டாக்டர் V. சாந்தா : இந்தியாவின் புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு சகாப்தம்

புற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாடு, புற்றுநோயியல் குறித்த ஆராய்ச்சிக்கென தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், டாக்டர் V. சாந்தா

60 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாடு, புற்றுநோயியல் குறித்த ஆராய்ச்சிக்கென தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், டாக்டர் V. சாந்தா.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை என்றவுடன் நினைவுக்கு வரும் டாக்டர் V. சாந்தா அவர்களது மறைவு, நாட்டில் பலரையும் வாடச் செய்துள்ள நிகழ்வு.

இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை அளிப்பவர்களுக்கு ஒரு முன்னோடியாக, தன் வாழ்க்கையை மருத்துவச் சேவைக்கென்றே அர்ப்பணித்துக் கொண்ட இந்த மங்கையர்குல மாமணியை நினைவு கூரும் ஒரு எளிய காணிக்கையே இது.

சேவையில் நாட்டம்

சென்னை, மயிலையில் பிறந்த 1927ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற சர். C.V.ராமன் உட்பட மேதைகள் பலர் உதித்த குடும்பத்தில் பிறந்தார், டாக்டர் V. சாந்தா. 1949ஆம் ஆண்டில் (M.B.B.S.) பட்டம் பெற்ற இவர், 1952 ஆம் ஆண்டில் மகளிர் மருத்துவம் சார்ந்த D.G.O. பட்டம் பெற்று 1955 ஆம் ஆண்டில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் எம்.டி.,(M.D.,) பட்டமும் பெற்றவர் ஆவார்.

அப்போதைய மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (தற்போதைய TNPSCயின் முன்னோடி) தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் V.சாந்தா அவர்களுக்கு புகழ்பெற்ற மெட்ராஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பெருமைக்குரிய அசிஸ்டண்ட் சர்ஜன் பதவியில் அமர மெட்ராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும், 1954ஆம் ஆண்டில் மகளிர் இந்திய சங்கத்தின் புற்றுநோய் நிவாரண நிதியம் (Women’s Indian Association Cancer Relief Fund) நிறுவிய, அன்றைய நாளில் பெரிய அளவில் அறியப்படாததாக இருந்த புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திலேயே மனமுவந்து இணைந்தார், அவர்.

நோய் தணிக்கும் பணியே வாழ்வாய்…

அன்று தொடங்கி தன் வாழ்வை புற்றுநோய் நிவாரண ஆராய்ச்சிக்கென அர்ப்பணித்துக் கொண்டார், டாக்டர் V. சாந்தா.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் நோயாளிகளை முறையாக கவனிப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும், நோயைப் பற்றிய ஆய்வு, அதன் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, புற்றுநோயியல் அறிவியலின் பல்வேறு அம்சங்கள் குறித்த ஆராய்ச்சி என தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் வெறும் 12 படுக்கைகள் மட்டுமே கொண்ட ஒரு சிறு மருத்துவமனை, இன்று சர்வதேச அளவிலான ஒரு முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாக வளர்ந்து விஸ்தரித்து நிற்பதற்கு டாக்டர் V. சாந்தா ஒரு முக்கிய காரணமாவார்.

இவர், கடந்த மார்ச் 2005 வரை உலக சுகாதார மையத்தின் (WHO) புற்றுநோய் சார்ந்த ஆலோசனைக் குழுவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர, மாநில, தேசிய அளவிலான இன்னபிற குழுக்களிலும் முக்கியப் பதவிகளை வகித்திருக்கிறார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை எனப்படும் ஐ.சி.எம்.ஆர் (ICMR) பணிக்குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

