மகளின் திருமணத்திற்காக சேமிக்கும் பெற்றோரே! அவளது சொந்த பிசினஸிலும் முதலீடு செய்யுங்கள்…

உங்கள் மகளின் திருமணத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் மகளின் பொருளாதார சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டிய நேரம் இது!

உங்கள் மகளின் திருமணத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் மகளின் பொருளாதார சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டிய நேரம் இது!

ருமணங்களை விட பெண் தொழில்முனைவோர்களும் பெண் தொழிலதிபர்களும் அதிகம் தேவைப்படும் காலம் இது.

இந்தியாவில், ஒருவரது வாழ்க்கையின் அதி முக்கிய நாளாக திருமண நாள் கருதப்படுகிறது – இதற்கென்று தனிப்பட்ட லாஜிக் சார்ந்த காரணங்கள் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. யாரும் இதைப் பெரிதாக “ஏன் இப்படி” என்று கேட்காத பட்சத்தில், இந்த கருத்து குறித்து எனக்கென்று நிறைய கேள்விகளும் சந்தேகமும் சிறு பயமும் எப்போதுமே இருந்திருக்கின்றன.

ஒரு இளம்பெண்ணை பொறுத்தவரை, திருமணம் என்ற ஒரு நாள் நிகழ்வே அவளது வாழ்வின் பெருவிழாவாக, குடும்பத்தினரின் நீண்ட நாள் கனவும் லட்சியமும் நிறைவேறிய நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த பெண்ணுக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள், கனவுகள் இருந்தாலும், அவற்றை விடுத்து அவள் சுமக்க வேண்டிய ‘திருமணம் சார்ந்த எதிர்பார்ப்புகள்’ எனும் பெரும் பாரம் இன்றளவும் மாறாமலேயே இருக்கிறது.

ஒருபுறம், திருமணம் குறித்த இந்த பார்வையானது பெண்ணைப் பெற்றவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை உருவாக்கி வருகிறது; மறுபுறம், இப்படிப்பட்ட எண்ணங்கள் பெண்கள் பொருளாதார சுதந்திரத்துடன் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு தடையாக இருக்கிறது.

Original in English| மொழி பெயர்ப்பு சிந்து பிரியதர்ஷினி

திருமணம் என்றால் இப்படி அல்லவா நடக்க வேண்டும்!?

சுற்றமும் சமூகமும் திருமணத்திற்கு என்று ஒரு மதிப்பீட்டு அளவுகோலை அமைத்துள்ளது. இது திருமணத்திற்கு முந்தைய ப்ரீ-வெடிங் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் (pre-wedding photos and videos) தொடங்கி அத்தனையும் குறைவற அமைய வேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகளை கொண்டுள்ளது. மணமக்களின் ஒப்பனை, திருமண சடங்குகள், சீர்வரிசை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அனைத்தும் சினிமாவில் வரும் காட்சிகள் போல அமைய வேண்டும் என்ற யதார்த்தத்தை மிஞ்சிய பல எதிர்பார்ப்புகள் திருமண வீட்டாரின் முதுகில் ஏற்றப்படுகின்றன.

இதற்கென மேற்கொள்ள வேண்டிய செலவுகளால் நிதிநிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் சமூகத்தில் தங்களது அந்தஸ்தை நிலைநாட்ட பெற்றோர்களும் இதற்கு இணங்கிவிடுகிறார்கள். இதில் மிகவும் வருத்தம் அளிப்பது என்னவென்றால் பெற்றோர்கள் பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் பிறந்தது முதலே அவளது திருமணத்திற்கு என்றே பிரத்யேகமாக நிதியும் நகையுமாக சேர்த்து வைத்து கொள்வது தான்.

பெண்ணைப் பெற்றவர்கள் ஏன் முன்வருவதில்லை?

இதே முனைப்போடு ஒரு பெண்ணின் தனிப்பட்ட கல்வி, தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பற்றிய குறிக்கோள்களை புரிந்து கொண்டு துணையாக முன்நிற்க பெரும்பாலான பெற்றோர்கள் ஏன் முன்வருவதில்லை? அவ்வளவு பின்தங்கிய சமூகக் கட்டமைப்பிலா நாம் வாழ்ந்து வருகிறோம்?

திருமணம் குறித்த நமது சமூகத்தின் பார்வையில் தான் இந்தப் பிரச்சினையின் மூல காரணம் இருப்பதாக நான் நம்புகிறேன். இரு குடும்பங்களின் மற்றும் உள்ளங்களின் இணைவு கொண்டாட்டத்திற்குரியதே . உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் உங்கள் துணையுடன் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை துவங்கும் அந்த மகிழ்ச்சி நிறைந்த உன்னத தருணம் மிக முக்கியமானது.
இருப்பினும், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உள்ள பல மைல்கற்களில் அது ஒன்றாகும்; அது மட்டுமே வாழ்க்கை என்று சொல்ல முடியாது.

உங்கள் மகள் பள்ளிக்கு சென்ற முதல் நாள், அவள் படித்து பட்டம்பெற்ற கிராஜுவேஷன் தினம், அவளுக்கு கிடைத்த முதல் உத்தியோகம், அவள் விரும்பி ஈடுபடும் தன்னார்வத் தொண்டுகள், அவளது பதவி உயர்வுகள் போன்ற பல தருணங்களும் இது போலவே கொண்டாடப்பட வேண்டும், அல்லவா?

