சாவித்ரிபாய் ஃபுலே: நவீன இந்தியாவின் பெண் கல்விக்கு வித்திட்டவர்

நவீன இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்ரிபாய் ஃபுலே அவர்களின் 190வது பிறந்த நாள், கடந்த ஜனவரி 3, 2021 அன்று கொண்டாடப் பட்டது.

நவீன இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்ரிபாய் ஃபுலே அவர்களின் 190வது பிறந்த நாள், கடந்த ஜனவரி 3, 2021 அன்று கொண்டாடப் பட்டது.

இந்திய பெண்களின் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான களத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சாவித்ரிபாய்.

Original in English | மொழி பெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

செல்லுங்கள், கல்வி பெறுங்கள்…” என்பதே பெண்கள் மற்றும் தலித், பகுஜன் மற்றும் ஆதிவாசி இன மக்களுக்கான சாவித்ரிபாய் ஃபுலேவின் தாரக மந்திரமாக இருந்தது. ஆணாதிக்க, சாதீய சமூக கட்டமைப்பின் பாரபட்சமான நடைமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையாக கல்வியைத் தேடி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நம்பினார் சாவித்ரிபாய்.

சாவித்ரிபாய் ஃபுலே, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நைகான் கிராமத்தில் 1831ஆம் ஆண்டு ஜனவரி 03 அன்று பிறந்தார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக அங்கீகரிக்கப்படுபவர் இவரே.

பெண்கள் மற்றும் தலித் மக்களுக்கான கல்வி

பெண்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் என்பதே இல்லாமல் போயிருந்த காலகட்டத்தில், சமூக சீர்திருத்தவாதியான தன் கணவர் திரு. ஜோதிராவ் ஃபுலேவுடன் இணைந்து பெண்கள் மேம்பாடு மற்றும் அதிகாரம் பெறுதல் குறித்து முனைப்புடன் உழைத்தவர் ​​சாவித்ரிபாய்.

சாதீயக் கட்டமைப்பில் பின்தங்கிய சமூகமாகக் கருதப்பட்ட மாலி சமூகத்தில் பிறந்த சாவித்ரிபாய், ஒன்பது வயதில் ஜோதிபாவை மணந்தபோது கல்வியறிவற்றவராக இருந்தார்.

அதிர்ஷ்டவசமாக, சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற கல்வியின் ஆற்றலை தீவிரமாக நம்பிய ஜோதிபா, அதன்படி, தனது குடும்ப வழக்கத்தை உடைத்து, தன் மனைவிக்கு படிக்கவும் எழுதவும் கற்பித்து, பெண் கல்விப் புரட்சியை தந்து வீட்டிலேயே தொடங்கி வைத்தார்.

தன் மனைவி தனக்கான மதிய உணவை வயலுக்கு கொண்டு வரும் வேளைகளில் அவளுக்கு படிக்கக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார் ஜோதிபா. பின்னர் ஒரு கட்டத்தில், சாவித்ரிபாயை புனேவில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். இந்தப் பயிற்சிக்குப் பின் புனேவின் மகர்வாடா பகுதியில் சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினார், சாவித்ரிபாய்.

இந்த சமயத்தில் தான் ஜோதிபாவின் வழிகாட்டியும் சமூக ஆர்வலருமான சகுணாபாய் அவர்களின் அறிமுகமும் ஆதரவும் சாவித்ரிபாய்க்கு கிடைத்தது.

ஒரு கட்டத்தில், ஜோதிபா – சாவித்ரிபாய் தம்பதியினர் சகுணாபாயுடன் இணைந்து, ‘பிடே வாடா’வில் தங்கள் சொந்த பள்ளியைத் தொடங்கினர். இந்திய பெண்களுக்காக இந்தியர்களால் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் பெண் பள்ளி இதுவே.

ஒன்பது சிறுமிகளின் சேர்க்கையுடன் தொடங்கிய இந்தப் பள்ளி படிப்படியாக 25 சிறுமிகளுக்கு நிலைக்கு முன்னேறியது. பின்னர், புனேவில் மேலும் 3 பள்ளிகள் திறக்கப்பட்டு, மொத்தம் 150 மாணவர்கள் சேர்ந்து படிக்கத் தொடங்கினர்.

