‘மியூகோர்மைகோசிஸ்’ எனப்படும் கருப்பு பூஞ்சை நோய்

கொரோனாவில் இருந்து மீள்பவர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை எனும் நோயின் அறிகுறிகளை சரியான சமயத்தில் இனம்கண்டு சிகிச்சை பெறுவது மிக அவசியம் ஆகும்.

கொரோனா நோயின் தாக்கத்தில் இருந்து மீள்பவர்களை, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளை, கருப்பு பூஞ்சை எனும் தொற்று வெகுவாக பாதிப்பது குறித்து அறிகிறோம். இதன் அறிகுறிகளை சரியான சமயத்தில் இனம்கண்டு சிகிச்சை பெறுவது மிக அவசியம் ஆகும்.

Original in English | மொழிபெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களுக்கு ஒருவித உடல்சோர்வு, எப்பொழுதாவது கொஞ்சம் இருமல் போன்றவை இருக்கலாம். இவற்றை தாண்டி வேறு அறிகுறிகள் தென்பட்டால், உடனுக்குடன் மருத்துவரை அணுகி உரிய உதவி பெறுவது மிக முக்கியம்.

‘மியூகோர்மைகோசிஸ்’ எனும் கருப்பு பூஞ்சை நோய்

கருப்பு பூஞ்சை நோய், காற்று மூலம் மனித உடலுக்குள் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்த வல்லது. பொதுவாக பூஞ்சை வகைகள், ‘ஸ்போர்ஸ்’ எனப்படும் ‘நுண்ணுயிர் வித்துகள்’ மூலமே இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த நுண்ணுயிர் வித்துகள், காற்றில் பரவக்கூடிய தன்மை உடையவை.

எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் கருப்பு பூஞ்சை ஸ்போர்ஸ் காற்றில் கலந்தே இருந்தாலும், நோயெதிர்ப்பு சக்தி வெகுவாக குறைந்து மிகவும் பலவீனமாக உள்ளவர்களை இந்த ஸ்போர்ஸ் வெகு சுலபமாகத் தாக்கி, நோயை ஏற்படுத்தி விடுகிறது.

கொரோனா நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக அளிக்கப்படும் ‘ஸ்டீராய்ட்ஸ்’ (எ) ஊக்க மருந்துகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை குறைத்து விடுகிறது. ஆகவே கோவிட் நோயில் இருந்து மீண்ட பின்னும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்பட்சத்தில், கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக அறியப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி. போன்ற நோய்களின் விளைவாக நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சொல்லப்படுகிறது .

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்

கோவிட் நோய் தாக்கத்தில் இருந்து வீடு திரும்பிய பின்னும் அவருக்கு தலைவலி, கண்வலி, மூக்கடைப்பு, மூக்கில் சளி, முகத்தில் வலி, தாடை (அ) முகவாய்ப் பகுதியில் வலி, முகத்திலோ தாடையிலோ வீக்கம், காய்ச்சல் ஆகிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும், மருத்துவ உதவியை நாடுவது அதி அவசியம்.

கருப்பு பூஞ்சை ஒரு அபூர்வமான ஆனால் பயங்கரமான தொற்றுநோய். அதிவேகமாக பரவி, உடல்நலத்தை சீரழித்துவிடும் தன்மை உடையது இது. இரத்த நாளங்களிலோ மூளைப் பகுதியிலோ கருப்பு பூஞ்சை பரவிவிட்டால் மிகவும் ஆபத்தானது என்று தெரிகிறது. இதற்குரிய மருந்துகளை நோயின் ஆரம்பக் கட்டத்தில் உட்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்தினால் குணப்படுத்த முடியும். எனவே சரியான நேரத்தில், மருத்துவரை அணுகுவது மிக அவசியம்.

Never miss real stories from India's women.

Register Now

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

தோழிகளே, நாம் பெருத்தொற்று பரவி வரும் காலகட்டத்தில் இருந்து வருகிறோம். இந்த நேரத்தில் ஆதாரபூர்வமான, சரியான தகவல்களே நமக்கு துணை நிற்பவை. கொரோனா நோய்க்கான சிகிச்சைக்கு ஸ்டீராய்ட்ஸ் இன்றியமையாதவை ஆகையால், அவற்றை உபயோகப் படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால், இதன் விளைவாக கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டாலும், அதற்கான அறிகுறிகளை சரியாக கண்டறிந்து, உடன் மருத்துவ உதவியை நாடிப் பெற்று அதன் பாதிப்பு மோசமாகாமல் பார்த்து கொள்வது அவசியம் ஆகும்.

சரியான மருத்துவப் பூர்வமான தகவலை உரிய நேரத்தில் பெற்றும் பகிர்ந்தும் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட்டு நம்மை நாம் காத்துக் கொள்வோமாக.

விழிப்புடன் இருப்போம்.

பட ஆதாரம்: Counselling on Pixabay

குறிப்பு: இங்கே பகிரப்பட்டுள்ள தகவல்களை உங்கள் மருத்துவருடன் பரிசீலனை செய்து அதன் பின்னே செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாசகர்களே!

விமன்ஸ் வெப் ஒரு திறந்த வலைதளமாகும். இது பலவிதமான பார்வைகளை/கருத்துக்களை வெளியிடுகிறது. தனிப்பட்ட கட்டுறைகள் எல்லா நேரங்களிலும் தளத்தின் பார்வைகளையும் கருத்துகளையும் குறிக்காது.  ஏதேனும் கட்டுறையில் உங்களுக்கு தொடர்புடைய அல்லது மாறுபட்ட கருத்து இருந்தால் எங்கள் வலைதளத்தில் பதிவுசெய்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்குங்கள்!

கருத்துக்கள்

About the Author

2 Posts | 2,026 Views
All Categories