பெண் சிசுக்களை காப்போம்!

இயற்கையாகவே தாயுள்ளத்தோடு படைக்கப் பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் பெண் சிசுக்களை காக்க நம்மால் இயன்ற வரை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

இயற்கையாகவே தாயுள்ளத்தோடு படைக்கப் பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் பெண் சிசுக்களை காக்க நம்மால் இயன்ற வரை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்“, என்று எழுதுகிறார், நம் வாசகி ரம்யா.

“பெண் சிசுக் கொலைகளா? இப்போது நம் சமுதாயம் எவ்வளவோ முன்னேறி விட்டது. பெண்களுக்கான முன்னுரிமை அனைத்து துறைகளிலும் வழங்கப்படுகிறது. பெண்கள் சாதிக்காத துறையே இல்லை” என்று நாம் நினைக்கும் வேளையில் மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் அரங்கேறி இருக்கிறது இந்த சம்பவம். ஆம்! பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தை சிசுவதைக்கு ஆளாகி நம்மை தீராத வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதைப் படிக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே!

இதனை மையமாகக் கொன்டு எடுக்கப்பட்ட படம், கருத்தம்மா. கிட்டத்தட்ட இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த திரைப்படம்.

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் அல்லாமல் நம் சமுதாயத்திற்கு நல்லதோர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்தது – அப்படித் தான் நம்பினோம்.

ஆனால் இவ்வளவு வருடங்கள் கடந்த பிறகும் இது போன்ற நிகழ்வுகள் இன்றும் ஏன் அரங்கேறி கொண்டிருக்கிறது? அப்பொழுது நாம் முன்னேறி விட்டோம் என்று பெருமையாக சொல்வதெல்லாம் வெறும் வாய் பேச்சிற்காகவா? நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம்  என்றே எண்ண தோன்றுகிறது.

தொட்டில் குழந்தை திட்டம்

நம் தமிழக அரசும் இதற்கான பல திட்டங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான செல்வி. ஜெயலலிதா அவர்கள் 1992 ஆம் ஆண்டிலேயே ‘தொட்டில் குழந்தை’  திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பெண் சிசுவதைகளை தடுக்கவே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. கோவில்கள், ஆதரவற்ற இல்லங்கள், அரசு மருத்துவமனைகள் என்று பொது இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன.

பெண் குழந்தையாக பிறந்துவிட்டதே என்று எண்ணும் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை இத்தொட்டிலில் விட்டு விடலாம். பச்சிளங் குழந்தைகள் கொல்வதற்கு பதிலாக அவர்களுக்கான செலவை அரசாங்கமே ஏற்று கொள்ளும். நல்லதோர் இடத்தில் அவர்களை தத்து கொடுப்பது என்றே அந்த திட்டம் செயல் பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட வருடத்தில், அதாவது 1992 – இல், முதலில் பதினான்கு குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். 2012 வருடத்தில் அவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியானது. இந்த உலகத்தை பார்க்கும் முன்பாகவே அவர்கள் இறப்பதற்கு பதிலாக எங்கோ ஓர் இடத்தில் உயிருடன் வாழ்வது சிறந்ததன்றோ!

விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

சாதாரணமாக நாம் பொது இடங்களில் செல்லும் போது எங்கோ ஒரு குழந்தையின் அழுகை கேட்டால்,
“அச்சோ யார் குழந்தையோ அழுகிறதே! என்னவாக இருக்கும்? அதன் தாய் உடன் இல்லையோ? ஒரு வேளை பசியாக இருக்குமோ? எதையாவது பார்த்து பயந்திருக்குமோ?”
என்று நம் சிந்தனையில் ஆயிரம் கேள்விகள் உலா வரும்.

காரணம்? தாய்மை என்பதை உடல் அளவில் பெற்றால் தான் பெண்களுக்கு அந்த பதற்றம் வர வேண்டும் என்றில்லை. இயற்கையாகவே நாம் தாயுள்ளத்தோடும் நேசத்தோடும் படைக்கப் பட்டிருக்கிறோம். நம் குழந்தை என்றில்லாமல் மற்ற குழந்தைகளையும் அக்கறையோடு பார்ப்பதே பெண் என்று தன்னை உணர்ந்தவளின் மகத்துவமான குணம். அவ்வாறு  இருக்கையில் பெண்ணே பெண் குழந்தையை கொல்லும் அவலத்தை என்னவென்று சொல்வது?

பெண் சிசுக்களை காக்க நம்மால் இயன்ற வரை விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமக்கு தெரிந்தவர்கள், நாம் சந்திக்கும் நபர்கள், நம் வீட்டுப் பணிகளை செய்யும் பெண்கள் என முடிந்தவரை பெண் குழந்தைகளின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்.

பெண் சிசுவதைகளை நம் சமூகத்தில் இருந்து அகற்றி காட்டுவோம். ஒன்று சேர்வோம். சமுதாயத்தையே மாற்றுவோம். பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை மெய்யாக்குவோம்.

பட ஆதாரம்: Pexels.com

About the Author

13 Posts | 16,513 Views
All Categories