கோவிட் தடுப்பூசி குறித்த சில முக்கிய கேள்விகளுக்கு விடை அளிக்கிறார், Dr. கீதா ஹெக்டே

பலர் மனதில் எழுந்துள்ள கோவிட் தடுப்பூசி திட்டம் குறித்த சில முக்கியமான கேள்விகளுக்கு பதில்கள் அளித்துள்ளார், Dr. கீதா ஹெக்டே.

கோவிட் தடுப்பூசி திட்டம் குறித்து உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். அவற்றுள் சில முக்கியமான கேள்விகளுக்கு பதில்கள் அளித்துள்ளார், Dr. கீதா ஹெக்டே.

Original in Hindiமொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

1995 ஆம் ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்து வாய்வழியாக செலுத்தப்பட்ட நிகழ்வை ஒட்டி, மார்ச் 16, தேசிய தடுப்பூசி தினமாக (நேஷனல் வாக்சினேஷன் டே) ஆக வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரம், இந்தியாவில் ஜனவரி 16, 2021 ஆம் நாள் முதல் தொடங்கியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதுவரை, இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவை ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’வின் தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘பாரத் பயோடெக்’ இன் ‘கோவாக்சின்’ ஆகும்.

முதற்கட்டமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற முதல்நிலை சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து துப்புரவாளர்கள், வார்டு சிறுவர்கள் போன்ற துணை ஊழியர்களுக்கும், பின்னர் காவல்துறையினர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டன.

தற்சமயம், இரண்டாம் கட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், ‘கோமார்பிடிட்டி’ என்று சொல்லப் படும் குறிப்பிட்ட உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக கண்டறியப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோவிட் தடுப்பூசி குறித்த சில ஐயங்கள் இருக்கவே செய்கின்றனவா?

இதற்கிடையில், பலருக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் மற்றும் ஐயம் அதிகளவில் உள்ளதாக தெரிகிறது. பலருக்கு இதன் பக்கவிளைவுகள் குறித்த அச்சமும், தங்கள் குடும்பத்தில் உள்ள வயதான மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு இந்த தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்படுமோ என்ற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன.

சமூக ஊடங்களிலும், எது நிஜம், எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு ஏதேதோ செய்திகள் உலவுகின்றன.

இவற்றால், ‘இந்த தடுப்பூசி பாதுகாப்பானதா?
இதை போட்டுக்கொள்வதால் கொரோனா தொற்றில் இருந்து நம்மால் நிஜமாகவே தப்பமுடியுமா?
இதன் பக்கவிளைவுகள் என்ன?
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு பிறகு, 28 நாட்கள் கழித்து இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளும் வரை அலுவலகத்தில் இருந்து விடுப்பு பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்குமா?’ என பல கேள்விகள் எழுந்துள்ளன.

இவற்றுள், ‘கோவிஷீல்ட், கோவாக்ஸின் இரண்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன? ‘ என்ற கேள்வி பிரதானமாக கேட்கப்பட்டு வருகிறது.

இது போன்ற கேள்விகளுள் முக்கியமான சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், மும்பை KEM மருத்துவமனையைச் சேர்ந்த Dr. கீதா ஹெக்டே.

டாக்டர் வழங்கிய பதில்கள்:

கோவாக்ஸின், கோவிஷீல்ட் -இவை இரண்டிற்கும் மத்தியில் என்ன வித்தியாசம்?

கோவாக்ஸின், பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (ICMR) இணைந்து தயாரித்த கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஆகும். நம் நாட்டில் தயாரான இந்த ‘சுதேசி’ தடுப்பூசி, கொரோனா தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும் ‘பிறபொருளெதிரி’ (எ) ஆன்டிபாடி (antibodies) பொருட்களை நம் உடலில் தோற்றுவிக்கும் தன்மை உடையது.

கோவிஷீல்ட் தடுப்பூசி, ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் ஆஸ்ட்ராசெனெகா இணைந்து உருவாக்கிய மருந்தின் இந்திய வடிவமாகும். ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம் இதை ‘Kovishield’ என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி சாதாரண சளியை தோற்றுவிக்கும் ‘அடினோவைரஸ்’ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசிகளுமே சம ஆற்றல் உடையவை தாம். மேலும், இவை இரண்டில் எதை போட்டுக் கொண்டாலும், முதலாம் டோஸ், இரண்டாம் டோஸ் என்று இரு வேறு டோஸ்களாக போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு டோஸ்களுக்கும் இடையில் 28 நாள் கால இடைவெளி இருப்பது அவசியம் ஆகும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய மூத்த குடிமக்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு என்ன? 89 மற்றும் 90 வயதுடைய எனது வயதான பெற்றோர்களுக்கு தடுப்பூசி போடப்படுமா?

