வீடுகள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை: ஸர்மிளா ஸெய்யித்

இந்த நேர்காணலில், இலங்கை தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித், ஆணாதிக்க சமுதாயத்தில் சுதந்திரம் மற்றும் கௌரவத்திற்கான பெண்களின் உள்ளார்ந்த ஏக்கத்தை முன்வைக்கும் அவரது 'உம்மத்' புதினத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நேர்காணலில், இலங்கை தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித், ஆணாதிக்க சமுதாயத்தில் சுதந்திரம் மற்றும் கௌரவத்திற்கான பெண்களின் உள்ளார்ந்த ஏக்கத்தை முன்வைக்கும் அவரது ‘உம்மத்’ புதினத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

பொதுவாகவே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பெண்கள் நேரடியாக போரில் ஈடுபடாவிட்டாலும் நிகழும் வன்முறையின் சாட்சிகளாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் மீண்டு பிழைத்தவர்களாகவும் இருக்கிறார்கள். நடக்கும் யுத்தத்தில் பங்கேற்பது, அல்லது போர் சூழ்நிலையில் தாக்குப் பிடித்து வாழ்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது, எந்த நிலையிலும் செழித்து வளருவது என தன்னிச்சையாக செயல்படும் உறுதி பெற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

Original in English | மொழி பெயர்ப்பு சிந்து பிரியதர்ஷினி

இலங்கை தமிழ் எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித்-இன் புதினமான ‘உம்மத்‘தை சமீபத்தில் படித்தேன். இது தவக்குல், யோகா மற்றும் தெய்வானை ஆகிய மூன்று இலங்கைத் தமிழ்ப் பெண்களின் கதைகளை உயிர்ப்போடு கொண்டுவருகிறது. இதில் தவக்குல் இலங்கைத் தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் (ஸர்மிளா போலவே). யோகா, தெய்வானை ஆகிய இரண்டு பெண்கள், மாறுபட்ட காரணங்களுக்காக புலிகள் படையில் இணைவதாக கதை நகர்கிறது.

நான் கடந்த சில ஆண்டுகளாகத் தான் எனது தாய்மொழியான தமிழில் சரளமாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். பலதரப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் நான், தமிழில் சமகால பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பதில் பேரார்வம் கொண்டிருக்கிறேன். உம்மத் புதினத்தை வாசிக்கும் போது என் தாய் மொழிப் படைப்புகளின் வாசமின்றி நான் இழந்த ஆண்டுகளை எண்ணி உறுத்தல் உற்றேன்.

நைஜீரிய எழுத்தாளர் சிமாமண்டா அடிச்சி ஒரு கதையை மட்டுமே பற்றிக் கொள்வதன் ஆபத்துக்களை பற்றி தெளிவாக பேசியிருக்கிறார். முன்பை விட அதிகமான படைப்புகள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்தாலும், இன்னும் இந்திய மொழிகளில் வரும் பல கதைகள் ஒருபோதும் பிற மொழிகளின் வாசகர்களை சென்று அடைவதில்லை என்பது தான் உண்மை. (நல்ல வேளை, உம்மத் இப்போது ஆங்கிலத்திலும் கிடைக்கிறது).

இலங்கை தமிழின் தனித்துவமான பேச்சு நடையை உயிர்ப்புடன் அற்புதமாகக் கொணரும், கவிதை போன்ற உரைநடை பாணியில் எழுதப்பட்ட உம்மத், இந்த உலகில் ஒரு பெண்ணாக இருப்பதென்றால் என்ன என்பதன் மையத்திற்கு வாசிப்பவர்களை அழைத்துச் செல்கிறது – கடினமான சூழ்நிலைகளில், பூரணமாக கிடைக்காது என்று தெரிந்தும், சுதந்திரம் மற்றும் முழுமையை அடைய உணர்வுபூர்வமாக போராடும் பெண் உள்ளத்தை சொல்கிறது.

இந்தப் புதினத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான தவக்குல், ஒரு சமூக செயற்பாட்டாளராக சிறக்க விழையும் தனது சொந்த விருப்பம், தனது எதேச்சதிகார காதலனின் கோரிக்கைகள், தனது அன்பான குடும்பத்தின் அக்கறை, வளர்ந்து வரும் பெண்கள் சுதந்திரத்தை அச்சுறுத்தலாக உணரும் பழமையில் தோய்ந்த  சிற்றூர்-வாழ் இஸ்லாமிய சமூகம் என பல முரண்பட்ட விசைகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டே சுயசார்பினை அடைய போராடுகிறாள்.  

