புகுந்த வீட்டு உறவுகளை மனஉளைச்சலின்றி ஆரோக்கியமாகக் கையாள்வது எப்படி?

புகுந்த வீட்டு உறவுகளுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்கள், உளவியல்ரீதியாக ஆரோக்கியமாக உறவுகளை கையாள சில வழிகள் இதோ.

திருமணமாகி கூட்டுக்குடும்பமாக கணவருடைய பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் ஆகிய புகுந்த வீட்டு உறவுகளுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்கள், உளவியல்ரீதியாக ஆரோக்கியமாக உறவுகளை கையாள சில அனுபவபூர்வமான வழிகள் இதோ.

‘உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்’ என்ற வாசகம் யாவர்க்கும் பொருந்தும். என்றாலும், புகுந்த வீட்டு உறவுகளுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்களுக்கு இந்த வாசகம் மிக ஆழ்ந்த அர்த்தமுடையது ஆகும். கைமீறி எதுவும் போகாமல் காத்துக்கொள்ள வீட்டிற்குள்ளும் வீட்டின் உறவுகளுக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான வரம்பு இருப்பது முக்கியம் ஆகும்.

Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

மனஆரோக்கியத்தை பராமரிப்பதில் முனைப்புடைய பெண்ணாகவும், புகுந்த வீட்டு உறவுகளுடன் ஒரே வீட்டில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் மருமகளாகவும், எதிர்மறை எண்ணங்களால் சிறைப்பட்டுள்ள பெண்களுக்கு உதவ என்னால் ஆன முயற்சிகளை நான் ஆத்மார்த்தமாக செய்ய விழைகிறேன்.

முதலில், இந்த எதிர்மறை எண்ணங்கள், ‘திருமணமான பெண் இப்படித் தான் இருக்க வேண்டும்’ என்று சமுதாயம் நம் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளில் வேரூன்றி முளைக்கிறது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

எனக்கும் என்னுடைய புகுந்த வீட்டினருக்குமான உறவு, அன்பும் முரணும் கலந்த ஒன்று. இங்கே வெளிப்படையாக, அனுபவபூர்வமாக நான் கண்டுணர்ந்த சில விஷயங்களை, என்னைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில், பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

வாழ்க்கையையே மாற்றும் திருமணம்

வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை அளிப்பது என்பதை நம்மால் மறுக்க முடியுமா? அதிலும் பெண்களின் உலகத்தை வெகுவாய் மாற்றிவிடும் இந்த திருமணத்தை, அது ஏற்படுத்தும் விளைவுகளை, உள்ளது உள்ளபடியே மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நம்மில் பெரும்பாலானோர் நினைத்து முயற்சியும் செய்வது உண்டு.

‘புகுந்த வீட்டு உறவுகளுடன் சுமுகமாக வாழ வேண்டும், நல்ல மருமகள் என்ற பெயர் வாங்க வேண்டும்’ என்ற ஆசையுடனே பெரும்பாலான பெண்கள் இருந்திருக்கிறோம். ஆனால், இந்த பரப்பான காலகட்டத்தில், புகுந்தவீட்டினருடன் ஒரே வீட்டில் வாழும் பெண்களுக்கு அவ்வப்போது இது கடினமான ஒன்றாக ஆகி விடுகிறது.

பரஸ்பர அடிப்படை புரிதல் இருக்கும் வீட்டில் புகுந்தவீட்டினருடன் ஒன்றாக வாழ்வது கடினமான பிரயத்தனம் அல்ல! எப்போது இந்த புரிதல் இல்லாமல் போகிறதோ, எப்போது மருமகள் என்பவள் ‘நாம் சொல்வதை கேட்டு, வேண்டியதை செய்து, அனைத்திற்கும் தலையாட்டி வாழும் பதுமை’ என்கிற எண்ணம் எழுகிறதோ, அப்போது விழத் துவங்கும் விரிசல்கள்.

இந்நிலையில், வரம்புகளை வகுத்து, நம்முடைய மன ஆரோக்கியத்தையும் பேணி, புகுந்த வீட்டினருடனும் நல்லுறவு பாராட்ட பெண்ணுக்கு சமயோசிதம், அதாவது சூழ்நிலையை புரிந்து யோசித்து செயல்படுவது என்பது அதி அவசியம் ஆகும்.

