‘என்ஜாய் எஞ்சாமி’ கொண்டாடும் உழைப்பால், இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கு அன்றே வித்திட்டவர் எம் முன்னோர்!

'என்ஜாய் எஞ்சாமி', எளியவர்களின் அடையாளத்தை கொண்டாடி, ஒப்பாரி எனும் பூர்வ கலை சார்ந்த அனுபவங்களை மீட்டளித்ததாக எழுதுகிறார், விஜயசாந்தி .

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல், எளியவர்களின் உழைப்பை, கண்ணியத்தை நோக்கி அவர்கள் எடுத்த முயற்சிகளை, அவர்களது அடையாளத்தை கொண்டாடுவதுடன் ஒப்பாரி எனும் பூர்வ கலை சார்ந்த அனுபவங்களையும் மீட்டளித்ததாக எழுதுகிறார், விஜயசாந்தி மூர்த்தி.

தமிழ் ‘இண்டி-பாப்’ பாடலான ‘என்ஜாய் எஞ்சாமி’க்கு உலகம் சுழலத் தொடங்கி இரண்டு வாரங்கள் வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

Original in Englishமொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

இவ்வளவு குறுகிய காலத்தில், உலகளவில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் தளத்தில் 5.7 கோடிக்கு மேற்பட்ட ‘வியூஸ்’ (views) பெற்று வைரலாகிக் கொண்டிருக்கிறது! மற்ற சமூக ஊடகங்களிலும் மீம்ஸ், ரீல், ட்வீட் மற்றும் நடன வீடியோக்களின் பங்களிப்பால் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் ட்ரெண்டிங்!

மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை மீட்ட நினைவுகள்

இந்த பாடல் வெளியான தேதி தொடங்கி இன்று வரை, இதனை நான்கைந்து முறை கேட்காமல் என் நாள் முடிவதே இல்லை – அப்படி நரம்புக்குள் ஊறி விட்டது இந்த பாடல் வரிகளும், இசையும், துடிப்பும்!

முதல் முறை நான் இந்த பாடலை கேட்ட போது – காட்சிப்படுத்திய பாடலை பார்க்கும் முன் கேட்ட போது – இதில் வரும் வரிகளும் தாளகதியும், துடிப்பும், என் புலன்களை ஆழம் பார்த்தது; முதல் முறையாக என் குடும்பத் சூழலில் ‘ஒப்பாரி’ என்ற நுண்ணிய பூர்வ கலையை நான் எதிர்கொண்ட என் இளம்பிராயத்து நினைவுகளை மீட்டு எடுத்தது!

மீண்டு வந்த பூர்வ கதைகள்

எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது மல்லிகா பெரியம்மா தவறிவிட்டார். அப்போது மனமொடிந்த எங்கள் தாயுடைய இழப்பின் வீரியத்தை, வேகத்தை பார்த்து பயந்து ஒடுங்கி நின்றோம் நானும் என் சகோதரியும். அந்த உணர்வு மாறாமல் பெரியம்மாவின் இறுதிச் சடங்கிற்கு எங்களை அழைத்துச் சென்றார் அம்மா. அதற்கு முன் நாங்கள் கண்டிராத உறவுகள் புடை சூழ இருந்த அந்த இடத்தில் தான், பெங்களூரு நகரத்தில் எங்களுக்கு அவ்வளவு உறவினர்கள் உள்ளார்கள் என்பதே தெரிய வந்தது!

அப்போது, அங்குள்ள பெண்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு வீரியத்துடன் மல்லிகா பெரியம்மா வாழ்ந்த வாழ்க்கையை பற்றி, அவரைப் பற்றி, பாடத் தொடங்கினர். பாட்டி, அம்மா, அத்தை. தூரத்து உறவுமுறைப் பெண்கள் என அனைவரும் ஒரு துக்கம் தோய்ந்த தொனியில், ஒரே கதியில் பாடத் துவங்கினர். நான் அதுவரை கேட்டிராத, கண்டிராத புது அனுபவம், அது.

