ஆணாதிக்கத்தை ‘ஸ்த்ரீ தர்மம்’ என்று பெண்களே ஏற்றுக் கொள்வது ஏன்?

நம் சமூகம், ஆண் ஆட்டுவிக்க, அதன்படி படி நடக்க பெண்ணை விதிக்கிறது. மறுப்பே இல்லாமல், 'இது தான் தர்மம்' என்று பெண்களே ஏற்றுக் கொள்வது ஏன்?

நம் சமூகம், பெண்களை ஆண் ஆட்டுவிக்க, அதன்படி ஆடும் கைப்பாவைகளாவே பெண் இருப்பதை பரிந்துரை செய்கிறது. ஆணாதிக்கத்தை மறுப்பே இல்லாமல், ‘இது தான் தர்மம்’ என்று பெண்களே ஏற்றுக் கொள்வது ஏன்?

ஒரு ஆண் ஒரு பெண்ணை சீண்டினால், அது அவன் அந்தப் பெண்ணின் மேல் கொண்டுள்ள விருப்பத்தின் வெளிப்பாடு என்று, “உன் மேல அவனுக்கு அவ்வளவு ஆசை; உன்னிடம் விளையாடாமல் வேறு யாரிடம் விளையாடுவான்?” என்று விளக்குவதை எத்தனை முறை கேட்டிருப்போம்?

அந்தப் பெண்ணுக்கு அவன் மேல் விருப்பம் இருந்தாலும் இல்லாவிடினும், மற்றவர்களின் அங்கீகாரத்தோடு இந்த சீண்டல் தொடரும்!

பொதுவாகவே பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவளுக்கு மற்றவர் மனம் நோகாமல் நடந்து கொள்ளும் ஒரு ‘ஆமாம் சாமி’யாக இருப்பதற்கு பயிற்றுவிக்கப் படுகிறது. அவளது வாழ்க்கை சார்ந்த முடிவுகள் குடும்பத்தில் அதிகாரம் உள்ள ஆண்களாலேயே பெரும்பாலும் எடுக்கப் படுகின்றன. ‘நான் கிழித்த கோட்டை அவள் தாண்ட மாட்டாள்!’ என்று இதில் பெருமிதம் வேறு!

இதில் உச்சக்கட்டம் என்ன என்றால், இப்படி தனக்கு என்று ஒரு நிலைப்பாடு என்பதே இல்லாமல், பிறரைச் சார்ந்தே வாழ்வதும், பிறரது முடிவுகளையே தன்னுடைய விதியாக ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் பெண்மை, பெண்ணின் பெருமை என்று காலம் காலமாக பெண்களே இதை நம்பி, தலைமுறை தலைமுறையாக பயிற்றுவித்து வருவது தான்!

இதன் மூலகாரணம் என்ன?

நம்முடைய சமூகக் கட்டமைப்பு, பல தலைமுறைகளாகவே நம் சமூகம், பெண்களை பொம்மலாட்டத்தில் யாரோ ஆட்டுவிக்க, அதன்படி ஆடும் கைப்பாவைகளாகவே இருப்பதை பரிந்துரை செய்கிறது. சுயமாக சிந்திக்கும், தன் மனத்தை வெளிப்படையாக பேசும் பெண் ‘அடங்காப் பிடாரி, அகங்காரி’ என்று ஒதுக்கி வைக்கப் படுகிறாள்.

ஒரு பெண்ணின் ‘எனக்கு விருப்பமில்லை’ என்பதை விட ஒரு ஆணின் ‘எனக்கு இது வேண்டும்; இது இப்படித் தான் நடக்க வேண்டும்’ என்ற ஆதிக்க வெளிப்பாட்டிற்கு நம் சமூகம் முன்னிறுத்தி வருகிறது.

இது, ஆண்கள் பெண்கள் மீது நிகழ்த்தும் மரியாதை குன்றிய செயல்கள் எல்லாம், அவர்கள் அந்தப் பெண் மீது கொண்டுள்ள உரிமையின் வெளிப்பாடு என்று நியாயப்படுத்தும் அளவிற்கு நம் சமூகத்தில் வேர் ஊன்றி விட்டது. இளவயது தொடங்கியே இந்த ஆண்-பெண் பேதத்திற்கான விதை, இளம் பிஞ்சுகளின் மனங்களில் விதைக்கப் படுகிறது.

சிறுவயது தொடங்கியே…

சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே ஆண் பிள்ளைகள் ஒரு விதமாகவும், பெண்கள் வேறு விதமாகவும் வளர்க்கப் படுகின்றனர். ‘சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை’ என்று ஆண் பிள்ளைகளை தங்கத் தட்டில் வைத்து தாங்குவது இங்கே நடைமுறை நிதர்சனம்.

சிறு வயது தொடங்கியே உடல் மற்றும் மன துஷ்பிரயோகம் எதுவாக இருந்தாலும், பெண்கள் தங்கள் வழியில் வரும் எதையும் அமைதியாக சகித்துக்கொள்ள கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள்.

சிறுவர்கள் வானுயர சாதிக்க ஊக்குவிக்கப்படுவது ஒரு புறம்; சிறுமிகளின் கனவுகள் பூமியின் மையத்தில் ஆழமாக நசுக்கப்படுவது மறுபுறம்.

ஒரு ஆண், அவனுக்கு ஏற்படும் சிறிய அளவிலான அவமதிப்பைக் கூட மறுத்து நிற்கும் போது, கேள்வி கேட்கும்போது, கண்டிக்கும்போது, ‘மானமுள்ளவன்’ என்று துணிச்சலுக்காக பாராட்டப்படுகிறான். அவனுடைய ‘ஆண்மை’யால் அவனது பீடம் மேலும் உயர்கிறது.

இதையே பெண் செய்தால், அவளுக்கு அத்தனையும் அப்படியே தலைகீழாக நடக்கும். நிச்சயமாக ஒரு பெண் ஒருபோதும் எதிர்வினையாற்ற முடியாது.

ஆணின் பீடம் எவ்வளவு உயர்ந்தாலும் ஆண் திருப்தி அடைவதே இல்லை; அது ஒருபோதும் போதுமானதாக இல்லை. அது போலவே பெண் எவ்வளவு தாழ்ந்து போனாலும், எவ்வளவு அடிபணிந்தாலும் ஒருபோதும் அது போதுமானதாக இருக்காது. துரதிர்ஷ்டவசமாக, நம் சமூகத்தில் வேரூன்றிப் போன இந்த ஆண்-பெண் பாலியல் முரண்பாடு, மாற வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

இது தவறான கருத்து என்றால், எது சரியான கருத்து என்று எமக்கு தெரியவில்லை.

பட ஆதாரம்: ’36 வயதினிலே’ திரைப்படம்

About the Author

1 Posts | 1,375 Views
All Categories