கொஞ்சம் கனிவு, கௌரவம், தன்மானம்: இதையே பெண்கள் விரும்புகிறோம்

எத்தனையோ விஷயங்களை பெண்கள் தியாகிக்க வேண்டி உள்ளது. ஆனால் பெண்களுக்கு உரிய கௌரவம் மட்டும் ஏனோ கிடைப்பதில்லை.

பெண்கள் தங்கள் வாழ்வில் எண்ணற்ற சவால்களை அனுதினமும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எத்தனையோ விஷயங்களை பெண்கள் தியாகிக்க வேண்டி உள்ளது. ஆனால் அவர்களுக்கு உரிய கௌரவம் மட்டும் ஏனோ கிடைப்பதில்லை.

அரும்பாடு பட்டு படித்த படிப்பையும் கிடைத்த வேலையையும் கூட குடும்பத்துக்காக பெண்கள் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் நம் நாட்டில் உள்ளது. ஆனால், இப்படி தகுதி இருந்தும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ள பெண்களை ‘சும்மாத் தான் வீட்டில் இருக்கிறாள்’ என்று பட்டம் கட்டிவிடுவார்கள் அனைவரும்.

இங்கே பெண்கள் செய்யும் தியாகங்களை யார் மதிக்கிறார்?

பெரும்பாலும் பெண்களை மதிப்பது பெண்கள் மட்டும் தான். பெண்மையை போற்ற வேண்டும் என்ற வாட்ஸ்அப் மெசேஜ் இத்யாதிகளும் பெண்களுக்குள்ளேயே சுழல்கிறது.

அன்னையர் தினம், பெண்கள் தினம் தவிர்த்து மற்ற நாட்களில் யாரும் பெண்களை, அவர்களது சிறப்புகளை மெச்சப் போகிறார்? தமிழ் சினிமா வேண்டுமானால் பேசும் – அதுவும் ‘அம்மா சென்டிமென்ட்’ என்பதாகத் தான் பெரும்பாலும் இருக்கும்.

பெண்களை நிஜமாகவே மதிக்கும் ஆண்கள் உள்ளார்கள் – அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஆனால், பொதுவாக நம் ஊரில் ஆணுக்கு பெண் என்றால் இளக்காரம் தான்.

வீட்டுக்குள் ஏற்றத்தாழ்வு

ஒரு ஆணுக்கு, தான் பிறப்பது முதல், தன் குழந்தையை பெற்றெடுப்பது வரை பெண் தேவை. ஆனால் அவளுக்கு உரிய கௌரவம் தர மட்டும் ஏனோ மனது வரவில்லை. காலம் காலமாய் கொம்பு சீவி வளர்த்துவிட்டவர்களைச் சொல்ல வேண்டும் .

சாலையில் நடக்கும்போது தெரியாமல் இடித்து விட்டால் கூட யார் யாருக்கோ சாரி சொல்வார்கள், மன்னிப்பு கேட்பார்கள். வெளிமனிதர்களிடம் அவ்வளவு பரிவோடு இருப்பார்கள். ஆனால், வீட்டில் சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தால், தட்டு பறக்கும். இதை ‘கோபப்படும் உரிமை’ என்று சொல்லித் திசை திருப்பி விடுவார்கள்.

பெண்களாகிய எங்களுக்கு வரும் கோபத்திற்கு நாங்கள் என்ன செய்ய?

பூமியை விடவும் பெண் மகத்துவமானவள் தான். நிலத்தில் ‘எதை விதைக்கிறாயோ அதைத் தான் அறுப்பாய்’ என்பார்கள். ஆனால் பெண் மேல் ஒருவர் கோபத்தை விதைக்கும் போது, பெரும்பாலும், மௌனமோ கண்ணீரோ தான் வெளிப்படும். மிஞ்சிப்போனால் கோபமான ஒரு பார்வையுடன் விலகி விடுகிறாள் பெண். மீறி, தன் கோபத்தைக் காட்டினாள், ‘நீ எல்லாம் ஒரு குடும்பப்பெண்ணா’ என்று கேட்கப் படுவாள்.

“ஆண் சொன்ன வகையில் எல்லாம் பணிந்து போன பெண்கள், இன்றைய காலக்கட்டத்தில் கொஞ்சம் மாறித்தான் விட்டார்கள்” என்று சொல்வதிலும் வெளிப்படுவது ஆண்களின் ஆதிக்க குணம் தான்.

வீட்டுக்குள் கனிவும் வீடு தாண்டி கண்ணியமும் வேண்டும்

ஆடவர்களே, பெண்ணை முதலில் சக மனுஷியாக பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண் தான் என்றாலும் அவளுக்கும் மரியாதை கொடுங்கள்.

காலையில் எழுந்ததும் அழகாய் ஒரு காலை வணக்கம் சொல்லுங்கள்.
காபி குடித்ததும் நன்றாக இருந்ததாக பாராட்டுங்கள்.

யாரது அங்கே சொல்வது, “நன்றாக இருந்தால் நாங்கள் சொல்ல மாட்டோமா” என்று?
நீங்கள் கூடத் தான் பார்க்க படு சுமாராக இருக்கலாம். ஆனால் நாங்கள் உங்களை அரவிந்த்சாமி போல நினைத்து பாராட்டுவதில்லையா? அப்படித் தான்.

இந்த அணுகுமுறை மூலம் வீட்டில் சமநிலையை குடியேற்றுங்கள். மற்றவை தானாக அமையும்.

ஆடவர்களுக்கு வேண்டுகோள்

சில ஆண்களுக்கு சில வருந்தத்தக்க பழக்கங்கள் உண்டு. அது போன்றவர்களுக்கு, அடுத்த வீட்டுப் பெண்ணின் அங்கங்களை அத்துமீறி பார்க்கும்போதும், அத்துமீறிப் பேசும் போதும் ‘வேறொருவன் நம் வீட்டுப் பெண்களை அப்படிப் பார்த்தால் ஒப்புவோமா?’ என்று யோசனை வந்தாலே போதும், கண்ணோட்டம் மாறும்.

கொஞ்சம் கனிவு, கௌரவம், தன்மானத்தோடு சுதந்திரமாக வாழவே பெண்கள் விரும்புகிறோம். இதைத்தான் பெண்கள் கேட்கிறோம். இது தவறா?

இதை வாசிக்கும் என் இனிய தந்தை, சகோதரன், மகன் போன்ற வயதில் உள்ள அனைத்து ஆண்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்: ஒருவேளை, மேலே நான் குறிப்பிட்ட எதிர்மறையான விஷயங்களை உங்களில் யாராவது செய்வீர்களானால், இன்று முதலேனும் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

எறும்பு ஊர கல்லும் தேயும். முயன்று பாருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.

பட ஆதாரம்: ‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படம்

About the Author

2 Posts | 3,867 Views
All Categories