இல்லற வாழ்வில் பரஸ்பர நேசம் இல்லாமை விவகாரத்துக்கு போதுமான காரணம் இல்லையா?

உங்கள் மகளுக்கும் அவளது கணவருக்கும் பரஸ்பர நேசமோ புரிதலோ இல்லை என்பதை காரணமாகக் கொண்டு விவாகரத்து கோரினால், உங்கள் மகளை ஆதரிப்பீர்களா?

உங்கள் மகளுக்கும் அவளது கணவருக்கும் இடையில் பரஸ்பர நேசமோ புரிதலோ இல்லை என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு விவாகரத்து கோரினால், உங்கள் மகளை நீங்கள் ஆதரிப்பீர்களா?

வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில், “உங்களது மகள் இறந்து போவதை விட, விவாகரத்து செய்யப்படுவது மேலானது” என்று கூறும் நிறைய இடுகைகளை சமீபத்தில் பார்த்தேன். கேரளாவில் ஒரு நபர் தனது மனைவியை நாகப்பாம்பினை விட்டு கடிக்க வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் செய்தியின் எதிரொலியே இந்த இடுகைகள்!

அடிப்படையில், இந்த பதிவுகள் சொல்ல வருவது இதைத்தான்: “வரதட்சணை கொடுமை, அல்லது வீட்டில் வன்முறை காரணமாக உங்களது மகள் விவாகரத்து செய்ய விரும்பி பிறந்த வீட்டிற்கு வந்தால், அவளை கணவன் வீட்டிற்கு அனுப்பி விட வேண்டாம். அவளை உங்களிடமே தங்க வைத்து, விவாகரத்து செய்து கொள்ள அனுமதியுங்கள்; இல்லையெனில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் காரணமாக அவள் கொல்லப்படலாம் அல்லது தற்கொலைக்கு தள்ளப் படலாம். எனவே உங்கள் மகளின் விவாகரத்தால் ஏற்படும் சமூக இகழ்ச்சி பற்றிய அச்சத்தை கைவிட்டு அவள் உயிருடன் இருப்பதை எண்ணி நன்றியாய் இருங்கள்.”

நல்லது. இது அவசியமான ஒன்று. ஏனெனில் வீட்டு வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை பல திருமணங்களின் தோல்விக்கு முக்கிய காரணங்களாகும். ஆனால், உங்கள் மகள் கோரும் விவாகரத்துக்கான காரணங்களாக மேற்கூறிய எதுவும் இல்லையென்றால்?

இப்போது அதிகம் பேசப்படாத காரணங்கள் பற்றி பேசலாமா?

உங்கள் மருமகன் ஒருபோதும் அவளிடம் கையை ஓங்கியதில்லை, வரதட்சணை கேட்டதில்லை. ஏமாற்றவோ, குடிக்கவோ இல்லை, சூதாடவில்லை; மிகவும் பொறுப்பான, நியாயமான ஒருவனாக, உளவியல் பிரச்சினைகள் இல்லாதவனாக அவன் இருக்கும் பட்சத்திலும், உங்கள் மகள் அவனிடமிருந்து விலக விவாகரத்தை நாடுகிறாள் என்றால், அப்போதும் நீங்கள் அவளுக்கு ஆதரவாக நிற்பீர்களா?

ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாமலிருப்பது தொடங்கி புரிதல் இல்லாமை, விருப்பு வெறுப்புகளில் வேற்றுமை, கருத்து கொள்கைகளில் மாறுபாடு, காதல் மற்றும் மரியாதை இல்லாமை, உடல், உணர்வு, மற்றும் மன/ஆன்ம ரீதியாக பொருத்தம் இல்லாமை ஆகியவையும் விவாகரத்துக்கு போதுமான காரணங்கள் அல்லவா?

உங்கள் பெண்ணிடம் உறவினர்கள் சொல்வார்கள்:
“இல்லறம் என்றால் இப்படித் தான், விட்டுக் கொடுத்து, அனைத்தையும் தாங்கிக் கொண்டு இந்த கட்டத்தை கடந்து செல்ல வேண்டும். உண்மையில் இல்லறத்தைப் பொறுத்த வரை யாரும் மகிழ்ச்சியாக இல்லை; பெரும்பாலான திருமணமான பெண்களின் நிலை இதைவிட மோசமாக உள்ளது. வீட்டிற்கே வராத கணவனுடன் இன்னும் குடும்பம் நடத்தும் பெண்ணைப் பார், அவள் இன்னும் அவனுடன் இருக்கிறாள்; பொருளாதார ரீதியாக துளியும் ஆதரவளிக்காத அந்த கணவனைப் பார், அவனது மனைவி இன்னும் அவனுடன் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறாள்; சதா காலமும் குடிக்கும் அந்த ஆளின் மனைவியைப் பார், அவளும் அவனுடன் அனுசரித்து வாழ்கிறாள். எத்தனையோ பெண்களுடன் தகாத பழக்கம் வைத்திருக்கும் அந்த ஆசாமியை பார்- எல்லோருக்கும் அவனைப் பற்றித் தெரியும், அவனது மனைவிக்கும் எல்லாம் தெரியும், ஆனாலும் அவனுடன் தானே அவள் இன்னும் வாழ்கிறாள்?”