இப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த புதினத்தை ஸர்மிளாவை எழுதத் தூண்டியது எது என்று அறியும் ஆவலுடன் ஒரு நேர்காணலுக்காக அவரை அணுகிய போது, அவர் உடன் ஒப்புக்கொண்டதும் நான் அகமகிழ்ந்து போனேன்.

இப்போது கொழும்பில் வசிக்கும் ஸர்மிளா ஸெய்யித், இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள   சிறு நகரமான எராவூரைச் சேர்ந்தவர். 2013-15இல் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு தப்பி வந்து சென்னையில் தஞ்சமடைந்திருந்தார், ஸர்மிளா. காரணம்? பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பற்றிய அவரது யதார்த்தமான கருத்துக்கள் பழமைவாத இலங்கை தமிழ் முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றை  கோபப்படுத்தியதே – இதற்காக ஸர்மிளாவிற்கு எதிராகப் பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

இன்றளவிலும் சமூகப் பணிகளில் ஈடுபடும் ஸர்மிளா, (“எழுத்தும் இயக்கமும் எனக்கு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலாகும்” என்கிறார் ஸர்மிளா), போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப் பட்ட பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் நிலையான வாழ்வாதாரத்திற்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

எங்கள் இருவருக்கிடையே நிகழ்ந்த (சற்றே திருத்தப்பட்ட) மின்னஞ்சல் உரையாடல் இதோ:

உங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்தில் நீங்கள் முதல் முதலாக ஒரு எழுத்தாளராக உங்களை அடையாளம் கண்டீர்கள்?

எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும், என்னால் எழுத முடியும் என்று நான் கண்டறிந்த போது! இது குறித்து ஆதரவோ ஊக்கமோ அளிக்கக்கூடிய சூழல் எனக்கு இருக்கவில்லை. எந்த எழுத்தாளர்களுடனும் எனக்கு அறிமுகமும் இல்லை, என் குடும்பத்தில் யாருக்கும் வாசிக்கும் பழக்கமும் இருக்கவில்லை. என் எழுத்து அப்போது ஒரு குற்றமாகக் காணப்பட்டது. நான் என் நேரத்தை வீணடிக்கிறேன், என் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்ற குரல்கள் எழுந்தன.

முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்ட உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், ஒரு சமூக செயற்பாட்டாளராக களப்பணி ஆற்ற வெளியேறிய பெண்ணாக இருப்பதற்காகவே தாக்குதல்களை எதிர்கொள்ளும் உம்மத்தின் கதாநாயகி தவக்குலிற்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. உங்கள் நிஜத்தை ஒரு கற்பனை வடிவத்திற்கு நீங்கள் எப்படி எடுத்து சென்றீர்கள்?

உம்மத் நாவலின் தவக்குல் போன்ற பல பெண்கள் எங்கள் சமூகத்தில் வாழ்கின்றனர். நான் எதிர்கொண்டே அதே அநீதிகளையே பழமைவாத சூழலில் ஒவ்வொரு பெண்ணும் தினமும் எதிர்கொள்கிறாள்.  சுதந்திரத்தை விரும்பியதற்காக எங்கள் பெண்கள் கொடூரமாக தண்டிக்கப்படுகிறார்கள். உம்மத் எனது நாட்குறிப்பில் உள்ள குறிப்புகளிலிருந்து தோன்றியது. தங்களுக்காக குரலெழுப்பும் பெண்களுக்கும், பேச முன்வராத பெண்களுக்கும் நடக்கும் அநீதியை பதிவு செய்ய விரும்பினேன். அப்போது என் காயங்களுக்கு ஒரு நிவாரணம் போல் உம்மத் தோன்றியது.

என் காயங்களை குணப்படுத்திக் கொள்ளாமல் என்னால் அடுத்த நிலைக்கு செல்ல முடியவில்லை. உம்மத்தை எழுதுவதன் மூலம் எனக்கு ஏற்பட்ட நிராகரிப்புகளிலிருந்து நான் விடுதலை பெற்றேன். உம்மத் புதினம், வாழ்க்கையிலும், எழுத்திலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல எனக்கு உதவியது.