விருதுகள் வந்தாலும் மாறாத எளிமை

இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் (88-90) தலைவராகவும், புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசிய மற்றும் பசிபிக் கூட்டமைப்பு அமைப்புகளின் தலைவராகவும் (97-99), 15 வது ஆசிய மற்றும் பசிபிக் புற்றுநோய் மாநாட்டின் (1999) தலைவராகவும் இருந்திருக்கிறார். பல அறிவியல் சர்வதேச கூட்டு நிகழ்ச்சிகளை முன்னின்று நிகழ்த்தியும் பங்கேற்றும் வந்துள்ளார்.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு சார்ந்து அவர் செய்த பங்களிப்புக்காக பொது மற்றும் உத்தியோகபூர்வ அமைப்புகளின் பல விருதுகளைத் தவிர, முக்கிய தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார் டாக்டர் V. சாந்தா. பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளும் ‘ஆசிய நோபல் பரிசு’ என்றறியப் படும் ‘ரமோன் மகசேசே’ விருதும் பெற்ற தங்கப் பெண்மணி இவர்.

அறுபது தாண்டியும் ‘ரிட்டையர்மெண்ட்’ தேடாமல், எண்பது வயது தாண்டியும் பல அறுவை சிகிச்சைகளை பிழையின்றி செவ்வனே நடத்தித் தந்து, அடையாறு மருத்துவமனையின் ஒரு ஓரத்திலேயே ஒரு சிறு அறையில் தங்கிக் கொண்டு நோய் தணிப்பதையே தன் கடமையாக எண்ணி வாழ்ந்து வந்துள்ளார்.

இலவச சிகிச்சை, மருந்துகளுக்கு வரிவிலக்கு

ஒரு கட்டத்தில், புற்றுநோய் மருந்துகளின் விலை கட்டுக்குள் அடங்காமல் ஏறிக்கொண்டே போன நேரத்தில், நோயினால் பாதிக்கப் பட்டு வாடும் எளியோரின் குரலாக, உரிய துறையின் மத்திய அமைச்சரை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரவழைத்து அங்குள்ள குழந்தைகள் வார்டு பகுதிக்கு அழைத்துச் சென்று உண்மை நிலைமையை விளங்கச் செய்தார், டாக்டர் V. சாந்தா. இதன் பின்னரே நம் நாட்டில் புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாறு புற்றுநோய் மருத்துவ வளாகத்தில் கிட்டத்தட்ட 60% பேருக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிக்க ஓய்வின்றி முயன்று வழிவகுத்தவரும் இவரே.

தமிழ்நாடு புற்றுநோய் பதிவகம் (Tamil Nadu Cancer Registry Project (TNCRP)) போன்ற திட்டங்கள் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த இறுதி வரையில் செயல்பட்டு வந்தார், டாக்டர். V. சாந்தா.

தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி பத்திரிகைகளில் 95க்கும் மேற்பட்ட உயர்தர ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டதுடன், புற்றுநோயியல் புத்தகங்களுக்கு பங்களித்தும், அறிவார்ந்த பல விரிவுரைகளையும் நிகழ்த்தி, தனக்கு பிந்தைய தலைமுறையினருக்கும் தான் அறிந்த அனைத்தையும் கற்றறிவித்துள்ளார், டாக்டர் V. சாந்தா.

“இன்றைக்கு செய்கிற தவறுகள் தான், எதிர்காலத்தில் நோய்களாக வந்து தாக்கும். கொழுப்புச்சத்து அதிகம் உள்ள ஆகாரங்களை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்வதுடன் சரியான ஊட்டச்சத்து விகிதத்தில் ‘பேலன்ஸ்ட் டயட்’ எனப்படும் சீரான உணவு முறைகள், உடற்பயிற்சி என வாழ்க்கைமுறையை சீரமைத்துக் கொள்ள வேண்டும்” என்பதே அவர் நமக்கு விட்டுச் சென்ற செய்தியாகும்.

அவரது சொற்களை பின்பற்றி செல்வத்துள் செல்வமாம் உடல் மற்றும் மனநலம் பேணி நோயின்றி வாழ்வோமாக.

பட ஆதாரம்: விக்கிப்பீடியா

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 67,536 Views
All Categories