சந்தோஷமான குடும்பம், நிம்மதியான வாழ்க்கை என்பதே நமக்கு பிரதானம், இல்லையா? இங்கே பகிரப்பட்டுள்ள சில விஷயங்களை புரிந்து பின்பற்றினால், அந்த சந்தோஷமும், நிம்மதியும் உங்கள் வீடு தேடி வரும் நாள் தூரத்தில் இல்லை.

1. குறையில்லாத மனிதரே இல்லை

பல பெண்கள் செய்யும் மிகப் பெரிய தவறு இது தான்: ‘என் மருமகளைப் பற்றி ஒரு குறை சொல்ல முடியாது’ என்ற பெயர் வாங்க முயல்வது!

‘குறையே இல்லாத மனிதர்’ என்பது ஒரு மாயை. இதை உணர்ந்து, உங்களை நீங்கள் வருத்திக் கொள்வதை நிறுத்துங்கள்.

உங்கள் நிறை, குறைகளுடன் நீங்கள் யாரோ, அப்படியே இருக்க பழகுங்கள். அதை அப்படியே ஏற்றுக்கொள்ள உங்கள் புகுந்த வீட்டார் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொள்வார்கள் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

2. வரம்புகளை வகுத்து வைப்போம்

உறவுகளுக்குள் எல்லை, வரம்பு என்பது அதி முக்கியமான ஒன்று. இல்லாவிட்டால் உங்களை, உங்களுக்கான பிரத்யேக அந்தரங்க நேரத்தையும் இடத்தையும் யார் வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள்.

“நீ நல்லா இருக்கியா? நானும் நல்லா இருக்கேன்” என்று சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் வரும் லக்ஷ்மி அவர்கள் சொல்வது போல், எல்லைகளுடன், பரஸ்பர மரியாதையுடன் உறவுகள் மீது அன்பு காட்டி வாழ முடியும். இது உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களும் அதீத நிம்மதியை பெற்றுத் தரும்.

3.நேர்மறையான உறுதி மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

வாழும் காலம் முழுவதையும் ‘சாதுவான பெண்’ ஆகவே கழித்துவிட உங்களால் முடியுமா? உங்களுக்கு வேண்டிய, உங்களுக்கு முக்கியமான விஷயங்களுக்காக தன்னம்பிக்கையுடன், தைரியத்துடன், நேர்மறையான உறுதியுடன் நிற்கப் பழகுங்கள்.

மற்றவர்களின் எண்ணங்களை, விருப்பங்களை பின்னுக்குத் தள்ளி வாழ்வது இல்லை, இது. உங்களுடைய அடிப்படை நம்பிக்கைகளை, சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்காமல், பரஸ்பர மரியாதை உணர்வுடன் வாழ்வது தான் இது.

4. பிரச்சனைகளையும் சண்டைகளையும் துவங்காதீர்கள்

எந்த சூழ்நிலையிலும் சண்டையை நீங்கள் துவங்காதீர்கள். பெருந்தன்மையோடு பிரச்சனைகளை பேசித் தீர்க்க முயலுங்கள். அடுத்தவர்களின் குறைகளை பெரிதுபடுத்தாமல் அவர்களுடைய நற்பண்புகளை மனதில் வைத்து பிரச்சனையை கையாளுங்கள்.

சாந்தமாக இருந்து, அடுத்தவர் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுவிட்டு, உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுங்கள். சுமுகமாக பிரச்சனைகளை தீர்க்கும் வீடுகளிலேயே நிம்மதி குடிகொள்கிறது.

5. நடந்தவற்றை கடந்து விடுங்கள்

‘இதுவும் கடந்து போகும்’ என்று நடந்து முடிந்த கடந்த கால கசப்புகளை விடுத்து, மறந்து, விட்டுக்கொடுப்பது பல சமயங்களில் நிம்மதியை பெற்றுத் தரும்

இப்படி இது போன்ற பழைய தவறுகளை கசப்புகளை மறந்து, விட்டுக்கொடுப்பதால் நீங்கள் தாழ்ந்தவர், ஏமாளி என்று அர்த்தமில்லை. மாறாக இது உங்கள் உள்ள வலிமையை பறைசாற்றும் சான்று என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

6. மரியாதையே நமக்கு மாண்பு

எல்லா நேரங்களிலும் மரியாதையுடன் நடந்து கொள்வது, இல்லங்களில் நிம்மதி விளைவிக்கும் சூத்திரம். நாம் எவ்வளவு மரியாதையுடன் பிறரிடம் நடந்து கொள்கிறோமோ, அதே அளவு மரியாதை நமக்கும் கொடுக்கப் படும்.

