‘மரங்களின் தாய்’, திம்மக்கா

மரங்களை நட்டுப் பராமரித்து, தாய் போல் காத்த திம்மக்கா போன்ற மனிதர்களாலேயே பூமி இன்னும் பூமியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.

மே 22, சர்வதேச பல்லுயிர்ப் பெருக்க விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப் படுகிறது. சிந்தை, சொல், செயல் மூலம் ‘உலகம் என்பது சகல உயிர்களுக்கும் பொதுவானது’ என்று பறைசாற்றியுள்ள திம்மக்கா போன்ற மனிதர்களாலேயே பூமி இன்னும் பூமியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.

பல்லுயிர் வாழ்நிலை என்றால் என்ன?

‘பயோ-டைவெர்சிட்டி’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பல்லுயிர் வாழ்நிலை, மரம், செடி கொடிகள், ஊர்வன, பறப்பன போன்ற நிலம் மற்றும் நீரில் வாழும் பல்வகை உயிரினங்களை, அவற்றின் மரபணு ரீதியான பன்முகத்தன்மையை குறிப்பிடுகிறது.

எளிய நடையில் சொல்லவேண்டும் என்றால் நீர்வளம், நிலவளம் போல உயிர்வளமும் மனித குல வாழ்வுக்கு இன்றியமையாதது. இந்த உயிர்வளத்திற்கு பல்லுயிர் வாழ்நிலை தான் மூல ஆதாரம். சிதைக்காமல்

மனிதர்களின் கவனமின்மையால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் போன்ற நிகழ்வுகளால் பூமி சிதைவுறாமல் காப்பாற்றுவதன் மூலம் பல்லுயிர் வாழ்நிலை சார்ந்த வளத்தையும் காப்பாற்ற முடியும்.

பருவநிலை மாற்றத்தின் கோரப்பிடியில் இருந்து பூமியை மீட்டெடுக்க எளிமையான விஷயம், மரம் வளர்த்தல். அவ்வகையில் பெங்களூரு நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு ஏறக்குறைய 384 ஆலமரங்களை நட்டுப் பராமரித்து, தாய் போல் காத்த திம்மக்கா என்ற மூதாட்டி, நம் அனைவர்க்கும் ஒரு இணையில்லா முன்னோடி என்பதில் ஐயம் இல்லை.

‘மரங்களின் தாய்’

ஆம், திம்மக்கா அவர்கள், ‘மரங்களின் தாய்‘ என்றே அறியப் படுகிறார். திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாததால் திம்மக்கா பெங்களூரு கூதூர்ச் சாலைகளின் இரு புறங்களிலும் ஆலமரக் கன்றுகளை நடத்துவங்கினார் என்று அறியப்படுகிறது. இன்று இவர் நட்ட மரங்களின் கருணையால் பொட்டல் வெளியாக இருந்த அந்தப் பகுதி, முன்னைவிட குளுமையாய், செழிப்பாய் விளங்கி வருகிறது.

சாலையின் இரு புறத்திலும் மரம் நட்டு பிள்ளையை காப்பது போல் காத்த திம்மக்கா அவர்களை, அவர்களது இந்த நற்செயலை வெளிப்படுத்தும் ‘சால மருத’ எனும் கன்னட அடைமொழியோடு ‘சாலமருத திம்மக்கா’ என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். தற்போது இந்த மரங்களை பராமரிக்கும் பொறுப்பினை கர்நாடக மாநில அரசு ஏற்று நலமுடன் செய்து வருகிறது.

இது மட்டுமின்றி வெட்டப்பட இருந்த பல மரங்களை வெட்டாமல் காத்த பெருமையும் இவரை சேரும். மேலும் வெவ்வேறு இனங்களை சேர்ந்த 8000 வகை மரங்களை நட்டு வளர்த்த சேவையையும் இவர் ஆற்றியுள்ளார் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

Never miss real stories from India's women.

Register Now

தன்னலமற்ற சேவைக்கு உகந்த கௌரவம்

தன்னலமற்ற இந்த சேவையையொட்டி 2016 ஆம் வருடத்தின் ‘பிபிசி 100 பெண்கள் பட்டியலில்’ ஒருவராக அறிவித்து கௌரவிக்கப் பட்டார், திம்மக்கா. மேலும் மகளிர் மற்றம் குழந்தைகள் நலத்துறை அளித்த பாராட்டுச் சான்றிதழ், இந்திய அரசின் மிக உயரிய விருதுகளின் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் ஈன்றுள்ளார், திம்மக்கா அவர்கள்.

இது போக மேலும் பல விருதுகளையும் சிறப்புகளையும் வென்றுள்ள திம்மக்கா போன்றே நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரிக்க முடியவில்லை என்றாலும், வீட்டுக்கு ஒரு மரம் நட்டு நாமும் நம் பங்குக்கு பூமிக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றுவோம்.

வாசகர்களே!

விமன்ஸ் வெப் ஒரு திறந்த வலைதளமாகும். இது பலவிதமான பார்வைகளை/கருத்துக்களை வெளியிடுகிறது. தனிப்பட்ட கட்டுறைகள் எல்லா நேரங்களிலும் தளத்தின் பார்வைகளையும் கருத்துகளையும் குறிக்காது.  ஏதேனும் கட்டுறையில் உங்களுக்கு தொடர்புடைய அல்லது மாறுபட்ட கருத்து இருந்தால் எங்கள் வலைதளத்தில் பதிவுசெய்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள்!

கருத்துக்கள்

About the Author

6 Posts | 9,021 Views
All Categories