“…இவர்களை விட உன்னுடைய நிலைமை எவ்வளவோ மேல், பிறகு ஏன் நீ அவரை நேசிக்க முடியாது? ஏன் நீ அவருடன் இணைந்து வாழ முடியாது? ஏன் எல்லோரையும் போல நீயும் உன் திருமணத்தை சரிசெய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க முடியாது? இதற்கு மேலும் உனக்கு அப்படி என்ன தான் வேண்டும்?”

விவாகரத்துக்கான ‘போதுமான’ காரணங்கள் தான் என்ன?

நன்கு படித்தவர்கள், பகுத்தறிவு நிறைந்தவர்கள் கூட வீட்டு வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமையை மட்டுமே விவாகரத்துக்கான நியாயமான காரணங்களாக முன்வைப்பது ஏன்?

இல்லற வாழ்வில் பரஸ்பர நேசம் இல்லாமை போதுமான காரணம் இல்லையா? எதனால் இந்த முக்கியமான தேவை புரிந்து கொள்ளப்படாமல், கேட்கப்படாமல், மதிக்கப்படாமல், பார்க்கப்படாமலேயே போய் விடுகிறது? ஆனந்தமே இல்லாமல் விரக்தியோடு மணவாழ்க்கை வாழ்ந்து காலந்தள்ளுவோர்க்கு அந்த வெறுமையே போதுமான காரணம் இல்லையா?

இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த ஒரு ஜோடி, மேரேஜ் கவுன்செலிங், தெரப்பி என அனைத்தையும் கடந்தும் ஒத்துவராமல், வேறு வழியின்றி ஒன்றாக வாழ நேர்ந்து, அவர்களது வாழ்நாள் முழுவதும் தங்களுடன் பொருந்தாத ஒருவருடன் வெறுமையில் வாழ வேண்டும் என்ற எண்ணமே ஒருவித கிளாஸ்ட்ரோஃபோபியாவையும் ஆழ்ந்த விரக்தியையும் மட்டுமே அளிக்கக்கூடிய நிலையில், அவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், விவாகரத்து பெற அதுவே போதுமான காரணமாக ஏன் ஏற்கப்படுவதில்லை?

வாழும் காலம் தோறும் தொடரும் துன்பத்திற்குள் அவர்களைத் தள்ளப் பார்க்கிறீர்களா?

ஒரே அறையில் ஒன்றாக தூங்கக் கூட முடியாமல், கைகள் கோர்க்காமல், பல ஆண்டுகளாக உடல்ரீதியாக மனரீதியாக விலகிப் போய், ஒருவருக்கொருவர் பேசாமலேயே இருந்து காலந்தள்ளி, ஊருக்காக தங்கள் 50வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் அந்த கசப்பான, வயதான தம்பதியராக அவர்கள் மாற வேண்டுமென்று விரும்புகிறீர்களா?

கணவனும் மனைவியும் தத்தம் மணவாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை, தங்களது வெறுமையை, நகைச்சுவை பூசி தங்கள் பள்ளி வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து கொள்ளும் அந்த முதிர்ந்த தம்பதியராக அவர்கள் மாற்ற விரும்புகிறீர்களா?

வாழ்க்கைத் துணை என்பது விருப்பமில்லாத ஆனால் விடமுடியாத ஒரு ஹாபிட் (அ) பழக்கமாக உறைந்து போய், அதனால் விலகிச் செல்ல முடியாத வெறுமையான ஜோடிகளாக அவர்கள் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?

மணவாழ்க்கையை விட்டு வெளியேறினால் வெளியில் உள்ள உலகம் விசித்திரமாகவும், அறிமுகமில்லாததாகவும், கொடூரமாகவும் இருக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் ஒன்றாக ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

“வயதான காலத்திலோ, நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ, வேறு யார் அவர்களை கவனித்து கொள்வார்கள்?” என்ற பயத்தில் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அல்லது “தனியாகவே இருந்து தனியாகவே இறந்து விடுவார்கள்” என்ற பயத்தினால் அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

தயவுசெய்து, இனிமேல் இத்தகைய இடுகைகளை நீங்கள் எழுதும்போது, “விவாகரத்து பெறுவதற்கு நியாயமான காரணங்கள் இவை” என்று வீட்டு வன்முறை மற்றும் வரதட்சணை போன்ற காரணங்களை முன்வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

பொறுப்பான, போதுமான மன முதிர்ச்சி உடைய, புத்திசாலித்தனம் உடைய வயது வந்த ஒருவர் விவாகரத்தை நாடினால், ஏன் என்று அவர்களிடம் கேட்க வேண்டாமே.

அது குறித்த முடிவும் காரணங்களும், அவர்களது வாழ்க்கையும் அவர்களிடமே இருக்கட்டும்.

(மேற்காணும் புகைப்படம் ‘தரமணி‘ திரைப்படத்திலிருந்து எடுக்கப் பட்டது.)

About the Author

Karishma VP

Karishma has been writing short stories since she was 8 and poetry since she was 12. She ended up studying Zoology, then Montessori, and then psychology, always feeling ‘’something was missing’. She worked in the read more...

1 Posts | 1,653 Views
All Categories