விவாகரத்து: அன்பின் எதிரியா, இல்லை வாழும் உரிமையா?

நம் சமுதாயம் விவாகரத்து என்பதை ஏற்றுக்கொள்ளாது என்று தெரிந்தும் அதனை நோக்கி ஒருவர் சென்றால், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப் பட்டிருப்பார்?!

நமது சமுதாயம் விவாகரத்து என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. இந்நிலையிலும் விவாகரத்தை நோக்கி ஒருவர் உந்தப்படுகிறார் என்றால், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப் பட்டிருப்பார்?!

“உங்களது நண்பரையே நீங்கள் திருமணம் செய்து கொண்டால், 70% விவாகரத்து ‘ரிஸ்க்’ இல்லை, தெரியுமா?”

அதாவது, நான் ‘சோஷியல் மீடியா’வில் கண்ட இந்த பதிவின் படி ‘நண்பர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் நிலைத்து நிற்பதற்கு 70% உத்தரவாதம் உள்ளது’.

இந்த பதிவின் பின்னணி என்ன? இது குறித்து ஆய்வு ஏதேனும் மேற்கொள்ளப் பட்டதா? ஆம் என்றால், அது எப்படிப்பட்ட ஆய்வு, எவ்விதமாக கணிக்கப் பட்டது?
இதில் எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. எப்படி இருந்தாலும், சோஷியல் மீடியா பதிவுகளை கண்ணை மூடிக்கொண்டு நம்பும் வழக்கமும் எனக்கு இல்லை.

ஆனாலும் இந்த பதிவில் இடம்பெறும் ‘ரிஸ்க்’, அதாவது ‘இடர்’ எனும் சொல்லின் பயன்பாடு என்னை யோசனையில் ஆழ்த்துகிறது.

விவாகரத்து: சாபமா, விடுதலையா?

பிரிவு என்பது எப்போது அன்பின் எதிர்பதம் ஆனது? Is separation the opposite of love?

விவாகரத்து என்பதை ஏன் திருமணத்திற்கு வந்த ஆபத்தாக, தேவ-அசுர யுத்தம் போல் பார்க்க வேண்டும்? ‘இதற்கு மேல் இந்த உறவில் நீடிக்க முடியாது’ என்ற நிலைவரும்போது, நீடித்தால் துயரம் தான் என்கிற புரிதல் ஏற்படும் போது, விவகாரத்து என்பது சம்பந்தப் பட்டவர்களுக்கு ஒரு விடிவு இல்லையா?

முதலில் நாம் அனைவரும் ஒரு உண்மையை அங்கீகரிக்க வேண்டும்:
இந்திய சமூகக் கட்டமைப்பில் விவாகரத்து என்ற முடிவினை அவ்வளவு எளிதாக யாரும் எடுக்க மாட்டார்கள், எடுத்து விடவும் முடியாது.

நம் சமுதாயத்தில் மணமுறிவு என்பது சுலபமல்ல

பெரும்பாலும், விவாகரத்து செய்ய முயற்சிப்பவர்களையோ, விவாகரத்து ஆனவர்களையோ நமது சமுதாயம் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது நிதர்சனம்.

பரிதாபம், ஏளனம், வெறுப்பு, கலாச்சார சீர்குலைப்பு என ஏதோ ஒரு அம்பு அவர்களை நோக்கி பாய்ந்து கொண்டே தான் இருக்கும்.

‘இப்படி ஒரு சூழலை மீறி ஒருவர் விவாகரத்தை நோக்கி உந்தப் படுகிறார் என்றால், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப் பட்டிருப்பார்’ என்று எண்ணிப் பார்ப்பது குறைவு.

திருமணத்தால் இணைக்கப் பட்ட இருவர், ஒருவரை விட்டு ஒருவர் பிரிவது அப்படி ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல. பிரிவு என்பது தீ மேல் நடப்பதை போன்ற ஒரு வேதனையை அவர்களுக்கு அளிக்கலாம், யார் அறிவார்?

ஆனால் அவர்கள் திருமணம் என்பதில் பிணைக்கப் பட்டவர்களாக இருந்தால்? இணைந்து வாழ்வதே தீ மேல் நடப்பதை போன்ற வேதனையை அளிப்பதாக இருந்தால்? இப்படிப் பட்ட சூழலில் விவாகரத்து என்பது வாய்ப்பா அல்லது சாபமா?

உயிரற்ற திருமண உறவுக்குள்…

குழந்தைகளுக்காக மட்டுமே அன்பும், நிம்மதியும் இல்லாத திருமண உறவில் தொடர வேண்டும் என்றால், தங்கள் வீட்டு நிலையை பார்த்து வளரும் பிள்ளைகள் எங்கிருந்து பரஸ்பர நேசம், நம்பிக்கை மற்றும் திருமண வாழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சியை பற்றி அறிந்து கொள்வார்கள்?
ஊருக்காக, பிள்ளைகளுக்காக உறவுக்குள் அன்பின்றி, நிர்பந்தத்தால் இணைந்து வாழ்பவர்களுக்கு, திருமணம் சிறை போல் ஆகாதா? ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இது சரியான அடித்தளம் தானா?

நிறைய பெண்கள், விவாகரத்து என்கிற சட்டப் பூர்வமான சாத்தியத்தை, விமோசனத்தை நோக்கிப் போகாமல் இருப்பதற்கு முதல் காரணம், சமுதாயத்தில் விவாகரத்து குறித்து நிலவும் கருத்துகளும், விவாகரத்து ஆனவர்கள் மீது காட்டப் படும் பாரபட்சமும் தான் என்பதை நாம் மறுக்க முடியுமா?

அது உண்மை என்றால், எது பேராபத்து? விவாகரத்தா? இல்லை மனிதர்களை, குறிப்பாக பெண்களை உயிரற்ற திருமண உறவுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் சமுதாய பழக்கவழக்கங்களா?

தன்னுடைய வாழ்க்கை முடிவை தானே சுயமாக எடுத்து, நிம்மதியாக வாழும் உரிமை ஒருவருக்கு மறுக்கப் படுகிறது என்றால் குறைபாடு எங்குள்ளது?
வாய்ப்பு மறுக்கப்பட்ட அந்த நபரிடமா? அல்லது வாய்ப்பளிக்க மறுக்கும் சமுதாய வழக்கத்திலா?

சிந்திப்போம்.

பட ஆதாரம்: Pexels.com

About the Author

3 Posts | 4,421 Views
All Categories