Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
நமக்கு பிடித்ததை நமக்காக சமைக்கும் அம்மா பலர் உள்ளனர். அம்மாவுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கும் பிள்ளைகள் எத்தனை பேர் இருக்கிறோம்?
‘எங்க அம்மா கைமணமே தனி!’ சிறியவரானாலும், பெரியவரானாலும் ‘அம்மாவின் கை மணம்’ என்பதற்கு அவரவர் மனதில் ஒரு தனியிடம், ஒரு தனி மகிமை உண்டு.
‘நாம் என்ன கேட்டாலும் நமக்கு செய்து தருபவள் தாய்’ என்ற எழுதப்படாத விதிக்கேற்ப நமக்கு பிடித்த சுவையான உணவுகளை தாயிடம் உரிமையோடு கேட்டு பெற்ற பிள்ளைகள் இங்கே கோடி. ஆனால் இந்தப் பெருமை மட்டுமே தாய்மை பெறும் சன்மானமா?
Original in English | மொழிப்பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி
நம் நாட்டைப் பொருத்த வரை ஐந்து நட்சத்திர ஹோட்டல் உணவாகவே இருந்தாலும், அது அம்மா சமைத்த உணவுடன் ஒப்பிடுகையில் ஒரு படி கீழ் தான். சுத்தத்தோடு, அக்கறையோடு, அன்போடு சமைத்து பரிமாறப்படும் அன்னையின் கைமணத்திற்கு ஈடு இணையே கிடையாது.
அம்மா செய்யும் உணவில் அவ்வளவு மகத்துவம் இருக்கையில், எனக்கு மட்டும் ஏன் அதை உண்ணும் பொழுது ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது?
‘அம்மா சமைத்ததை சாப்பிடுவதில் குற்ற உணர்வா’ என்று கேட்கிறீர்களா? தவறாக எண்ண வேண்டாம் – என்னுடைய அம்மாவின் சமையல் என்றால் எனக்கு உயிர்! அவர் எனக்கு செய்து தருவதை போன்றே நானும் ஒரு நாள் அவருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.
அம்மா செய்யும் உணவு தனித்துவம் நிறைந்தது; ஏனெனில், ‘ரொம்ப நல்லா இருக்கு’ என்ற புகழ்ச்சிக்காக இல்லாமல், ‘என் பிள்ளைகள், என் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்பதற்காகவே செய்யப்படும் உண்வு அது.
ஆனால் என்ன சொன்னாலும் சமையல் என்பது உழைப்பு அல்லவா?நல்ல சுவையான, சத்தான உணவினை, அன்றாடம், வேளாவேளைக்கு செய்வது என்பது, மனமொன்றி மூளையும் ஐம்புலனும் கைகளும் இணைந்து செய்யும் வேலை அல்லவா! சமையல் என்பது ஒரு உன்னதமான, பக்குவம் சார்ந்த கலை, இல்லையா? அது வித்தை; அது உழைப்பு.
குழந்தைகள் என்றில்லை, பெற்ற பிள்ளைகள் பெரியவர்கள் ஆன பின்னும் கூட தாயானவள் சமையல் என்ற பணிக்காக உழைக்க வேண்டியே உள்ளது. சமையல் என்று மட்டும் இல்லை, பொதுவாகவே தாய் செய்யும் பல தியாகங்கள் நமக்கு புலப்படாமலே போய் விடுகிறது.
சீக்கிரம் எழுந்து சமையல் வேலைகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவே தூக்கம் துறந்து உழைப்பவள், தாய்.
‘இன்று என்ன சமையல்’ என்ற சிந்தனை மூளைக்கு வைக்கும் வேலை, அவரவர் செய்து பார்த்தால் மட்டுமே தெரியும். யாருக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, எது ஒத்துக்கொள்ளாது என்று யோசித்து சமைப்பது என்றால் சும்மாவா?
நமக்காக எல்லாம் செய்யும் தாய்க்கு, பல நேரங்களில், தனக்காக என்று, ‘தனக்கு பிடித்த உணவை சமைத்து உண்ண வேண்டும்’ என்ற எண்ணம் கூட இருப்பதில்லை.
என்னுடைய இருபத்தி ஒன்றாம் அகவையில் தனியே வசிக்கத் தொடங்கிய நான், மாதம் ஒரு முறை தவறாமல் என்னுடைய பெற்றோர் வாழும் வீட்டிற்கு போய் விடுவேன் – அம்மாவின் சமையலை உண்பதற்கென்றே.
திருமணத்திற்கு பின் நானும் ஒரு இல்லத்தின் அரசியாக, ஒரு ஆதர்ச இந்திய மனைவியாக, வீட்டின் எல்லா வேலைகளையும் செய்யக் கற்றுக்கொண்டேன்.