வீடுகள் உணர்ச்சிபூர்வமாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இல்லை என்ற முன்வைப்பு, உங்கள் புதினத்தில் நான் கண்ட மிகவும் ஆச்சரியமான விஷயங்களில் ஒன்று. புதினத்தின் கதையை அதிகம் வெளியிடாமல் சொல்வதென்றால், உங்கள் கதாபாத்திரங்கலில் சிலர் தங்கள் குடும்பத்தினராலேயே  கடுமையான உடல் ரீதியான மற்றும் உணர்ச்சி ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர். இந்த விஷயத்தைப் பற்றி எழுத ஏன் தேர்வு செய்தீர்கள்?

உண்மையில், வீடுகள் பெண்களுக்கு பாதுகாப்பானவை அல்ல. இன்றைய வீடுகள் பெண்களை ஆண்கள் ஆளும் இடங்கள். பெண்கள் தங்களது உள்ளார்ந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு கூட ஆண்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். இந்த கொரோனா தொற்றுநோய்க் காலம் இதை மிக தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளது. கோவிட்-19 லாக்டவுன் என்பது ஆசிய நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் அதிக வீட்டு வன்முறைகள் நிகழ்ந்த காலமாக இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில், பெண்களுக்கு தனிப்பட்ட கௌரவமோ மரியாதையோ இல்லை. அவர்கள் வெறும் வேலை செய்யும் இயந்திரங்களாக, பாலியல் பொருட்களாக, குழந்தை பெரும் இயந்திரங்களாக வாழ்கின்றனர்.

பெண்கள் மீதான பெரும்பாலான பாலியல் வன்கொடுமைகள் வீட்டில், உறவினர்களால் நிகழ்த்தப் படுகின்றன. பெண்கள் தங்கள் தந்தையால் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். பெண்ணை ஒரு பாலியல் பொருளாக பார்க்கும் கட்டமைப்பே இதற்குக் காரணம். இந்த கட்டமைப்பில் உள்ள வீடுகள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக எவ்வாறு இருக்கக் கூடும்?

கடந்த பத்து வருடங்களில் இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு, குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு, கல்வி அணுகல் மற்றும் வாழ்வாதார உரிமை போன்ற பிரச்சினைகள் குறித்த விஷயங்கள் எத்தகைய மாற்றத்தை அடைந்துள்ளன? இது சீரடையும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் கல்வி முறை, சுயஇயல்பினை உணர வைக்கக் கூடிய, சுயதிறனை புரியவைக்கக் கூடிய கல்வி முறை அல்ல. ஒரு பெண்ணோ ஆணோ சுயமாக சிந்திக்கவும் செயல்படவும் உதவாத ஒரு கல்வி முறையின் சூழலில் மாற்றத்தைப் பற்றி பேச நாங்கள் நிர்பந்திக்கப்படுகிறோம்.

முஸ்லிம் பெண்களின் கல்வியைப் பொறுத்தமட்டில் வீட்டிலும் வெளியிலும் முடிவெடுப்பது ஆண்கள் தான். எதிர்காலத்தில் தங்கள் மகள் எதை அடைவார்கள் என்பதை பெரும்பாலும் தந்தைகளே தீர்மானிக்கிறார்கள். பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெற்றோர்கள் தங்கள் மகள்கள் மௌலவிகளாக மாறுவதைக் காண எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். மகள்கள் மார்க்க ஞானம் பெற்றவர்களாகும் போது சிறந்த குடும்பப் பெண்களாக மாறி கணவர் விரும்பியபடி வாழ்வார்கள் என்றும் கணவர் விரும்பியபடி பல குழந்தைகளை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கள் மகள்களை மௌலவிகளாக மாற்றுவதன் மூலம் சுவர்க்கத்தை அடைய முடியும் என்று நம்பும் பெற்றோரின் பைத்தியக்காரத்தனத்தை மதரஸாக்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

முஸ்லீம் சமூகத்தைப் பொருத்தவரை, பல துறைகளில் நன்கு படித்த பெண்களுக்கு கூட சுதந்திரம் இல்லை. இங்குள்ள யதார்த்தம் என்னவென்றால், தங்கள் சொந்த வருமானத்தை செலவழிக்கக் கூட பெண்களுக்கு அவர்களது கணவரின் அனுமதி தேவை என்பது தான். சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு, இங்குள்ள கல்வி மீட்பு அளிப்பதாக இல்லை.

