ஓ மை கடவுளே: இது அனு சொல்லும் கதை!

தமிழ் சினிமாவில் ஏன் ஹீரோ கண் வழியாவே எல்லாத்தையும் பார்க்க வைக்கறீங்க? அப்போ ஹீரோயினோட கதை? அதையும் சொல்கிறாள், 'ஓ மை கடவுளே' அனு!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எல்லோரும் பண்றது தான் – ஹீரோ கண் வழியாவே எல்லாத்தையும் பார்க்க வைக்கறது! ஆனால் ஹீரோயினோட கதை, அவள் மனசு? சொல்கிறாள், ‘ஓ மை கடவுளே’ அனு!

ஹலோ, டைரக்டர் அஸ்வத் சார்!
வணக்கம். நான் தான் ‘நூடுல்ஸ் மண்டை’ அனு பேசறேன்.

முதலில் கோவிட், லாக்டவுன்-ன்னு எல்லாரும் முடங்கும் முன் ‘ஓ மை கடவுளே‘ன்னு ஒரு அழகான திரைப்படத்தை கொடுத்துக்கு ஒரு பெரிய ‘தேங்க் யூ’!

ஹீரோ கண் வழியாவே எல்லாம்…?

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட எல்லாரும் பண்றது தான் – ஹீரோ கண் வழியாவே எல்லாத்தையும் பார்க்க வைக்கறது. நீங்களும் உங்க படத்துல அர்ஜுன் கண்ணோட்டத்தில் இருந்து அவனோட கதையை எல்லாருக்கும் சொன்னீங்க. ஆனால் அனு ஆகிய என் பக்கத்து ஸ்டோரி? அதையும் சொல்லணுமே!
என் கதையை நானே சொல்றேன்.

எனக்கு அர்ஜுனை சின்ன வயசுல இருந்தே தெரியும். என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். உயிர் நண்பன்! தன்னைப் பற்றி நல்லா புரிஞ்சுகிட்ட பையனை தானே எந்த பொண்ணுக்கும் பிடிக்கும்?! அப்படித் தான் அர்ஜுனை எனக்கு பிடிச்சது.

எனக்கும் பெரிசா ரொமான்டிக் ஃபீலிங்ஸ் எல்லாம் இல்லை. காலேஜ் டைம்-ல சில சமயம் அவனை பார்க்கும் போது, “பேசாம இவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?”ன்னு மனசுல ஒரு எண்ணம் எட்டிப் பார்க்கும்.
ஆனால், என்ன தான் “உன் முகத்தை பார்த்தால் எனக்கு தெரியாதா”ன்னு சொல்லும் அளவுக்கு புரிஞ்சு வைச்சிருந்தாலும், அவனுக்கு என் மேல ஃபீலிங்ஸ் இருக்கிற மாதிரி எதுவும் தெரியலை. அப்போ தான் ‘லவ் இருவழிப் பாதை’ என்பதை நான் புரிஞ்சுக்கிட்டேன்.

இருந்தும், ஒரு நாள் அவன் எங்க நண்பன் மணி கிட்ட “தெரியாத பொண்ணை எல்லாம் கட்டிக்க முடியாது’ன்னு சொன்னப்போ, உடனே, “அர்ஜுன், நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”ன்னு கேட்கணும் ன்னு தோணிச்சு. அப்படியே கேட்டும் விட்டேன் – ஆமாவோ இல்லையோ, பின்னாடி ‘இதை நம்ம கேட்காம விட்டுட்டோமே’ ன்னு ஃபீல் பண்ணக்கூடாது இல்லையா? இருப்பது ஒரே ஒரு லைஃப்!

அப்புறம் அர்ஜுன் ஒகே சொன்னதும், ரெண்டு பேர் வீடும் சந்தோஷப்படற மாதிரி எங்களுக்கு கல்யாணம் நடந்தது. அப்புறம் எல்லாமே நடந்தது – மீராவின் வருகை, எங்களுக்குள் பிரிவு, அர்ஜுன்க்கு லைஃப்-இல் கிடைச்ச இரண்டாம் சான்ஸ், புரிதல், சேர்தல், காதல் ன்னு எல்லாமே.

ஏன் அர்ஜுன் மட்டும் கஷ்டப் படறதா காட்டி இருக்கீங்க?

ஆமா, டைரக்டர் சார், அது என்ன? அர்ஜுனோட ரெண்டு வெர்ஷன்-லையும் அவன் மட்டும் ரொம்ப கஷ்டப் படற மாதிரி காட்டி இருக்கீங்க?