பணிவுடன், மரியாதையுடன் நடந்து கொள்வதற்கும் அடிமை போல் ‘ஆமாம் சாமி’ சொல்லிக் கொண்டு இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள் அடிபணிய வேண்டாம். அன்புடன் கனிவுடன், மதிப்புடன் நடந்து கொள்வதே மரியாதை அளிப்பதன் அர்த்தம்.

7. தியாகம் செய்யாதிருங்கள்

ஒருமுறை செய்தால் திரும்பி வராத தியாகங்களை அறவே செய்யாதீர்கள். அனுசரித்து வாழலாம், தவறில்லை. ஆனால் உங்களுக்கு மிக விருப்பமான விஷயங்களை, உங்கள் தனிப்பட்ட அடையாளத்தை, கொள்கைகளை தியாகம் செய்து உங்களை நீங்களே இழந்து விடாதீர்கள்.

உங்களிடம் இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை உடையவரிடம் பொறுமையாக அமர்ந்து பேசி, புரிய வைக்க முயன்று பாருங்கள். ஏன் உங்களால் அவர்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தியாகத்தை செய்ய முடியாது, அது உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று விளக்கிச் சொல்லுங்கள்.

8. அங்கீகாரத்தை எதிர்பார்க்காதீர்கள்

உறவுகளுக்குள் அங்கீகாரம் என்பது தானாக, இயல்பாகக் கிடைக்க வேண்டிய ஒன்று. இதை யாரிடமும் எதிர்பார்த்து விடாதீர்கள். அவர் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், அவரிடம் பாராட்டையோ, அங்கீகாரத்தையோ எந்த சூழ்நிலையிலும் எதிர்பார்க்காதீர்கள்.

தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்கள் மட்டுமே பிறரது அங்கீகாரத்தை நாடுவர். நீங்கள் அந்த நிலைக்கு போக வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டியது, கிடைக்க வேண்டிய நேரத்தில் தானாகவே உங்களிடம் வந்து சேரும் என்று உங்கள் மீது நம்பிக்கை வைத்து எதையும் செய்யுங்கள்.

உங்கள் புகுந்த வீட்டாருடன் வாழ்வது உங்களை மன உளைச்சல் அளிக்கிறதா?

ஒரு விஷயத்தை தெளிவாக பற்றிக்கொள்ளுங்கள்: எதுவாக இருந்தாலும், அது உங்களது மன ஆரோக்கியத்தை பாதிக்கும் அளவு போகக்கூடாது. நீங்கள் மன உளைச்சலுக்கு அழகி இருப்பீர்கள் எனில், அதற்கு முதல் காரணம் நீங்கள் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே போட்டு மூடி வைப்பது தான். எதுவாக இருந்தாலும் நம்பிக்கையுடன், கனிவாக எடுத்துச் சொல்லி தீர்வடையப் பாருங்கள். நீங்கள் பேசாவிடில், உங்களுக்கு மனா உளைச்சல் உள்ளது என்பது கூட யாருக்கும் தெரியாமலேயே கூட போய்விடும் அபாயம் உள்ளது.

அளவுக்கு மீறி பாரம் சுமக்காதீர்கள்.

உங்களுடைய தனிப்பட்ட உடல், மன, உணர்வுரீதியான தேவைகளை நிறைவு செய்யாமல் பின்னுக்குத் தள்ளாதீர்கள். இதுவே நீங்கள் உளைச்சல் இன்றி வாழும் வழிக்கான அஸ்திவாரம்.

குடும்பம் என்பது அன்பினால் இணைந்து எல்லோரும் கூடி இழுக்கும் தேர் போன்றது. அனுசரித்து வாழ்வது முக்கியம், ஆனால் உங்களுடைய அன்பை, பணிவை கண்டுகொள்ளாமல் உங்களை இரண்டாம்பட்சமாக நடத்தும் இடத்தில், உங்களுக்கான மரியாதையை நீங்கள் நிலைநாட்டுவது அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

பட ஆதாரம்: ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படம்

About the Author

Priyanka Joshi

Single mom to a lovely daughter, blogger and Founder at Sanity Daily. An NLP practitioner, advocating Mental health since 2016. Among the top 15 Mental Health Bloggers, read in 60 Countries. Helping you priortise your read more...

1 Posts | 2,801 Views
All Categories