நான் பலவந்தப்படுத்தப் பட்டிருக்கிறேன்

பலவந்தப்படுத்தப்பட்ட பெண் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லும் புனையப்பட்ட படைப்பு; இதில் தொனிக்கும் உண்மையும் வேதனையும் மறுக்க முடியாதது.

பலவந்தப்படுத்தப்பட்ட பெண்ணின் உள்ளம் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லும் கற்பனை வடிவம். முழுக்க முழுக்கப் புனையப்பட்ட படைப்பு என்றாலும், இதில் தொனிக்கும் உண்மையும் வேதனையும் மறுக்க முடியாதது.

நடுநிசியில் பலவந்தப்படுத்தப் பட்டிருக்கிறேன்,
வெட்ட வெளிச்சத்தில் பலவந்தப்படுத்தப் பட்டிருக்கிறேன்,
தெரிந்தவர்கள் தெரியாதவர்களால் பலவந்தப்படுத்தப் பட்டிருக்கிறேன்.

சிறுமிகளை மானபங்கப் படுத்தத் தெரிந்த
வயதில் மூத்த அத்தானால்
உடை ஒதுக்கப்பட்டு,
இறுக்க அணைக்கபட்டு,
வளர வேண்டிய மார்பு, 
கைகளால் கூசப்பட்டு,
என் வாழ்க்கை 
அர்த்தமற்று
அற்பமாய் போனது.

அவனுக்கோ, ஏக்கம்;
எனக்கோ, துக்கம்.

மானபங்கம்,
துன்புறுத்தல் – 
படித்தவர்கள் பேசிக்கொள்ளும்
சொற்கள்.
ஐந்து வயது குழந்தையாய் நானோ,
பாலியல் துன்புறுத்தலால் 
அறிந்த அனுபவம்.

பருவமடைந்த பின்பும்,
நான் பலவந்தப்படுத்தப் பட்டிருக்கிறேன்.

அன்று,
அவைகளது
பின்னிரவு இரகசிய சந்திப்பைக்
கெடுத்த
அழையா விருந்தாளியாய்
நான்
நாய்களால் குரைக்கப்பட்டேன்.

அச்சுறுத்தவதாய்
எரிந்து கொண்டிருந்த
தெரு விளக்கு,
என் மூச்சை அடைத்தது.
பயத்தை போக்க முயன்றேன்.

வேகமாய் நடையைக் கட்டினேன்.
எதிரில் பறந்து வந்த வண்டி,
என்னை இடித்து விடும் நொடியில் நின்றது.
பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன்
வண்டியிலிருந்து குதித்து
என் கைகளை பின்னோக்கி
இறுக்கிப் பிடித்தான்.

என் அனுமதியின்றி,
தன் முகத்தை
என் கழுத்தில்புதைத்து,
அழுத்தமாய் முத்தமிட்டான்,
நிசப்த இரவில்.
போதை வாடை,
அவன்
மதுக் கடையிலிருந்து 
வருவதை தெரிவித்தது.

அடுத்து வண்டி ஓட்டியவன்
என் முகத்தை அழுத்தி,
என் உதட்டை கடித்து,
என் மேலாடைக்குள்
கைகளை ஊடுருவினான்.

முட்கள் போன்ற
தாடிக்குள்
ஒளிந்திருக்கும்
உதடு,
என் முகத்தை
கிழித்தது.
என் வயிறு,
வலியில்
துடித்தது.

இரு கைகளும்
ஒருசேர,
பயத்தில் உறைந்து போயின.
என் மூச்சுக் காற்றும் கூட.
இரக்கமற்று
இரையை
ஆசை தீர பகிர்ந்து உண்ட பின்,
குப்பையாய்
வீசிவிட்டு சென்றனர்.

ஆனால்,
என்னை கோபமடையச் செய்ததோ,
மறுநாள்
தொலைக்காட்சியிலும்,
நாளிதழ்களிலும்,
அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த
காட்சிகளில்
என் முகத்தை மட்டுமே
காட்டிய
ஊடகங்கள் தான்.

என் உடையை
குற்றம் சாட்டினர்.
இரவு நேரத்தில்
பாதுகாப்பின்றி
உலவியதைச்
சுட்டிக் காட்டினர்.

ஏன்?
என்னை மானபங்கப் படுத்தியவர்கள்
விடுதலையாய் உலா வரும் பொழுது,
ஏன் என்னை மட்டும்
குறி வைக்கின்றீர்?

சேலை மேல் விழுவது முள். ஆனாலும் சேதாரம் சேலைக்குத் தானா? முட்களைக் களையும் காலங்கள் பிறக்கட்டும்.

பட ஆதாரம்: Pexels.com

About the Author

Dhevapriya R J

An Interior Designer by profession and a Calligrapher, Voiceover artist, Content writer by passion. read more...

4 Posts | 8,106 Views
All Categories