அந்த வயதில், சூழலில், என்னால் அதனுடன் பொருந்திப் போக முடியவில்லை – அப்பா கேட்ட டி.எம்.சௌந்தரராஜன் பாடல்கள், எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்கள், அம்மா மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த ‘மாங்குயிலே பூங்குயிலே’ ஆகியவற்றை தாண்டி, அந்த இறுதிச் சடங்கில் ஒலித்த அந்தப் பாடலுடன் என்னால் பொருந்திப் போக முடியவில்லை.

அவர்கள் பாடிய அந்த ஒப்பாரிப் பாடலில் பெரிதாக எனக்கு ஒன்றும் புரியவில்லை, என் நினைவில் பதிந்த இந்த ஒரு வரியைத் தவிர: ‘எங்க மவராசி…எங்களை விட்டுட்டு போயிட்டியே…எங்க வீட்டு ராசாத்தி, எங்களை விட்டுட்டு போயிட்டியே…!’

அந்த ஒப்பாரி நினைவை மீட்டுள்ளது, இந்த ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல். ஒருவேளை, அப்பா எங்களுடன் இப்போது இருந்திருந்தால், இதையும் அவரோடு சேர்ந்து கேட்டிருப்போம். ஒருவேளை நான் கேட்கும் முன்பே கூட, அப்பாவின் பாடல்கள் ‘பிளே லிஸ்ட்’ இல் இந்த பாடல் இணைந்து இருந்திருக்கவும் கூடும்!

மீண்டும் மீண்டும் ‘என்ஜாய் எஞ்சாமி’ யை கேட்டு நினைவு வெள்ளத்தில் மூழ்கினேன்!

‘தெருக்குரல்’ அறிவு அவர்களின்,
‘நான் அஞ்சு மரம் வளர்த்தேன்…அழகான தோட்டம் வச்சேன்…தோட்டம் செழித்தாலும், என் தொண்டை நனையலையே…’
என்ற வரிகள், நான் இது வரை கேட்ட அத்தனை ஒப்பாரிகளின் நாடியையும் ஒன்றாய் சுருட்டி இழுத்தது!

எங்கள் வீட்டுப் பெண்களுக்கு வார்த்தைகளை வளையப் பின்னி தாள லயம், பொருள் நயம் சேர, நின்ற நிலையில், அந்த இடத்தில் உடனுக்குடன் ஒப்பாரியாய் பாடும் வல்லமை நிரம்ப இருந்தது! அவர்கள் பாடிய பாடல்களின் வரிகள் அனைத்தும், அந்த ஒப்பாரியின் நாயகனின் அல்லது நாயகியின் உழைப்பையும், கண்ணியத்துடன் வாழ அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களையும் கண்முன் நிறுத்துவதாக இருந்தன. அவை அவர்களது அடையாளத்தை, தனித்துவத்தை கொண்டாடித் திமிர்ந்தன.

‘எஞ்சாமி’ பாடலின் தாள கதி மூளைக்குள் தெறிக்க, இந்தப் பாடல் வெளியீட்டின் போது அறிவு கூறிய வார்த்தைகள் மேலிட்டு வருகின்றன:
“ஒப்பாரி, நம்முடைய கலை வடிவம். ராப், ஹிப்-ஹாப் ஆகியவற்றின் இந்திய இசை வடிவம் தான் ஒப்பாரி. கதைகளை சொல்லும் இசை வடிவமே ‘ராப்’ (rap) என்றானால், இந்த உலகின் தலை சிறந்த ‘ராப்’ கலைஞர் என்னுடைய பாட்டி தான்.”

அந்த நொடியில் தான் என் மனதில் ஒரு உணர்வு உதித்தது: அறிவு அவர்களுடைய பாட்டி வள்ளியம்மாள், பெங்களூருவில் வாழும் தலித் பெண்ணாகிய என்னுடைய பாட்டி பாஞ்சாலையை எந்த அளவுக்கு நினைவுபடுத்துகிறார் என்று அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது!

