முத்திரை பதித்த திருநங்கையர்: அரசியலில் களமிறங்கி சரித்திரம் படைத்தவர்கள்

அரசியலில் தடம் பதித்த திருநங்கையர் திருநம்பிகள் பற்றிய தகவல்களை பதிவு செய்கிறார், எழுத்தாளர் மற்றும் கவிஞர் விக்ரம் வைத்யா அவர்கள்.

நமது மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவில் மதிப்பிற்குரிய நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அரசியலில் தடம் பதித்த மற்ற திருநங்கையர் திருநம்பிகள் பற்றிய தகவல்களை பதிவு செய்கிறார், எழுத்தாளர் மற்றும் கவிஞர் விக்ரம் வைத்யா அவர்கள்.

சென்ற வாரம், தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கை குழுவில் மதிப்பிற்குரிய நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு ஒரு பதவி வழங்கப்பட்ட செய்தி கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; அரசுக்கு நன்றியும் பாராட்டுகளும். 

இந்த அறிக்கையை தொடர்ந்து, அரசியலில் தடம் பதித்த மற்ற திருநங்கைகள் திருநம்பிகள் பற்றி தேடியபொழுது கிடைத்த தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

மாற்றுப்பாலினத்தவராக இந்தியாவில் அன்றாடம் தெருவில் நடந்து சென்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக வீடு வந்து சேர்வதே மிகப் பெரிய போராட்டம் என்றால் மிகையல்ல.

இந்தியா மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளென்று தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் எல்லா நாடுகளிலுமே மாற்றுப்பாலினத்தாருக்கான சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

திருநர் என்று அறியப்படும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தனக்காக ஒரு பால் பாக்கெட் வாங்குவது கூட அரசியல்தான் என்பது என் புரிதல். ஆக, கீழே நான் சுட்டி இருக்கும் பெயர்கள், நேரடியாக வாக்கரசியல் களத்தில் இந்திய அளவில் நமக்கு தெரிய வேண்டிய பெயர்கள் என்றால் அது மிகையல்ல. 

ஷப்ணம்  மௌஸி 

1998 ஆம் ஆண்டு. 1993 இல் முதலைமைச்சராக தேர்வாகிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங் அவர்கள், தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார்.

விவசாயக் கூலிகளுக்கு நிலம் வழங்குதல், இலவச மின்சாரம், கல்வி வளர்ச்சி என்று பல வாக்குறுதிகளின் அடிப்படையில் தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ள திக்விஜய் சிங் அவர்கள் ஒருபுறம் களமிறங்க, அவ்வருடத்தின் ‘ஜாலியன் வாலா பாக் படுகொலை’ என்று சொல்லப்படும் முல்தாய் விவசாயிகள் படுகொலையை பாஜக அரசியல்படுத்தி களம் காண்கிறது. அண்மையில் நடந்த மேற்கு வங்க மாநில தேர்தல் போல், அப்போது இந்தியா முழுவதும் கவனித்த ஒரு மாநில தேர்தல் அது. 

மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 130 கி.மி கல் தொலைவில் உள்ள சோஹக்பூர் என்கிற தொகுதி, ‘காங்கிரஸ் கண்ணை மூடிக் கொண்டு வெற்றி பெறும்’ என்று தொன்றுதொட்டு சொல்லப்பட்ட தொகுதி. அதுவும் காங்கிரஸ் கட்சியின் பெயர்பெற்ற தலைவர்களுள் ஒருவரான கிருஷ்ணபால் சிங் அவர்களின் தொகுதி. 2000 ஆம் ஆண்டு  மீண்டும் ஒரு இடைத்தேர்தலை அத்தொகுதி சந்திக்க, அப்போது ‘ஜீத்தி ஜித்தாயி பாலிடிக்ஸ்’ (‘வெற்றியடைந்து விட்ட கட்சி’ என்று பொருள்) பெயரில் திருநங்கைகளுக்கு என்று பிரத்யேகமாக ஒரு கட்சி சோஹக்பூரில் களம் கண்டது. அக்கட்சியின் முகமான ஷப்ணம் மௌஸி இந்திய வரலாற்றில் தனக்கான ஒரு இடத்தை எழுதினார்.

இந்திய வாக்கரசியலில் அரசியல் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் மாற்றுப்பாலினத்தவர் என்ற  சரித்திரத்தை 20 வருடங்கள் முன்பு ஷப்ணம் மௌஸி எழுதிக்கொண்டார்.