ஆம், நிச்சயம் அவர்களுக்கு தடுப்பூசி போடலாம், ஆனால் அதற்காக சில விதிகளை பின்பற்ற வேண்டும். தற்சமயம் இரண்டு பிரிவுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரப்படுகிறது –

முதல் பிரிவு – 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்;
இரண்டாவது பிரிவு – ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட, அல்லது சில உடல்நலக் குறைபாடுகள் இருப்பதாக கண்டறியப்பட்ட 46 முதல் 59 வயது வரையிலானவர்கள்.

ஆனால் இதற்காக, அவர்கள் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் கண்டிப்பாக ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, அல்லது இவை இரண்டிற்கு சமமான, இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்ட புகைப்பட அடையாள அட்டையுடன் தடுப்பூசி மையத்திற்கு வர வேண்டும். நீங்கள் 46 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, உங்களுக்கு இணை நோய் எனப்படும் கோ-மார்பிடிட்டி (co-morbidity) அல்லது வேறேதேனும் தீவிரமான நோய் இருக்குமானால், நீங்கள் ஒரு மருத்துவ சான்றிதழையும் பெற்று வருவது அவசியம் ஆகும்.

‘ஐ.டி.பி’, அதாவது, ‘இடியோபாதிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புரா’ (idiopathic Thrombocytopenic Purpura) நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாமா?

ஆம், அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன், அவரது நோய் மற்றும் உட்கொள்ளும் மருந்துகள் பற்றிய சரியான தகவல்களை தடுப்பூசி செலுத்தும் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம் ஆகும்.

இந்த தடுப்பூசி இதய நோயாளிகளுக்கு (heart/cardiac patients) பாதுகாப்பானதா?

ஆம், இது அவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது, ஆனால் அவர்கள் 46 முதல் 59 வயதிற்குள் இருப்பவரெனில் இருந்தால், முதலில் தடுப்பூசி செலுத்தும் மருத்துவரிடம் இணை நோயுற்றதற்கான ‘கோ-மார்பிடிட்டி’ சான்றிதழைக் காட்ட வேண்டும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (kidney transplant) செய்து கொண்ட நோயாளிகளுக்கும் இந்த தடுப்பூசி போடப்படுமா?

ஆமாம், அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் – ஆனால் டாக்டர் அவர்களுக்கு அளித்த மருத்துவச் சான்றிதழை அவர்களுடன் எடுத்துச் செல்வது அவசியம் ஆகும்.

நீரிழிவு நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளக் கூடாதா?

அப்படி இல்லை. மாறாக, மேற்கூறிய உடல்நலக் குறைவுகள் மற்றும் நோய்கள் உடையவர் 46 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், மிக அவசியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

குறைவான பிளேட்லெட் (platelet) எண்ணிக்கை உள்ளவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போடலாமா?

இல்லை. பிளேட்லெட்டுகள் பொதுவாக இருக்கும் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளவர்களுக்கு, இந்த தடுப்பூசியை போட முடியாது; அவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அவர்களது பிளேட்லெட் எண்ணிக்கை உயர்ந்து பொதுவாக இருக்கும் எண்ணிக்கையை அடையும் போது, ​​அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தை பெற்றுக் கொள்ளப் போகும், அல்லது ‘குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ என்ற எண்ணமுடைய தம்பதிகள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாமா?

இப்படிப்பட்ட தம்பதியரில் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் ஆண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த பெண் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் கர்ப்பம் தரிக்கும் எண்ணமுடையவராக இருந்தாலோ, அந்த பெண் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளக்கூடாது.

தற்சமயம் கர்ப்பமுறுவதை பற்றி யோசிக்கவில்லை என்றாலோ, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கலாம் என்ற எண்ணமுடையவராக இருந்தாலோ, பெண் கண்டிப்பாக தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கியதாகத் தெரிகிறது; இந்த தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

தற்போதைய சூழ்நிலையில் இந்த தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த நோயிலிருந்து பாதுகாக்க நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி பலப்படுத்தும்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தடுப்பூசி நோய்த்தொற்றில் இருந்து முழுவதுமாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவரை தடுக்காது, ஆனால் இது கொரோனாவால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளில் இருந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டவரை பாதுகாக்கும்.

தடுப்பூசி போட்ட பிறகும், கோவிட்-19 தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிகளையும் நாம் பின்பற்ற வேண்டும் – அதாவது முகமூடி அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் , கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் தளர்வின்றி பின்பற்ற வேண்டும்.

இவ்வளவு குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை தானா?

ஆம், இவை முற்றிலும் பாதுகாப்பானது. தடுப்பூசி மிகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டது என்பது உண்மைதான், ஆனால் அதன் பின்னால் நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு உள்ளது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்த பின்னரே, அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உரிய ஒழுங்குமுறை அமைப்புகளால் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த அமைப்புகள் ஒப்புதல் அளித்த பின்னரே இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ஏதாவது பக்க விளைவுகள் உண்டா?

தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்குப் பிறகு கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. ஆனால், பொதுவாக எந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டாலும் வருவது போலவே இந்த தடுப்பூசியும் லேசான காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். இப்படி நேர்ந்தால் பயப்படாமல், தென்படும் அறிகுறிக்கான சிம்ப்டோமாட்டிக் (symptomatic) சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் தவிர்த்து வேறு ஏதேனும் தீவிர பிரச்சினை அல்லது கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டாலோ, அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டதால் ஏற்பட்ட அறிகுறியின் தீவிரம் குறையவில்லை என்றாலோ, நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அல்லது உங்கள் மருத்துவரிடம் செல்வது மிகவும் அவசியம். அத்துடன் தடுப்பூசி வழங்குநரை உடனடியாகத் தொடர்புகொண்டு இது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

தடுப்பூசிக்கு எத்தனை நாட்களுக்குப் பிறகு ‘ஆன்டிபாடி’கள் (antibodies) உருவாகும்?

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டதில் இருந்து 14 நாட்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகள் குறிப்பிட்ட அளவில் உருவாகும்.

இப்போது இந்தியாவில் பயன்பாட்டில் இரண்டு தடுப்பூசிகள் உள்ளன; இதனால் எந்த தடுப்பூசியை நாம் பெற விரும்புகிறோமோ அதையே நாம் போட்டுக் கொள்ளும் வசதி உள்ளதா?
முதல் டோஸ் ஒரு தடுப்பூசி பின்னர் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளும் போது வேறு ‘பிராண்ட்’ தடுப்பூசி என்று மாற்றிக் கொள்ள முடியுமா?

இல்லை, தற்சமயம் இந்தியாவில் இந்த வசதி இல்லை. நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவுசெய்து, குறிப்பிட்ட மையத்திற்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ள செல்லும்போது, ​​அந்த மையத்தில் எந்த தடுப்பூசி உள்ளதோ, அதையே நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும்.

இரண்டு டோஸ்களுக்கும் ஒரே பிராண்டின் தடுப்பூசியை தான் நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுமா?

இல்லை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நோயிலிருந்து குணமடைந்த பின்னரே இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளமுடியும்.

பதிவு செய்து கொள்ளாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள முடியுமா?

இல்லை, தடுப்பூசிக்கான பதிவு கட்டாயமாகும். பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசியை அவர்கள் போட்டுக்கொள்ளும் தேதி மற்றும் நேரம் தெரிவிக்கப்படும்.
இருப்பினும், இப்போது பல மையங்கள் ‘வாக்-இன்’ பதிவு, அதாவது, மையத்திற்கு நேரில் சென்று அப்போதே பதிவு செய்து கொள்ளும் வசதியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன.

என்னுடைய தடுப்பூசி டோஸ் முழுமை அடைந்ததா (இரண்டு டோஸ்களும் போடப்பட்டு) என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது?

நீங்கள் பதிவு செய்யும்போது பகிர்ந்து கொள்ளும் உங்கள் செல்பேசி எண்ணுக்கு, உங்கள் கோவிட் தடுப்பூசியின் முழு அட்டவணையும் முடிந்த பிறகு, அதைஉங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி எஸ்எம்எஸ் மூலமாக உங்களுக்கு கிடைக்கும். பதிவு செய்யப்பட்ட எண்ணில் QR அடிப்படையிலான சான்றிதழையும் நீங்கள் பெறுவீர்கள்.

மேற்கொண்டு உங்களுக்கு தேவைப்படும்,கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான சில பொதுவான கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். (https://www.mygov.in/hi/covid-19)

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான வேறு ஏதேனும் குறிப்பிட்ட கேள்விகள் இருந்தால், குறிப்பாக உங்கள் உடல்நிலை குறித்த தகவல் தேவைப்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

பொறுப்பு துறப்பு: மேற்கண்ட தகவல்கள் ஒரு மருத்துவருடனான உரையாடலின் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. இந்த ஆலோசனையைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுவது அவசியம் என்று தெரிவித்து கொள்கிறோம் .

விமென்ஸ் வெப் தளத்தில் உங்களுக்கு பயனுள்ள ஆரோக்கியம் குறித்த தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்க்க முயன்று வருகிறோம். ஆனால் இந்த பதிவுகளில் வரும் தகவல்கள், குறிப்புகள் சரியா என்று உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது அவசியம் ஆகும் என்று தெரிவித்து கொள்கிறோம்.

பட ஆதாரம்: பிபிசி இந்தி

About the Author

1 Posts | 1,987 Views
All Categories