பாஞ்சாலை பாட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் என்கிற கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட எங்கள் பாஞ்சாலை பாட்டி, ஊரில் பண்ணைகளில் கூலியாக பணிபுரிந்தவர்; பன்றி வளர்ப்பு, மற்றும் இதர கடின உழைப்பு சார்ந்த தொழில்களை செய்து வந்தவர். அவரது பதினாறு வயதில், திருமணமான கையோடு பெங்களூருவிற்கு குடிபெயர்ந்தவர். ஊர் புதிது தான் என்றாலும், பெங்களூரு சேரிகளில் தனது புதிய வாழ்க்கையை துவங்கிய பாட்டி, வந்த இடத்தில் ஒரு சிறிய உணவகத்தை தொடங்கி இங்கேயும் குடும்பத்திற்காக உளமார உழைக்கத் துவங்கினார்.

பாட்டி இப்போது எங்களோடு இல்லை. மண்ணை விட்டு பிரிந்தாலும், அவர் தான் எங்கள் வீட்டின் ஆணிவேர்; கிளையோடி பரவிக் கிடக்கும் எங்கள் குடும்பத்தை தாங்கிய வேர்.

ஏழாம் வகுப்பு வரை பெங்களூருவில் தமிழ்வழிக் கல்வி பயின்ற அப்பாவும் இள வயதிலே உழைக்கத் தொடங்கியவர். வெவ்வேறு வேலைகளை செய்தவர், தனது 24 வயது தொடங்கி ஆட்டோ ஓட்டுனர் ஆக பணிபுரியத் துவங்கினார். இப்படியாக பெங்களூருவிலேயே நாங்கள் இருந்தாலும் எங்கள் பூர்வீகம் பற்றிய கதைகளின் வழியாக எங்கள் பாட்டி எங்களுடைய வேர்களை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.

என்னுடைய வேர்களை நினைவுகூர்கிறேன்

திருவண்ணாமலை மாவட்டம், அறம்பரப்பட்டிலிருந்து பெங்களூருவிற்கு குடிபெயர்ந்து இந்த பெருநகரத்தில் எங்கள் வாசத்திற்கு வித்திட்டவர், எங்களுடைய முப்பாட்டனார், சாமிநாதன் தாத்தா. தனது ஊரில் இருந்து பெங்களூரு வரை அவ்வளவு தூரமும் நடந்தே வந்தார், பல வாரப் பயணமாக, ஒரு புதிய வாழ்வைத் தேடி.

அப்போது பெங்களூரு நகரத்தின் ஒரு சிலப் பகுதிகள் மட்டுமே விளிம்புநிலை மக்களுக்கு என்று வகுக்கப் பட்டிருந்தது. அதில் பெங்களூரு சந்தைக்கு மிக ருகில் இருந்த ஜே.சி.ரோடு பகுதியில் உள்ள ஒரு பகுதியை தேர்வு செய்து வாழலானார், கொள்ளுத் தாத்தா. சந்தைக்கு இருந்ததால் வேலை வாய்ப்பு குறைவின்றி அமைந்தது. ஒரு கட்டத்தில், என்னுடைய பாட்டனார் சுப்ரமணி அவர்களும் அங்கேயே ஒரு மளிகைக் கடையை நடத்தி வரலானார்.

நான் பிறந்த பின்னரே அப்பாவின் முடிவின் பெயரில் நாங்கள் ஜே.சி.ரோடு பகுதியில் இருந்து நகரத்தின் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தோம்.
தங்கள் உழைப்பை, உதிரத்தை செலுத்தி பெருநகரங்களின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக எந்த விளிம்புநிலை மக்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்கு அதே பெருநகரங்களும், சாதி விழிப்புணர்வு குன்றிய சமுதாயமும் அளிக்கும் மறு உபகாரமும், சுட்டிக் காட்டும் இடமும் இன்னும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. வேர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் இன்னும் அடியிலேயே தான் கிடக்கிறார்கள்.

அப்பாவுடைய குடும்ப வேர்களை ஓரளவு அறிந்து கொண்ட எனக்கு, அம்மாவின் குடும்பத்தை பற்றியும் கடந்த சில வருடங்களாக தெரிய வந்தது. பெங்களுருவில் உள்ள என்னுடைய தாய் வழி உறவினர்களுடனான உரையாடல்களை துவங்கினேன்.