முதல் வெர்ஷன்ல, எனக்கும் என்னோட உயிர் நண்பனை டக்குனு ‘கணவனாக’ பார்க்க முடியலை.
ஆனா ஒரு பொண்ணுக்கு “இந்த பையன் கிட்ட நாம பாதுகாப்பா இருப்போம்”ன்னு மனசுல நின்னுட்டா, அந்த பொண்ணுக்கு அவன் மேல வரும் அன்புக்கு எதுவும் ஈடு இல்லை.

ரெண்டாவது வெர்ஷன்ல – அதான் கடவுள் அர்ஜுன்க்கு செகண்ட் சான்ஸ் கொடுப்பாரே– அந்தப் பகுதியில், கதை ஒரு குட்டி ‘டைம் ட்ராவல்’ பண்ணி, நான் அர்ஜுன் கிட்ட “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா”ன்னு கேட்ட இடத்துலருந்து கதை மறுபடியும் தொடங்குமே – அங்கே…

கடவுள் அர்ஜுன்க்கு செகண்ட் சான்ஸ் கொடுப்பாரே!

‘லவ் இருவழிப் பாதை’ என்பதை புரிஞ்சுக்கிட்ட எனக்கு, அர்ஜூன்க்கு மீரா மேல ஒரு ஈர்ப்பு இருக்குன்னு தெரிஞ்சப்போ, எனக்கு பிடிச்ச பையனை இன்னொரு பொண்ணு கூட பார்க்கும் போது மனசு ரொம்ப வலிச்சது!
ஆனால் ‘அவனாவது சந்தோஷமா இருக்கட்டும்’ன்னு எண்ணத்தில் நான் எங்க அப்பா பார்த்த மாப்பிள்ளை, மேத்யூ-க்கு ஒகே சொன்னேன்.

‘அது எப்படி இன்னொரு பொண்ணுக்கு அவனை விட்டுக் கொடுக்க முடியும்’ன்னு கேட்கறீங்களா? ஏன் னா நான் பொண்ணு 🙂
(காதல் குழப்புதே…!!)

அதனால் தான் மீராவை இம்ப்ரெஸ் பண்ண நானே ஐடியா கொடுத்தேன். ஆனால் சில விஷயம் எல்லாம் வாழ்க்கையில் லேட்டா தான் புரியுது.
நான் கொடுத்த வீடியோ-மொண்டாஜ் ஐடியா மாதிரியே, நானும் முயற்சி எடுத்து ஒரு வீடியோ பண்ணி அதோட முடிவில் அர்ஜுன் கிட்ட ‘ப்ரபோஸ்’ பண்ணி இருந்தால், என் மனசை சொல்லி இருந்தால், அவனும் இம்ப்ரெஸ் ஆகி இருப்பான்- என் மனசை, என் நேசத்தை புரிஞ்கிட்டு இருந்திருப்பான், இல்லையா?

எது எப்படியோ, அந்த 2 நாள் பைக் ட்ரிப் என்னோட வாழ்கையிலேயே சிறந்த 2 நாட்கள்! அப்போ அவன் சொன்ன “நீ செம்ம பொண்ணு, அனு”, வாய் தவறி அவன் சொன்னதாக நான் நினைச்ச “ஐ லவ் யூ, அனு” – அந்த ரெண்டும் – நான் வெளியில காட்டிக்காமல் இருந்தாலும், அது எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!!

அப்புறம் எல்லாமே அழகா அமைய, அர்ஜூனையும் என்னையும் சேர்த்து வைச்சுட்டீங்க- தேங்க் யூ! ஆனாலும் இது நடக்கும் ன்னு எப்படியோ எனக்கு முன்னாடியே தெரியுமே! ‘எப்படி?’ன்னு கேட்கறீங்களா?

ஏன் னா நான் பொண்ணு 🙂
(‘ராகவன் இன்ஸ்டிங்க்ட்’ன்னு சொன்னா மட்டும் ஒத்துக்கறீங்க இல்லை? அப்படித் தான்!)

இப்படிக்கு
‘நூடுல்ஸ் மண்டை’ அனு!

பட ஆதாரம்: ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்

About the Author

Dhevapriya R J

An Interior Designer by profession and a Calligrapher, Voiceover artist, Content writer by passion. read more...

4 Posts | 8,625 Views
All Categories