‘சந்திர பிரகாஷ்’ என்ற ஆணாக ஒரு பிராமணக் குடும்பத்தில் போலீஸ் அப்பாவுக்கு பிறந்த இவர், மற்ற மாற்றுப்பாலினத்தவர் போலவே குடும்பத்தால், மற்றனைத்து புறச்சூழல்களில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டார். தான் பிறந்த குடும்பத்திலிருந்து வெளியேறி ‘ஹிஜ்ரா’ (அல்லது) ‘கின்னர்‘ என்று வடமாநிலங்களில் அடையாளப் படுத்தப்படும்  திருநங்கைகளால் வளர்க்கப்பட்டு, 2000 ஆம் இந்திய வரலாற்றின் புதிய முகமாக தன்னைப் பதிவு செய்தவர் ஷப்ணம் மௌஸி.

1998 ஆம் ஆண்டில் நடந்த பரபரப்பான தேர்தலில் காங்கிரஸ் அணி சார்பாக போட்டியிட தனக்கு ஒரு டிக்கெட் கேட்ட மௌஸிக்கு காங்கிரஸ் டிக்கெட் தர மறுக்க, “அடுத்த 15 வருடத்துக்கு உங்க ( காங்கிரஸ் ) ஆட்சி இனி கிடையாது” என்று சாபமிட்டாராம் மௌஸி. அவர் சொன்ன வார்த்தைக்கேற்ப 1998 தேர்தல் தான் காங்கிரஸ் மத்தியபிரதேசத்தில் கடைசியாக தனியாகவும் முழுதாக 5 வருடம் ஆட்சி நடத்திய தேர்தலாக அமைந்தது. 

‘மௌஸி’ என்றால் சித்தி. (மா – அம்மா; ‘மௌஸி’ அல்லது ‘மாஸி’ என்றால் ‘தாயை ஒத்தவள்’ என்று பொருள். நமக்கு தெரியாத அனைத்து பெண்களையும் பொத்தாம்பொதுவாக நாம் இன்று ஆன்ட்டி (Aunty) என்று அழைப்பது போலத்தான். மஹாராஷ்டிராவில் ‘காக்கு’ அல்லது ‘தாய்’ என்பார்கள் (மராத்தியில் தாய் என்றால் ‘அக்கா’ ன்னு அர்த்தம் ), மற்ற இடங்களில் ‘மௌஸி’ என்பது பெண்களை பொதுவாக குறிக்கும் சொல் எனலாம். 

ஷப்ணம் மௌஸி காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களமிறங்கினாலும் 2000 த்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பின் அவரால் மீண்டும் வெற்றி பெற முடியவில்லை. ஜீத்தி ஜித்தாயி கட்சியை கலைத்துவிட்டு லாலுவின் ‘ராஷ்ட்ரிய ஜனதா தல்’ கட்சியின் சார்பாக போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் தோல்வியடைந்த பின் லாலு மற்றும் அவருடைய மகனுடன் கருத்து வேற்றுமை கொண்டு விலகினார். பின் ஒரு கட்டத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய முயற்சி செய்து பலனில்லை என்று அறிந்தவுடன் மீண்டும் காங்கிரஸ் விளங்காமல் போகும் என்று சினந்து சொன்னதாகக் கேள்வி. இப்படியாக தொடர்ந்து மத்திய பிரதேச அரசியல் செய்திகளில் இன்றும் ஷப்ணம் மௌஸி தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறார். இன்று எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் புனர்வாழ்வு செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் இவர், இந்திய திருநர் சமூகத்தினருக்கு மிக முக்கியமான முன்னோடி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு சரித்திரத்தின் தொடக்கம், ஷப்ணம் மௌஸி. 

இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஷப்ணம் மௌஸி, 12 மொழிகள் பேசக் கூடியவர் என்பது கூடுதல் சிறப்பு. இவரைப் பற்றி அவருடைய பெயரிலேயே 2005ஆம் ஆண்டு ஒரு திரைப்படமும் வெளியானது. ‘வேட்டை’, ‘மீகாமன்’ போன்ற தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்த அஷுதோஷ் ராணா அவர்கள் ஷப்ணம் மௌஸியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த மாநிலத்தின் ‘சூப்பர் ஸ்டார்’ அவர் என்பதால் அவர் அந்தக் கதாபாத்திரம் ஏற்று நடித்தது சிறப்பு மிக்கது. அந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப் பட்டாலும் அரசியல் ரீதியான காரணங்களால் அந்தத் திரைப்படம் பற்றிய செய்திகள் கூட அந்த மாநிலத்தை தாண்டி வெளியில் செல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இது வரை நான் பார்த்த பல பால்புதுமை (Queer) திரைப்பட விழாக்களில் இன்றுவரை எதிலுமே இந்தப் படத்தை நான் பார்த்த தில்லை என்பது வியப்பே.