அம்மாவின் வீட்டார் நகரச் சந்தையில் பழவிற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள். ஐந்தாம் வகுப்பு வரை படித்த அம்மா , அதற்கு மேல் அவருடைய தாய், என்னுடைய பாப்பம்மா பாட்டிக்கு உதவியாக இருந்து வந்தார். அதன் பின்னர், அம்மா, ஆடை உற்பத்தித் (கார்மெண்ட்) தொழிற்சாலை, வீட்டு பராமரிப்பு ஊழியம், சிறுதொழில் என்று பல ஆண்டுகள் உழைத்து வந்துள்ளார்.

இன்று என்னுடைய வளர்ச்சிக்கு வித்து, என்னுடைய முன்னோர்களான தாயாதிகளும் தந்தைவழி வீட்டாரும் உடலை உருக்கி அயராமல் உழைத்த உழைப்பு தான். அந்த விதைகள் இன்று மண்ணுக்கு திரும்பி, எங்கள் அடையாளங்கள் கிளையோடி வேரோடி பரவ அடித்தளமிட்டுள்ளன.

புலங்கள் வேறாக இருந்தாலும் உணர்வு ஒன்று தான்

கதைகளை சொல்லும் பாடல்கள், அற்புதமானவை. ஒப்பாரி என்ற கலை, இதனாலேயே கதைகளின் மூலமாக, நம்முடைய வேர்களை அறியும் மூலமாக விளங்குகிறது. ‘தெருக்குரல்’ அறிவு அவர்களுடைய பாட்டியின் கதை, எனக்கு என்னுடைய பாட்டியை நினைவூட்டுகிறது.

எங்களுடைய பூர்விகம், புலங்கள் வேறாக இருக்கலாம்; ஆனால் எங்கள் பூர்வகுடிகளின் கதைகள், வேர்களைக் கொண்டாடும் எங்கள் உணர்வுகள், அடையாளங்கள், ஒதுக்கப் பட்ட எங்களுடைய கதைகள், வரலாறுகளின் மீதான எங்கள் உரிமை, மீட்டெடுக்கும் ஆர்வம், ஆகிய கூறுகள் எங்களை ஒன்றிணைக்கின்றன.

“நம்மளின் வேரு, உழைப்பின் வேருகள்” (நமது வேர், உழைப்பின் வேர்கள்) என்று மொழிகிறார் அறிவு. இனவேர்களை பறைசாற்றும் இழைகளால் உயிரோட்டத்துடன் துடிக்கிறது ‘எஞ்சாமி’ பாடல். இதனால் தான் ‘எஞ்சாமி’ நெஞ்சுக்கு நெருக்கமாய் உணரவைக்கிறது.

சமீபத்தில் இந்தப் பாடலை நான் என் வகுப்பில், என் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டினேன். நாங்கள் கதைகளை, வேர்களை பற்றிய உரையாடல்களை பற்றி வகுப்பில் கலந்துரையாடினோம். என்னுடைய மாணவர்கள் இந்தப் பாடலை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. என்றாலும் அப்பாவுடனும் பாஞ்சாலை பாடியுடனும் இதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமும் என்னுள் எட்டிப்பார்க்கிறது.

கடைசியாக நான் கேட்ட ஒப்பாரி, என்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கு வேளையில் தான். அப்பாவின் தங்கைகளான முருவம்மாளும் கொங்கனாத்தாளும் அப்பாவை ‘எஞ்சாமி எஞ்சாமி’ என்று கொண்டாடிப் பாடிக் கொண்டிருந்தனர். இன்னும் நிறைய எஞ்சாமிகள் என் வாழ்வில், வேர்களில் ஒன்றிப்போயிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இன்னொரு பயணத்திற்கான வித்து இது!

‘தெருக்குரல்’அறிவு அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்!

About the Author

Vijayashanthi Murthy

Assistant Professor at St. Joseph's College, Bengaluru. Former Assistant Professor at Jain University, Bengaluru. Former Faculty at Baduku Community College, Bengaluru read more...

1 Posts | 1,738 Views
All Categories