இங்குள்ள சூழ்நிலைகள் வெறுப்பையும் அதிருப்தியையுமே தருகின்றன. ஆனாலும், நான் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். எனது காலத்தில் எந்தவிதமான நேர்மறையான மாற்றங்களையும் காணமுடியாது என்றாலும், எதிர்காலத்தில் பெண்கள் சமுதாயத்தில் கண்ணியத்துடன் கௌரவத்துடன் சுதந்திரமாக வாழ்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்றைய  இலங்கையில், பல வருட கால மோதல்களுக்கு பின்னரும், ஆறாத காயங்களால் சமூகங்கள் இன்னும் அகப்பட்டுள்ள நிலையில், பெண்கள் அரசியலில் அதிக அளவில் பங்கேற்பது நல்லிணக்கத்தை நோக்கி இட்டுச் செல்ல உதவும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நான் அதை உறுதியாக நம்புகிறேன். பெண்கள், முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள இடங்களில் இருக்க வேண்டும். கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்த ஒரு சமூகமாக இருந்தபோதிலும், பெண்கள் அரசியலில் இருக்க தகுதியற்றவர்கள் என்று விமர்சிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் இன்னும் இருக்கிறோம். ஆண்களால் போர்களை உருவாக்க மட்டுமே முடியும். அவர்களால் மோதல்களை தீர்க்க முடியாது.

நீங்கள் தற்போது இலக்கிய ரீதியாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களது அடுத்த படைப்பாக நாங்கள் எதை எதிர்பார்க்கலாம்?

சமீபத்தில் நான் புனைகதை அல்லாத ஒரு படைப்பை எழுதி முடித்தேன். இது ஏப்ரல் 2019 இல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகள் மேல் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் தொடர்பானது.

இலங்கை போன்ற ஒரு சிறிய தீவில், சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களிடையே மத தீவிரவாதத்தின் எழுச்சி குறித்த உரையாடல்கள் மற்றும் சம்பவங்களின் தொகுப்பாக இதை எழுதியுள்ளேன். முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்ததன் பின்னணியையும், சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்களை ஒடுக்குவதையும் இந்த புத்தகம் விவரிக்கும். எனது சொந்த மற்றும் தொழில்முறை அனுபவங்களிலிருந்து இந்த படைப்பை உருவாக்கியுள்ளேன்.

இந்த மின்னஞ்சல் பரிமாற்றத்திற்குப் பிறகு தொலைபேசியில் சாதாரணமாக பேசுகையில், கடந்த ஜூன் மாதம், இலங்கையில், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான அரசியல் பேரணிகளின் காரணமாக எழுந்த கோவிட்-19-இன் இரண்டாவது அலை பற்றியும் குறிப்பிட்ட ஸர்மிளா, “அரசியல் என்பது ஆண்களின் கோட்டையாக இருக்கும் வரை, ஆரோக்கியம் என்பது அதிகாரம் பெறுவதற்கு இரண்டாம் பட்சமாகவே இருந்து விடும் என்றே தோன்றுகிறது” என்றார்.

ஸர்மிளா எந்தவொரு தொண்டு நிறுவனத்துடனும் முழுநேரப் பணியில் இணையவில்லை என்றாலும், பெண்களுக்காக, அதிலும் குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்காகவும்  மலையகப் பெருந்தோட்டப் பெண்களுக்காகவும் சுய வலுவாக்கம், வாழ்வாதாரத்திற்கான சுய தொழில் முன்னெடுப்பு போன்ற பணிகளில் ஈடுபடும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பயிற்றுநராகவும் செயற்பட்டு வருகிறார்.

உம்மத் என்கிற புதினத்தை, ஒரு சமூக செயற்பாட்டாளராக, இலங்கை தமிழ் முஸ்லிம் பெண்ணாக, இந்த தீவு தேசத்தின் பெண்கள் பற்றிய ஆழமான நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு அப்பால் அதை நகர்த்த அவர்கள் வகிக்க வேண்டிய பங்கு ஆகியவற்றின் தொகுப்பாக வடித்திருக்கிறார் ஸர்மிளா ஸெய்யித்.

ஸர்மிளா போன்ற போரினாலும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பினாலும் பெண்கள் அடையும் பாதிப்புகள், மற்றும் அதனின்று மீளும் பெண்கள், அவர்களது எதிர்த்துச் செயற்படும் திறன் ஆகிய இரண்டையும் விளக்கும் பெண்களின் குரல்கள் இப்பொழுது அதிகம் தேவை நமக்கு.

About the Author

Aparna Vedapuri Singh

Founder & Chief Editor of Women's Web, Aparna believes in the power of ideas and conversations to create change. She has been writing since she was ten. In another life, she used to be read more...

2 Posts | 3,859 Views
All Categories