“எல்லாம் நல்லவிதமாக போய்க்கொண்டிருக்கும் போது, விவசாயத்தில் இறங்க வேண்டிய அவசியம் என்ன?”

சென்னையின் புறநகர் பகுதியில் இயற்கை விவசாயத்தால் விளைந்து நிற்கும் தாவரங்கள் நிறைந்த 'கல்பவிருக்ஷா ஃபார்ம்ஸ்' பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கல்பனா மணிவண்ணன்.

சென்னையின் புறநகர் பகுதியில் இயற்கை விவசாயத்தால் விளைந்து நிற்கும் தாவரங்கள் நிறைந்த ‘கல்பவிருக்ஷா ஃபார்ம்ஸ்’ பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கல்பனா மணிவண்ணன்.

கோவிட்-19 லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போதும், கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட வேண்டி வந்தபோதும் பலர் கலங்கியது இந்த ஒரு விஷயத்தை குறித்து தான்: ‘சமைத்து உண்பதற்கான காய்கறி இத்யாதிகளை எங்கிருந்து பெறுவது?’

 இந்த வகையில் இது குறித்து வருந்தாத ஒருவர் சென்னையில் இருந்திருக்கிறார் – அவர் தான் கல்பனா மணிவண்ணன். தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும், வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய சஸ்டைனபிள் வீட்டு உபயோகப் பொருட்களையும் தானே தயாரித்து அதிலேயே அழகாக அத்தியாவசிய தேவைகளைக் கடந்து வந்திருக்கிறார் கல்பனா!

‘கல்பவிருக்ஷா’ பிறந்த கதை

சென்னையின் புறநகர் பகுதியில், அரை ஏக்கர் பரப்பளவில் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தால் விளைந்து நிற்கும் தாவரங்கள் நிறைந்த ‘கல்பவிருக்ஷா ஃபார்ம்ஸ்’ பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கல்பனா.

‘கல்பவிருக்ஷா’வில் விளைந்த காய்கறி வகைகள்

எவ்வளவோ தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் போது மனமுவந்து ஆர்கானிக் ஃபார்மிங் எனப்படும் இயற்கைமுறை விவசாயத்தில் முனைப்புடன் இறங்கி இன்று தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சென்னையில் ஒரு முன்னணி பள்ளியில் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்த கல்பனா, அவரது வேலையை விடுத்து முழுநேர விவசாயத்தில் இறங்க முடிவு செய்த போது, “எல்லாம் நல்லவிதமாக போய்க்கொண்டிருக்கும் போது, விவசாயத்தில் இறங்க வேண்டிய அவசியம் என்ன?” என்று பல குரல்கள் எழுந்தன.

என் கணவரும் பிள்ளைகளும் என் மீது முழு நம்பிக்கையுடன் என்னை ஊக்குவித்து துணை நின்றார்கள். என்னால் முழு மனதோடு விவசாயத்தில் இறங்க முடிந்தது”, என்று மகிழ்வுடன் நினைவுகூர்கிறார், கல்பனா.

“இப்பொழுது இருக்கும் இந்த அதிவேக வாழ்க்கை முறையில், ‘தரமான உணவுகள் சந்தையில் உள்ளதா’, ‘என் குடும்பமும் நானும் சத்தான, தரமான உணவினை உண்கிறோமா’ போன்ற கேள்விகளுக்கு பதிலாக உருவானதே ‘கல்பவிருக்ஷா ஃபார்ம்ஸ்'”, என்கிறார் கல்பனா.

சஸ்டைனபிள் லிவிங்!

அத்துடன் கல்பனாவின் தேடல் நின்றுவிடவில்லை. அடுத்த கட்டமாக கல்பனா, ‘பேண்தகுநிலை‘ எனப்படும் சஸ்டைனபிள் (sustainable) ஆக வாழும் வழிகளை கண்டறிந்து செயல்படுத்தி அதிலும் வெற்றி கண்டார்.