கற்றல் கற்பித்தல் முறைகளில் புதுமை

ஜோதிபா-சாவித்ரிபாய் தம்பதியினர் பாடத்திட்டத்திலும் கற்பித்தல் முறைகளிலும் தனிக் கவனம் செலுத்தி கற்றல் கற்பித்தல் முறைகளில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினர்.

பள்ளிகளில் சேர மாணவர்களை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகையை அறிமுகப்படுத்திய இவர்கள், அத்துடன் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோருக்கு உணர்த்துவதற்காக பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களையும் ஏற்பாடு செய்தார்கள். இவர்களது பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த முயற்சிகளின் விளைவாக, புனேவில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ந்து கற்ற சிறுவர்களை விடவும் ஜோதிபா-சாவித்ரிபாய் அவர்களின் பள்ளிகளில் சேர்ந்து கற்ற சிறுமிகளின் எண்ணிக்கை அதிகமாகியது.

‘உயர் சாதி’ இந்துக்களால் குறிவைப்பு

நல்லமுறையில் எல்லாம் போய்க் கொண்டிருந்தது. ஆயினும், சாதீய ரீதியாக ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று கருதப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிச் சேர்க்கை மற்றும் கற்றலை சில மரபுவழி உயர் சாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் விளைவாக இந்த பள்ளிகளை மூட அவர்கள் பெரிதும் முயன்றனர்.

முதலில், அவர்கள் சாவித்ரிபாய் பற்றிய பல வதந்திகளை பரப்பினர்: சாவித்ரிபாயின் பள்ளிப்படிப்பின் காரணமாக அவரது கணவர் முன்கூட்டியே இறந்துவிடுவார் என்றும், அவரது உணவு அவர் உண்ணும்போது புழுக்களாக மாறுகிறது என்றும், படித்த பெண்கள் முன்பின் தெரியாத ஆண்களுக்கு கடிதங்களை எழுதத் தொடங்குவதாகவும் கூறி வந்தனர்.

இந்த கட்டுக்கதைகள் சாவித்ரிபாயை தளரச் செய்யாததை பார்த்தவர்கள், அடுத்து, ​​சாவித்ரிபாய் பள்ளிக்குச் செல்லும் வழியில் அவர் மீது மாட்டு சாணம், முட்டை, தக்காளி மற்றும் கற்கள் போன்றவற்றை எறிந்து அவரைத் தாக்கத் தொடங்கினர். இதைக் கண்ட ஜோதிபா, சாவித்ரிபாயிடம் எப்போதும் தனது பையில் ஒரு கூடுதல் புடவையை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார் – பள்ளிக்கு சென்றதும் மாற்றுடை அணிந்து கற்பிக்கும்படி கூறினார்.

படிப்படியாக, இந்த அவமதிப்புகளுக்கு பதிலளிக்க தைரியம் பெற்ற சாவித்ரிபாய், “உங்கள் முயற்சிகள் எனது பணியைத் தொடர என்னைத் தூண்டுகின்றன. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று அவர்களிடம் கூறி தன் பணியினை தொடர்ந்து சிறப்புற செய்து வந்தார். ஒரு கட்டத்தில் பிரச்சனை செய்த ஒருவரை சாவித்ரிபாய் பளீரென்று அறைந்து விட, ஒரு வழியாக இந்த உபத்திரவம் முடிவுக்கு வந்தது. சாவித்ரிபாயின் துணிச்சல் புனே முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனாலும், சில பழமைவாதிகள் இந்த தம்பதியை தடுக்க மற்றொரு வழியைக் கண்டுபிடித்தனர். ஜோதிபாவின் தந்தையிடம் ஜோதிபா-சாவித்ரிபாய் தம்பதியினரை வீட்டை விட்டு வெளியேற்றும்படி அவர்கள் அழுத்தம் கொடுத்தனர். புனித கிரந்தங்களில் எழுதப்பட்டுள்ளபடி, பெண்களுக்கும் ‘பிற்படுத்தப்பட்ட சாதியினரின்’ குழந்தைகளுக்கும் கல்வி கற்பிப்பது பெரும் ‘பாவம்’ என்று அவர்கள் கூறினர்.