தாய்மை அடைந்ததும், என்னுடைய குழந்தையின் ஒவ்வொரு தேவையையும் உணர்ந்து செய்யலானேன். ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடைய தாயின் சிறப்பும், அவர் செய்த தியாகங்களின் உன்னதமும் எனக்கு புலனானது. அவர் மீதான என்னுடைய மதிப்பு வானைத் தொடும் அளவு உயர்ந்தது – அதே சமயம், அம்மாவின் உணவுக்கான என்னுடைய தேவையும் ஆசையும் வளர்ந்து கொண்டே போனது.
என்னுடைய தாய்வீட்டிற்கு நான் போகும் போதெல்லாம், வாயைத் திறந்து ‘இது வேண்டும்’ என்று கேட்காமலேயே, நான் சொல்லாமலேயே அம்மா எனக்கு பிடித்தவற்றை செய்து வைத்திருக்க வேண்டும் என்றே என்னுடைய எண்ணம் இருந்தது.
அம்மாவுக்கு சூடான உப்புமா பிடிக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் நான் கவனித்திருக்கிறேன்: எல்லாரும் சாப்பிட்டு முடித்து அம்மா சாப்பிட உட்காரும் போது, சற்றே ஆறிப் போன உப்புமாவையே அம்மா உண்பார்.
‘ஏன் எங்களுக்கு முன்பே நீங்கள் உண்பதில்லை’ என்று கேட்டபோது, அம்மா வெறுமனே புன்னகைத்தார். அந்த புன்னகை என் நெஞ்சை பிசைந்தது. அதில் தெரிந்தது சோகமா, புதிரா, முரணா, ஏளனமா, குற்ற உணர்ச்சியா என்று என்னால் கண்டறிய முடியவில்லை.
ஆனால் ஒன்று புரிந்தது.
‘தன்னலம் துறந்த தியாகத் தாய்’ என்ற ஒரு மகுடம் சூட்டி, எந்த கடமையையும், தியாகத்தையும் தவிர்க்க முடியாத ஒருவராக அம்மாக்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ‘தாயாரின் கைச்சோறு தேவாமிர்தம்’ என்ற மூதுரை, நம் தாய்மார்களை பூட்டி வைக்க நாம் வடிவமைத்த ஒரு தங்கக் கூண்டு.
உதாரணத்திற்கு, என்னுடைய அம்மா என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் நான் அவருக்காக சமைத்திருக்கிறேன், ஆனால் ஒருபோதும் அவருக்கு பிடித்த உணவாக மெனக்கெட்டு சமைத்தது இல்லை. நான் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்கு போகும் போது கூட அவருக்கு பிடித்ததை சமைத்து எடுத்துச் சென்றதில்லை. ஆனால் ‘எனக்கு பிடித்ததை அம்மா சமைக்க வேண்டும்’ என்று அவரிடம் நான் கொண்ட எதிர்பார்ப்பு மாறவே இல்லை.
குறைந்தபட்சமாக, அம்மாவுக்கு பிடித்த உணவு செய்யப்படும் நாட்களில் கூட ‘நீங்கள் முதலில் சாப்பிடுங்க அம்மா’ என்று அம்மாவிடம் சொல்லும்படி ஏன் எனக்கு தோன்றவே இல்லை?
‘தாய்மை’ என்ற தத்துவதுடன் சொல்லப்படாத தியாகங்களையும், கிடைக்கப்பெறாத அங்கீகாரங்களையும் ஒட்டி வைத்தது போதும். தாய் என்றாலே சிறப்பு தான். அதில் ‘இதையெல்லாம் செய்தால் மட்டுமே இவள் நல்ல தாய்’ என்ற இலக்கணங்கள் தேவையா? போதும். நிறுத்துவோம் இதை.
அம்மாவும் ஒரு மனுஷி என்று முன்னிறுத்தி வைப்போம்.
அம்மாவுக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், கனவுகள் உண்டு என்பதை உணர்வோம். அதை முடிந்த அளவு நிறைவேற்றுவோம்; குறைந்தபட்சமாக அவர் மேல் நாம் திணிக்கும் எதிர்பார்ப்புகளை குறைத்து, அவரது பாரத்தை சற்றே குறைப்போம்.
இதை செய்தால் தாயின் கைச்சோற்றின் அருமை இன்னும் கூடிப் போகும். என் வீட்டில் இதை நடைமுறையாக்க நான் உறுதி பூண்டுள்ளேன். உங்கள் வீட்டில் எப்படி?
பட ஆதாரம்: ‘இங்கிலிஷ் விங்கிலீஷ்’ திரைப்படம்.
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address