நம் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல ரசாயனங்களின் உபயோகத்தை இவ்விதமாக வெகுவாக குறைக்க முடியும் என்பதால் இந்த ‘சஸ்டைனபிள் லிவிங்’ முறை இப்போதைய காலங்களில் அறிய வேண்டிய ஒன்றாகிறது.

குறைந்த பிளாஸ்டிக் உபயோகம், இயற்கைக்கு ஊறு விளைவிக்காமை, பொறுப்பான கழிவு மேலாண்மை (responsible waste management), முடிந்த அளவு வீட்டிற்கு தேவையான கிளீனிங் பொருட்கள் மற்றும் வினீகர் போன்றவற்றை கடையில் விலை கொடுத்து வாங்காமல், வீட்டில் உள்ள ஆரஞ்சு, ஆப்பிள் ஆகியவற்றின் பழத்தோல் கொண்டே உருவாக்குதல், என பன்முகம் கொண்ட இந்த ‘சஸ்டைனபிள் லிவிங்’ முறையை ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்றுவித்தும்  வருகிறார், சஸ்டைனபிளிட்டி பயிற்றுனர் ஆகவும் பரிணமிக்கும் கல்பனா. இத்துடன் சமையல் வகுப்புகளையும் இ-கோர்ஸ்களாக எடுத்து வருகிறார்.

தற்போதைய கோவிட்-19 சூழலில் ஆன்லைன் வொர்க்-ஷாப் எனப்படும் பயிற்சிப் பட்டறைகள் மூலம் பலர் இவரிடம் இந்த வழிமுறைகளை பயின்று வந்துள்ளனர்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவரது பண்ணை வீடு சூரிய ஒளியால் இயக்கப் படும் ‘சோலார் பவர்’ கொண்டு இயங்குவது, என்பது தான்!

பாராட்டுகளும் விருதுகளும்

ஆர்கானிக் விவசாயம், மறுசுழற்சி எனப்படும் ரீ-சைக்ளிங், இயற்கை வளங்களைப் பேணுதல், சமையல் கழிவுகள் ஆகியன கொண்டே வீட்டு உபகரணப் வஸ்துக்களையும் வேளாண்மைக்கு தேவையான இயற்கை உரங்களையும் உருவாக்கிக் கொள்வது என பல வகையில் தான் கசடறக் கற்று, கற்பித்த உயிரியல் சித்தாந்தத்தின் வழியே வாழும் கல்பனாவின் செயற்பாடுகளை மெச்சி பாராட்டுகளும் விருதுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல், ஐகாங்கோ (iCONGO) மற்றும் ஐக்கிய நாடுகள் (United Nations) இணைந்து நிறுவிய, உலகளவில் மிக உயரிய விருதான ரெக்ஸ் ‘கரம்வீர் சக்ரா‘ அவார்ட், கல்பனாவிற்கு அவரது விவசாயம் மற்றும் ‘சஸ்டைனபிள் லிவிங்’ செயற்பாடுகளை அங்கீகரித்து வழங்கப்பட்டது.

இவற்றுடன் பண்ணை வேலை, ஆர்கானிக் கைவினை சோப்புகள் போன்ற உபகரணங்களை தயாரித்தல்,  என பலருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமையும் கல்பனாவை சேரும்!

பள்ளிகளுடன் இணைந்து குழந்தைகளுக்கு விவசாய முறையையும் சஸ்டைனபிள் லிவிங் முறைகளையும் பயிற்றுவிப்பதன் மூலம் அடுத்த தலைமுறைக்கும் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை குறைவின்றி ஆற்றி வருகிறார் கல்பனா.

உறுதியும் தெளிவும் கொண்டவர்களின் எண்ணங்களுக்கென்று ஒரு வலிமை இருக்கிறது. அது ஆண் பெண் பேதம், நடைமுறை மற்றும் தொழில்முறை சிக்கல் என அனைத்தையும் தாண்டி வெற்றி கொள்ளும். சிறு விதையாக விழுந்து, இன்று கல்பவிருக்ஷமாகி நிற்கும் கல்பனாவின் வாழ்க்கையே இதற்கு சான்று!

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 62,884 Views
All Categories