உங்கள் மகள் உறங்காமல் கண்விழித்து படித்த பல இரவுகளும், தளராத விடாமுயற்சியும் மதிப்பிற்குரியதல்லவா?

உங்கள் பெண்ணின் உழைப்பும் முயற்சியும் மிக உயர்வானது

அவள் படித்து பெற்ற அந்த பட்டம், அந்த வாலடிக்டோரியன் விருது, கௌரவமான அந்த பதவி உயர்வு என அவளது கல்வி மற்றும் தொழில் சார்ந்த முன்னேற்றம் அனைத்தின் பின்னணியிலும் அவளுடைய தீர்க்கமான, தளராத முயற்சி இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட உங்கள் மகளை 24 வயதை அடைந்தவுடனேயே திருமணம் என்ற வட்டத்திற்குள் தள்ள முனைவது முறையாகாது. மாறாக, அவளுடைய வாழ்க்கைத் திட்டங்களைப் பற்றி அவளிடம் கேளுங்கள்; அவளை புரிந்து கொண்டு உங்கள் ஆதரவை அளியுங்கள். அவளுடைய கல்வி அவளுக்கு ஒரு சிறந்த மணமகனைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவியோ தகுதியோ அல்ல. அவளுடைய கல்வி அவளுக்கென்று ஒரு தனிப் பாதையை நிறுவி, தன் திருமணச் செலவுகளில் ஒரு பாதியை தனது வாழ்க்கைத் துணைக்கு ஈடாக தானே ஏற்று நடத்துமளவு திறனை ஏற்படுத்தி தரும் வலிமை உடையது.

ஒரு உண்மைச் சம்பவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, எனது தோழி ஒருவர் சொந்த பிசினஸைத் தொடங்க விரும்பினார். அவர் தன்னுடைய பெற்றோரிடமிருந்து முதலீட்டிற்காக உதவி கேட்டபோது . மகளின் வியாபாரத்தில் முதலீடு செய்வதை விட, அவளுடைய திருமணத்திலேயே தாங்கள் உழைத்து சேர்த்த பணத்தை பயன்படுத்த விரும்புவதாகக் கூறி மறுத்து விட்டார்கள்.

தொழில் மற்றும் ஏனைய விஷயங்களில் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து செயல்படும் மூத்தவர்களின் சமயோசிதமானது, ஒரு கணிசமான return on investment, அதனினும் மேலாய் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் மகளை வளர்த்ததில் கிடைக்கும் பெருமை ஆகியவற்றை தரக்கூடிய மகளின் பிசினஸில் முதலீட்டிற்கான நேரம் வரும்போது எங்கே மறைந்து விடுகிறது?

வேடிக்கையாக, ஒரு ஆணைப் பெற்றவர்களின் விஷயத்தில் இது முற்றிலும் மாறுபட்டதாகி விடுகிறது. பெண்ணைப் பெற்றோர் போல் தங்களது மகனுடைய திருமணத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை, அவருடைய எல்லா முயற்சிகளிலும் அவர்கள் எப்போதும் முதலீடு செய்ய முன்வருவார்கள். ஒருவேளை, திறம்பட உழைக்கும் பெண்ணைப் பெற்ற அப்பாவிகளுள் யாரேனும் திருமணம் என்ற நிகழ்வின் நிமித்தமாய் தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தையும் அந்த ஆணின் பிஸினஸில் முதலீடு செய்யக் கூடும் .

பெண்ணைப் பெற்ற இல்லங்களில்இணக்கமான சூழ்நிலை உருவாக வேண்டும்

நமது குழந்தைகள் நம் செயல்பாடுகளின் மூலமாகவே சமுதாயத்தை புரிந்து கொள்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். நமது பெண் பிள்ளைகளின் சாதனைகளை பாராட்டி , பெண் பிள்ளைகள் அவர்கள் விரும்பும் பாதையில் முன்னேறும் சுதந்திரம் கிடைக்கக்கூடிய இணக்கமான சூழ்நிலையை நமது இல்லங்களில் நாம் உருவாக்க வேண்டும்.

உங்கள் பெண்ணிற்கான திருமண நிதியை அவளுடைய பிசினஸ் முன்னேற்றத்திற்கும், சுயசார்பு தரும் பொருளாதார மேம்பாட்டிற்குமான முதலீடாக நீங்கள் அளிக்க வேண்டிய சமயம் இது. ஏனெனில் இந்தியாவுக்கு ஆடம்பரமான திருமணங்களை விட பெண் தொழில்முனைவோர்களும் பெண் தொழிலதிபர்களுமே அதிகம் தேவைப்படுகிறது.

(மேற்காணும் புகைப்படம் ‘கல்யாண சமையல் சாதம்’ திரைப்படத்தில் இருந்து எடுக்கப் பட்டது.)

About the Author

Missree Vachhani

A voracious reader, A novice writer, An ardent promoter of energy efficiency. read more...

1 Posts | 1,783 Views
All Categories