இனி வேண்டாம் தன்மானம் நொறுங்கும் ஓசை

'தன்மானத்துடன் அவளுக்கென வாழ பெண்ணுக்கு இடமளிப்பீர்' என்று ஆதிக்கம் செலுத்துவோருக்கு சேதி சொல்கிறார், சகா.

“தலைகவிழ்ந்தே நாங்கள் வாழும்தோறும், தன்மானம் நொறுங்கும் ஓசை கேட்கும்” என பெண்ணுக்கு அவளுக்கென வாழவும் இடமளிப்பீர் என்று ஆதிக்கம் செலுத்துவோருக்கு சேதி சொல்கிறார், சகா.

‘மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என
மங்கலமாய் பாடி வைத்தார் பாரதி.
மண்ணிலே பிறந்திட்ட மங்கை நானோ
மாதவம் செய்தேனோ, அறியேன்;
மனுஷியாய் மதித்தாலே போதுமென்பேன்

தாயாய், தாரமாய், தோழியாய்
தமக்கை தங்கையாய் தவழும் குழந்தையாய்
தாகம் பசி தூக்கம் பின்னுக்குத் தள்ளி
தாழ்ந்தே சேவிக்கச் சொல்வதால்
தலைகவிழ்ந்தே நாங்கள் வாழும்தோறும்
தன்மானம் நொறுங்கும் ஓசை கேட்கும்

எவர் வகுத்த இலக்கணம் இது
எங்கள் கைகளைக் கட்டிப்போட்டு
எங்கள் கனவுகளைத் தியாகிப்பது அறமென
எவர் கற்றுத்தந்தார்?
எங்கள் கனவுகள் எங்கள் விடுதலைக்கான சாவிகள்
எங்கள் கனவுகள் உயிருள்ளவை; கொல்லாதீர்!

அகிம்சை வழி பெண்ணை நிகர்நிறுத்தி
அவளுக்கென வாழ இடமளிப்பீர்-
அன்பும் சுதந்திரமும் கிடைத்தால்
அறிவும் தெளிவும் சுடர்கொளுத்தி
அழலாய் மிளிர்வாள் பெண்மகளே!
அடையாளம் சமைப்பாள் தனக்கெனவே!

பட ஆதாரம்: ‘நடிகையர் திலகம்’ திரைப்படம்

About the Author

6 Posts | 11,368 Views
All Categories