பெண்ணே! அகிலம் ஆள்வாய் தூயவளே!

"பெண்ணே! பழியைச் சொல்லும் பாம்புகளைப் பாங்காய் நீயும் கடந்திடடி" என்று பெண்ணின் உறுதியை, திறமையைத் தமிழால் தட்டி எழுப்புகிறார் கிருத்திகா.

“பெண்ணே! பழியைச் சொல்லும் பாம்புகளைப் பாங்காய் நீயும் கடந்திடடி” என்று பெண்ணுள் உறங்கும் உறுதியை, திறமையைத் தமிழால் தட்டி எழுப்புகிறார் கிருத்திகா.

பெண்ணே!

அனல் கொண்ட உன்விழிகள்
அகிலத்தை ஆளட்டும்
உடல்நோக்கும் கயவர்கள்
உள்வஞ்சம் சாகட்டும்

வெற்றிகள் பலவற்றால்
வேதனைகள் வேகட்டும்
சாதனைப் பெண் உன்னைச்
சரித்திரமும் பேசட்டும்

கிணற்றின் உள்ளே தவளையெனக்
கிடந்தால் வாழ்க்கை இல்லையடி
கிளர்ச்சிப் போரில் கால்பதித்தால்
கீதம் வாழ்வில் இசைக்குமடி

பாலியல் சீண்டல் பலவிதத்தில்
பனிமலர் உன்னை வாட்டிடுதே
வேரோடு நீயும் அதைக்களைந்து
விளைச்சல் செய்திடு நல்உலகை…

பெண்ணாய்ப் பிறந்த நாள்முதலே
பெரும்போர்  தானடி வாழ்க்கையிலே
எதிர்த்துக் கேள்வி நீதொடுத்தால்
ஏசும் பேச்சுக்கள் தொடராதே…

தங்கம் என்றும் புகழ்ந்திடுவார்
தாழ்த்திப் பேசியும் இகழ்ந்திடுவார்
பெண்ணே ஒன்றை நினைவில்கொள்
பேசும் நாவை எதிர்த்தேநில்

பழியைச் சொல்லும் பாம்புகளைப்
பாங்காய் நீயும் கடந்திடடி
விழிகள் எல்லாம் வியந்திடவே
வீரம் கொண்டே நடந்திடடி

அச்சம் நாணம் மடமெல்லாம்
அழகே மனதில் விதைக்காதே
வீரம் வெற்றி இவைமட்டும்
வேண்டும் அதைநீ மறக்காதே

காற்றைப் போல வேகம்கொள்
கடமை செய்திடத் தாகம்கொள்
நேற்றை நினைத்துக் கலங்காமல்
நெஞ்சில் துணிவைச் சேர்த்துக்கொள்

அன்பும் அறிவும் ஆற்றலுமே
அழகடி வண்ணப் பெண்மகளே
அதைநீ வாழ்வில் உணர்ந்தாலே
அகிலம் ஆள்வாய் தூயவளே!

பட ஆதாரம்: Photo by Hassan OUAJBIR from Pexels

 

About the Author

1 Posts | 1,409 Views
All Categories