ட்விட்டர் சர்ச்சையில் விஜய் சேதுபதியின் மகளைக் குறிவைத்தது மிக இழிவான செயல்

எதிர்பாராத விதமாக ஒரு ட்விட்டர் சர்ச்சைக்குள் விஜய் சேதுபதியின் மகள் இழுக்கப்பட்டது அனைத்து தரப்பினரிடையும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

எதிர்பாராத விதமாக ஒரு ட்விட்டர் சர்ச்சைக்குள் விஜய் சேதுபதியின் மகள் இழுக்கப்பட்டது அனைத்து தரப்பினரிடையும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி சமீபத்தில் பல தரப்புகளில் இருந்து கிளம்பிய எதிர்ப்புகள் மற்றும் சர்ச்சைகள் நிமித்தமாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சுயசரிதை திரைப்படத்திலிருந்து விலகினார்.

இந்த சர்ச்சையின் மிக மோசமான எதிரொலியாக ட்விட்டரில் ஒரு நபர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் பலாத்கார அச்சுறுத்தல் விடுத்ததன் பெயரில் சென்னை காவல்துறையின் இணைய குற்றப்பிரிவு சம்பந்தப்பட்ட ட்விட்டர் பயனரின் மீது வழக்கு பதிவு செய்தது.

@itsrithikrajh என்ற ட்விட்டர் அக்கௌன்ட் மூலம் சம்பந்தப்பட்ட பயனர் கடந்த அக்டோபர் திங்களன்று நடிகரின் மகளுக்கு தந்தை-மகள் இருவரின் புகைப்படத்துடன் பலாத்கார அச்சுறுத்தலைக் குறிப்பிடும் மிரட்டலை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து பல சங்கங்கள் ஆன்லைன் மூலம் புகார்கள் அளித்தன. மேலும் சில அநாமதேய புகார்களும் இணைய குற்றப்பிரிவால் பெறப்பட்டன.

சம்பந்தப்பட்ட நபர் மீது IPC 153 கலவரம் பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல்) மற்றும் யின் 294(B) ஆபாச மொழியைப் பயன்படுத்துதல்) மற்றும் சட்டத்தின் பிரிவு 67 (B) குழந்தைகளை பாலியல் ரீதியான செயலில் மின்னணு வடிவத்தில் சித்தரிக்கும் பொருளை வெளியிடுவது) போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

சமூக ஊடகங்களும் சர்ச்சைக்குரிய பதிவுகளும்

பொதுவாக ஒரு பிரபலத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ ஆன்லைனில் குறிப்பாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகள் நிறைய சிக்கல்களை உண்டாக்கி வந்துள்ளன. ஆபாசமான ஆன்லைன் கருத்து பதிவிற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருப்பதே இது போன்ற பிரச்சனைகளின் அடிப்படை ஆகும்.

அதிலும் பெண் பிரபலங்கள் மீது இது போன்ற தாக்குதல்கள் நடப்பது மிகவும் பொதுவானதாகிவிட்டது.

நியாயம் அவர்களின் பக்கமே இருந்தாலும், மோசமான அவதூறுப் பேச்சுகளுக்கும் ஏசல்களுக்கும் பெண் பிரபலங்கள் ஆளாகின்றனர். இவ்வகையில் சில காலத்திற்கு முன் முன்னணி பாடகி ஒருவர் உட்பட பலர் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைவரும் அறிந்ததே. இது போன்ற சூழ்நிலைகளை கையாள்வதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இவர்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை ‘பகடைக்காய்களாக’ ஆக்கும் நோக்கு

ஒரு ஆண்பிள்ளையை சாதாரணமாக திட்டும் போது கூட அவனது தாய், சகோதரி, மனைவி என உற்ற உறவுகளை இழிசொல் கூறி அவனை ஏசும் பழக்கம் ட்விட்டர் என்பதே இல்லாத காலந்தொட்டு நடைமுறையில் இன்றளவும் தொடர்ந்து வருகின்றது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய உண்மை.

அதிலும் மேற்கூறிய பிரச்சனையில் துளியும் சம்பந்தம் இல்லாத ஒரு குழந்தையை இவ்விதம் பொதுவெளியில் மிரட்டி இருப்பது ஒரு சமூகமாக நாம் தோற்றுப் போனதை கோடிட்டு காட்டுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளை பகடைக்காய்களாகவே காலங்காலமாக நோக்கும் தன்மையின் வெளிப்பாடே இது.

இந்நிலை என்று மாறும்?

‘நல்ல மாற்றம் எண்ணங்களில் முன்னேற்றம்’ என்பதற்கேற்ப, மாற்றம் முதலில் ஒருவர் மனத்திலும் அவர் இல்லத்திலும் நிகழ்ந்து நிலைப்பட்டால் மட்டுமே சமூகத்திலும் அது வேரூன்ற முடியும்.

இனி எந்த சூழ்நிலையிலும் விளையாட்டாகவோ வீட்டளவிலோ கூட பெண்களையும் குழந்தைகளையும் தொடர்பு சொல்லி ஏசும் வார்த்தைகளை கைவிட்டால் இந்த மாற்றம் தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இன்னொரு பெண்ணோ குழந்தையோ இது போன்ற நிலைக்கு ஆளாகக் கூடாது என்ற விழிப்புடன் செயல்பட்டும் வழிநடத்தியும் நம்பிக்கை வளர்ப்போம். அடுத்த தலைமுறையின் தார்மீகம் நம் கையில் என்பதை நினைவில் கொள்வோம்.

(மேற்காணும் புகைப்படம் 96 திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

About the Author

Sindhu Priyadharsini Sankar

Sindhu is a writer and a mother of two. A self-confessed bibliophile and a movie buff, she finds relief and meaning in doodling, cooking, escaping to hill towns, and her friends. A big fan read more...

43 Posts | 63,040 Views
All Categories