பாத்திமா பேகம் ஷேக்

தங்களது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இந்த தம்பதியருக்கு அவர்களது நண்பரான உஸ்மான் ஷேக் அவர்கள் தனது வீட்டில் தங்க இடமளித்தார். உஸ்மான் ஷேக் அவர்களது சகோதரி பாத்திமா பேகம் ஷேக் ஏற்கனவே கல்வியறிவு பெற்றிந்தவராக இருந்தார். தனது சகோதரரால் ஊக்குவிக்கப்பட்ட பாத்திமா, சாவித்ரிபாயுடன் சேர்ந்து மற்றொரு ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் இணைந்து கற்கத் துவங்கினார். இதன் மூலம் இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் ஆசிரியரானார், பாத்திமா. தங்களது இந்த பயிற்சிக்குப் பிறகு, சாவித்ரிபாய் மற்றும் பாத்திமா இருவரும் இணைந்து உஸ்மான் ஷேக்கின் இல்லத்திலேயே ஒரு பள்ளியைத் தொடங்கி வைத்தனர்.

தங்கள் பள்ளியில் தொடர்ந்த மேம்பட்ட சேர்க்கையால் ஊக்கமடைந்த இவர்கள் 1848 முதல் 1852 வரை மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 18 பள்ளிகளைத் திறந்து வைத்தனர். இந்த சாதனையை அறிந்து அதன் அருமையை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம் கல்வித்துறையில் அவர்கள் செய்த பங்களிப்புக்காக இவர்களை கௌரவித்து, சாவித்ரிபாயை ‘சிறந்த ஆசிரியர்’ என்று அங்கீகரித்து பாராட்டியது. பின்னாட்களில் பாத்திமா-சாவித்ரிபாய் இணைந்து தொழிலாள வர்க்க சமூகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு இரவு பள்ளியை தொடங்கி வைத்தனர். இத்துடன், மகாராஷ்டிரா முழுவதும் ஏழை மாணவர்களுக்காக 52 இலவச விடுதிகளை அமைத்து அவர்கள் படிப்பதற்கு உதவினர்.

‘சத்ய ஷோதக் சமாஜ்’ மற்றும் பிற பணிகள்

கல்வி சார்ந்த முன்னெடுப்புகளைத் தவிர, ஜோதிபா-சாவித்ரிபாய் தம்பதியினர் பல சமூக சேவை நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சமூகத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்தும் சீரிய குறிக்கோளுடன் செப்டம்பர் 24, 1873 அன்று, சாதி, மதம், வர்க்க பேதங்களை பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவான ‘சத்ய ஷோதக் சமாஜ்’ அமைப்பினை நிறுவி வைத்தனர். இந்த அமைப்பின் நீட்சியாக ‘சத்ய ஷோதக’ திருமணங்களையும் இவர்கள் தொடங்கி வைத்தனர். இதன்படி இம்முறையில் திருமணமான தம்பதியினர், கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், விதவை மறு திருமணமும் இந்த அமைப்பினால் ஊக்குவிக்கப்பட்டது. மேலும் , பூசாரிகள் இன்றி நிறைவேறிய எளிய திருமணங்களும், வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு திட்டங்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இத்துடன் பொது குடிநீர் வசதி இல்லாத தீண்டத்தகாதவர்களுக்காக அவர்கள் தங்கள் முற்றத்தில் ஒரு கிணறு தோண்டி வைத்தனர்.

