சம் 20 நிமிடமாவது இதற்காக ஒதுக்குங்கள். வேறெதுவும் செய்ய முடியாவிட்டாலும் அந்த 20 நிமிடம் நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள். வெளியில் செல்ல இயலாவிட்டால் வீட்டிற்குள்ளேயே 20 நிமிடம் ‘8’ வடிவத்தில் நடைபழகிப் பாருங்கள். தொடர்ந்து குறித்த நேரத்தில் இதை நீங்கள் தினமும் செய்து வந்தால் உங்கள் உடல், மன உறுதி மேம்படுவது திண்ணம்!

3. தியானம்!

உடலுக்கு உடல் பயிற்சி போல மனம் வளம்பெற தியானம் உதவுகிறது. தியானம் என்பதை மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த ஒன்றாக பார்க்க வேண்டியது இல்லை. அமைதியான சூழலில், எண்ண ஓட்டத்தை ஒருநிலைப்படுத்தி, உங்கள் சுவாசத்திலோ, உங்களுக்கு பிடித்த இசையிலோ லயித்து மனதை ஒருமுகப் படுத்தும் முயற்சியாக நீங்கள் இதை செய்து பார்க்கலாம்.

‘தியானம் பிடிபடாது’ என்று நினைப்பவர்கள், மண்டலா ஆர்ட், ஓவியம், அல்லது பெரியவர்களுக்கான ‘கலரிங்‘ எனப்படும் வண்ணம் தீட்டும் பயிற்சிகளில் ஈடுபடலாம். இல்லா விட்டால் செடிகளை பராமரிப்பதிலோ, செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலோ, ஏதேனும் சமூக விழிப்புணர்வு அல்லது சேவை சார்ந்த பணியிலோ முழுமையான கவனத்துடன் ஈடுபடலாம். இவை யாவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தியானப் பயிற்சியை போன்றவை ஆகும்.

மனம் ஒன்றுபட மண்டலா ஆர்ட்

4. எது அனாவசியமோ அதற்கு ‘நோ’ சொல்வேன்

இந்திய பெண்களுக்கு சிறு வயதிலேயே எதிர்த்து பேசக்கூடாது, மறுத்துப் பேசக்கூடாது என்பது கற்பிக்கப் பட்டு விடுகிறது. யாராவது வேலை சொன்னால், தாங்கள் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு, கேட்டவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்திருக்கும் நம் வீட்டுப் பெண்களை கண்டே நாம் வளர்ந்திருக்கிறோம்.

ஆனால் இன்றைய பரபரப்பான சூழலில், பெண் உத்தியோகத்தில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, எல்லா விஷயங்களிலுமே அவளுக்கான வேலைப்பளு முன் எப்போதும் விட அதிகரித்து இருக்கிறது என்பது உண்மை.

இந்த நேரத்தில், வீட்டிலோ பணியிடத்திலோ, நீங்கள் ‘நோ’ சொல்லிப் பழகுவது உங்களுக்கும், உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் மிகவும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். எப்படி என்றால்:

  • எது அவசியம், எது அனாவசியம் என்று வேலைகளை, உங்கள் மீது சுமத்தப்படும் கோரிக்கைகளை பகுத்துணர உங்களைத் தூண்டுகிறது.
  • செய்ய வேண்டியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கவும், உங்கள் நேரத்தை மிகவும் திறம்பட நிர்வகிக்கவும் இது உதவுகிறது.
  • அவரவர்களே செய்து கொள்ளக் கூடிய வேலைகளை அவர்களிடமே விட்டு விடக்கூடிய வாய்ப்பை அளிக்கிறது.
  • இதன் மூலம் உங்களை சுற்றி உள்ளவர்கள், அதிலும் இளைய சந்ததியினர், சுயசார்புடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட இது நிச்சயம் உதவுகிறது.
  • குறிப்பாக, குழந்தைகளுக்கு ஆடம்பரம் எது, அவசியம் எது என்று உணர்வதற்கு இது உதவுகிறது.
  • உங்கள் உணர்வுகளுக்கும் நேரத்திற்கும் உழைப்பிற்கும் மரியாதை கிடைக்கும் சூழல் உருவாகிறது.

5. நேர்மறை எண்ணங்களுக்கும் நன்றியுணர்வுக்கும் ‘யெஸ்’ சொல்வேன்!

உங்களுக்காக நீங்கள் நன்றி சொல்லிக் கொள்ளுங்கள் – உங்கள் திறமைக்காக, உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் நண்பர்களுக்காக, உங்கள் ஆரோக்கியத்திற்காக, உளமார நன்றி சொல்லுங்கள்.

தினமும் நீங்கள் காலை தூங்கியெழும் நேரத்திலோ, இரவு உறங்கப் போகும் சமயத்திலோ அல்லது குளிக்கும் வேளையிலோ, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள் – நீங்கள் சிறப்பாக செய்த ஏதோ ஒரு விஷயம், அல்லது பாரட்டப் பெற்ற ஏதோ ஒரு நிகழ்வு – சிறியதோ, பெரியதோ, அதை எண்ணி, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

இப்படியாக நீங்கள் நேர்மறையான அதிர்வுகளை உங்களுக்குள் தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

இன்று முதல், விருப்பத்துடன் உங்களை நீங்களே பராமரிக்கத் தொடங்குங்கள். மனமும் உடலும் படிப்படியாக மேலும் சீரடைவதை நீங்களே உணர்ந்து மகிழுங்கள்!

வாருங்கள், மகிழ்வோம்.  வாழ்வோம், வாழ்விப்போம்!

(தலையங்கப் புகைப்படம் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 66,264 Views
All Categories