பெண்களை வணங்கத் தேவை இல்லை; வாழ விடுங்கள், போதும்.

'சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியம்; ஆனால் பெண்களை அவதூறு பேசுவதில் தான் அது இருக்கிறதா?' என்று கேட்கிறார் ஒரு தாய்.

‘சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியம்; ஆனால் பெண்களை அவதூறு பேசுவதில் தான் அது இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்புகிறார் ஒரு தாய்.

‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்ற வரிகளை வாசிக்கும் போது என் மனம் இருதலைக் கொல்லி எறும்பாய் தவிக்கிறது. ஒரு புறம் இன்பமும் பெருமையும், மறுபுறம், ‘இது உண்மையா?’ என்கிற கேள்வியுமாய் உள்ளம் உழல்கிறது. 

100 ஆண்டு காலத்திற்கு முன்பே பெரும் நம்பிக்கையுடன் பெண் விடுதலைக்கும் எழுச்சிக்கும் கவிதைகளில் களங்கள் வகுத்தார் பாரதியார். நல்ல வேளை இன்று நடப்பதை எல்லாம் பார்ப்பதற்கு அவர் இல்லை; இருந்திருந்தால் மனம் வெதும்பி போயிருப்பார்.

பொது வெளியில் தங்கள் கருத்துகளை தைரியமாய் சொல்லும் பல பெண்களை குறிவைத்து வார்த்தைகளால் தாக்கி கண்டபடி மிரட்டல் விடுக்கும்  ட்விட்டர், ஃபேஸ்புக் வீரர்களின் பிரதாபங்களை பற்றி தெரிந்தால், அவ்வுலகத்திலும் பாரதியின் நிம்மதி பறிபோகும். மீண்டும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று குமுறியிருப்பார் மகாகவி.

படித்தவர், படிக்காதவர், வயதானவர், இளவயதினர், சாதி, மொழி, மதம், கருப்பு, சிவப்பு என்ற எந்த பாகுபாடும் இன்றி, நகர்ப்புறம் கிராமப்புறம் என்று எல்லா இடங்களும் ஒன்றுபடுவது பெண்களை அடக்குவதிலும் அவர்கள் கருத்துக்களை, குரல்களை ஒடுக்குவதிலும் மட்டும் தானோ?

பெர்சனல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது ஏன்?

சமீபத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறை, கொரோனா விழிப்புணர்வு, போன்றவற்றிற்காக குரல் கொடுத்து வந்த வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைதளப் பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

யுனிசெஃப் அமைதித் தூதுவரான ப்ரியங்கா சோப்ரா அணியும் ஆடையில் துவங்கி அவர் மணமுடித்த கணவன் வரை விரிகிறது இவர்களின் கேலிப் பேச்சுகளும் கருத்துக் குவியல்களும்.

அவரவர் வாழும் தெருவில் ‘எல்லா விளக்குகளும் எரிகின்றனவா? சுத்தமாக இருக்கிறதா?’ போன்ற அடிப்படை விஷயங்களை எல்லாம் ‘யாராவது பார்த்துக் கொள்ளட்டும்’ என நினைக்கும் இவர்கள், எங்கோ இருக்கும் நடிகையின் பெர்சனல் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது ஏன்? என்ன உரிமையில் இவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள்?

நம் ஊரிலேயே பல உயரிய விருதுகளை வென்று பாடகி, பிசினஸ் வுமன், மகள், மனைவி, மருமகள் என்ற பன்முகம் கொண்ட  சின்மயியை சமூக ஊடகங்களில் தாழ்த்திப் பேசும் உரிமையை யார் கொடுத்தார்கள் இவர்களுக்கு? 

பார்க்கப் போனால் இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரது இளம் வயது மகள் கூட மிரட்டப் பட்டார் என்பதை நாம் மறக்க முடியுமா, மறுக்க முடியுமா? விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வருவது இதற்காகத் தானா? இவ்வளவு முன்னேறிய மனித இனம் அடிப்படை தார்மீகக் கோட்பாடுகளை, நா-அடக்கத்தை இழக்கலாமா? 

பெண்ணை தாயாய் மகளாய் தோழியாய் பாராட்டி புகழ்ந்து வணங்கியவர்களின் வழித்தோன்றல்களா இவர்கள்? 

யோசித்து கருத்திடுவோம்

பெண்களை வணங்கத் தேவை இல்லை; வாழ விடுங்கள், போதும்.
பெண்களை புகழத் தேவையில்லை; புறம்பேசாமல் இருங்கள், போதும்.
முதலில் பெண்களே பெண்களை அவதூறாகப் பேசியது எல்லாம் போதும்.

கருத்துச் சுதந்திரம் முக்கியம்; ஆனால் ஒருவரை அவதூறு பேசுவதில் தான் அது இருக்கிறதா என்று ஒரு முறைக்கு பல முறை யோசித்து கருத்திடுவோம், தவறில்லை.

‘இந்தியா என் தாய்நாடு; இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்’ என்று சொல்வதெல்லாம் வெறும் வாய் வார்த்தை தானா? இல்லை, அது உண்மை என்றால், யாரையும் அவதூறாகப் பேசாதீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தப்பு செய்தால் தட்டிக் கேளுங்கள். ஆனால் எதையும் முறையோடு செய்யுங்கள்; குறைந்த பட்சமாக கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள், போதும்.
உங்கள் தாயின் மனமும் ஈன்ற வயிறும் குளிரும்.

காதுள்ளவன் கேட்கக் கடவன். அப்புறம் உங்கள் இஷ்டம்.

இப்படிக்கு, 
ஒரு தாய்.

(மேற்காணும் புகைப்படம் ‘தி ஸ்கை இஸ் பிங்க்’ திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது.)

About the Author

6 Posts | 10,721 Views
All Categories