முழுமையாக பெண்ணியத்தை உணர்ந்த பெண்ணியவாதியாகிய சாவித்ரிபாய், குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை மற்றும் ‘சதி’ முறைக்கு எதிராக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘மஹி ளா சேவா மண்டலி’யையும் அமைத்து வைத்தார். அவரது காலங்களில், விதவைகள் பெரும்பாலும் பாலியல்ரீதியாக சீண்டப்பட்டு வந்தனர். அதிலும் கர்ப்பிணியான விதவைகள் இன்னும் அதிகமான உடல்ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் அவமானங்களுக்கு ஆளாக்க பட்டனர். இந்த அவலத்தை தீர்க்க, ஜோதிபா-சாவித்ரிபாய் தம்பதியினர் கர்ப்பிணியாக இருந்த விதவைகள் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக குழந்தை பராமரிப்பு மையமான ‘பால்ஹத்யா பிரதிபண்டக் க்ருஹா’ என்ற அமைப்பினை தொடங்கி வைத்தனர்.

இதன் நீட்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களால் பிறக்கும் குழந்தைகளை தத்தெடுப்பதையும் சாவித்ரிபாய் ஊக்குவித்தார். மேலும், விதவைகள் மற்றும் அனாதைகளுக்காக ஒரு ஆசிரமத்தையும் திறந்து வைத்தார் சாவித்ரிபாய். இத்துடன் விதவைகளின் முடியை மழித்து மொட்டை அடிக்கும் வழக்கத்திற்கு எதிராக முடிதிருத்தம் செய்வோரை ஒன்று திரட்டி ஒரு புறக்கணிப்பு நிகழ்வையும் அவர் நடத்தி வைத்தார்.

மக்கள் சேவையே வாழ்வாகக் கொண்டார்

1890 இல் ஜோதிபா இறந்தபோது, ​​சாவித்ரிபாய் தனது கணவரின் சிதைக்கு தானே தீ மூட்டியதன் மூலம் மேலும் ஒரு புதிய முன்னெடுப்பை செய்து வைத்தார். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகும், சத்ய ஷோதக சமாஜத்தின் செயல்பாடுகளுக்காக சாவித்ரிபாய் தனது நேரத்தையும் முயற்சிகளையும் அர்ப்பணித்து வந்தார்.

சாவித்ரிபாய் ஒரு சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். ‘காவ்யா ஃபுலே‘ மற்றும் ‘பவன் காஷி சுபோத் ரத்னகர்‘ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்ட சாவித்ரிபாய், ஜோதிபாவின் உரைகளையும் ஒரு தொகுதியாக திரட்டி 1856 இல் வெளியிட்டார்.

1897 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் புபோனிக் பிளேக் நோய்ப் பரவல் ஏற்பட்டபோது, ​​மருத்துவ நிபுணரான தனது மகனின் ஆதரவுடன் நோயாளிகளுக்கு ஒரு கிளினிக் அமைத்து பிரச்னையை உரிய முறையில் விரைந்து கையாண்டார் சாவித்ரிபாய். தனது நேரத்தையும் உடைமைகளையும் மக்கள் சேவையிலேயே அர்ப்பணித்துக் கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கிட்டத்தட்ட 2000 குழந்தைகளுக்கு தினமும் இலவச உணவை வழங்கி வந்தார். இப்படி ஒரு நாளில், பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​சாவித்ரிபாய்க்கும் தொற்று ஏற்பட்டு அதன் விளைவாக, சாவித்ரிபாய் அதே ஆண்டு மார்ச் 10 அன்று உயிர் துறந்தார்.

சாவித்ரிபாயின் சேவை, துணிவு மற்றும் அர்பணிப்பினை கௌரவிக்கும் வகையாக, புனே பல்கலைக்கழகம், 2015ஆம் ஆண்டில் ‘சாவித்ரிபாய் ஃபுலே புனே பல்கலைக்கழகம்’ என பெயர் மாற்றம் செய்விக்கப்பட்டது. அவரது பிறந்த நாள் மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் ‘பாலிகா தின்’ எனப்படும் ‘பெண் குழந்தைகள்’ தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த பதிவு முதலில் இங்கே வெளியிடப்பட்டது.

பட ஆதாரம்: YouTube

About the Author

Jyothi S

Dr. Jyothi, Assistant Professor of English, Tumkur University. Has been a teacher of English and also soft skills trainer, with special interest in writing poems, articles, short stories and translation both in Kannada and English. read more...

1 Posts | 3,603 Views
All Categories