கமலா ஜான் (அல்லது) பூவா 

1998 இல் மீண்டும் மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், 1999 இல் நேரடியாக மேயர்களை தேர்ந்தெடுக்கும் முறையை அமல் படுத்தியது. 1998 வரை மக்கள் வார்டு கவுன்சிலரை தேர்வு செய்ய, அவர்கள் தங்களுக்கான மேயரை தேர்வு செய்யும் முறை இருந்தது. அப்போது ‘முனிசிபல் தேர்தல்களில் பெருவாரியாக பாஜக வெற்றி பெறும்’ என்பதை உணர்ந்த காங்கிரஸ் கட்சியின் ராஜ தந்திரம் இதுவென்று கூட சொல்லலாம். அப்படி 2000ஆம் ஆண்டு கட்னியின் மேயர் தேர்வு செய்யப்பட்டபோது, முதல் முறையாக ஒரு வரலாறு பதிவாகியது.

தேர்வாகிய மேயர் பற்றிய செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை இப்படி பதிவுசெய்கிறது: “A EUNUCH YOU CAN TRUST“.

காங்கிரசின் கோட்டையாக இருந்த 45 வார்டுகள் அமைந்த கட்னியில், 35க்கும் மேற்பட்ட வார்டு காங்கிரஸ் வசம் தொடர்ந்து இருந்து வந்தது. 2000 ஆம் ஆண்டு 2.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் கட்னி யில்  அவற்றுள் 28 / 45 வார்டுகளில் 1800++ வாக்குகள் வித்தியாசத்தில் கமலா ஜான் என்கிற திருநங்கை வெற்றி பெற்று ஒரு முத்திரையை பதித்தார்.

அடிப்படை கல்வி கூட இல்லாத, கெட்ட வார்த்தைகளில் கை தேர்ந்தவராக அறியப்பட்டு வந்த கமலா ஜான் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டது, வெற்றி பெறுவதற்காக அல்ல. துவக்கத்தில் அந்தத் தேர்தலை, முன்பிருந்த பார்ட்டிகளை அவமதிக்க வேண்டும் என்கிற போக்கில்தான் கமலா களமிறக்கப் பட்டார். பின்பு, ‘ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்’ என்கிற செய்தி மக்களில் கவனத்தைப் பெற அவரை வேடிக்கை பார்க்க கூடிய கூட்டமானது அரசியல் தன்மைகள், கோஷங்கள் ஏதுமில்லாமல், பிரச்சாரம் செய்த அன்றைக்கு தேதிக்கு 46 வயதான கமலாவின் மீது ஒரு நம்பிக்கையோடு வாக்களித்து ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியது.

கமலா ஜான்; ‘ஜான்’ – ‘என் அன்பே’ என்று தமிழில் சொல்கிறோமே, அது போல ‘என் உயிரே’ என்று அன்பாக அழைக்கும் முறையில், ‘ஜான்’ என்கிற உருதுச் சொல் ‘உயிர்’ என்று பொருள் படும். கமலாவை ‘பூவா’, அதாவது ‘அத்தை’ என்றும் அன்புடன் அவரை பின்பற்றியவர்கள் அழைப்பது உண்டு.

2001ல் கமலா ஜான் அவர்கள் வெற்றி பெற்று சிறப்பாக செயல்பட்டாலும் அவருடைய பதவிக்காலம் முடியும் முன்பே அவர் தன் பதவியை, 2003ஆம் ஆண்டில் ராஜினாமா செய்யும்படி ஆனது. ‘கமலா ஜான் தனது பத்திர ஆவணங்களின்படி ஒரு ஆண்’ என்றும், ‘கட்னி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவி. ஒரு ஆணாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பதவியில் அவர் இருக்க முடியாது‘ என்றும் வழக்கு தொடுக்கப்பட்டது.

‘தான் ஒரு பெண்ணாகவே உணர்கிறேன், தான் ஒரு பெண் தான்’ என்று நீதிமன்றத்தில் கமலா எடுத்துச் சொன்னாலும், தேர்தலுக்கு கமலா பதிவு செய்த ஆவணங்களில் எல்லாம் அவர் ஒரு ஆண் என்றே பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆக, நீதி மன்றத்தின் வழி கமலாவின் ஓட்டம் தடைப்பட்டது.

தனது பதிவுகளை சரி செய்து கொண்டு, ஒரு பெண்ணாக 2009 இல் மீண்டும் மத்தியபிரதேசத்தில் உள்ள சாகர் நகரத்தில் மேயர் பதவிக்கு கமலா போட்டியிட்டார். பாஜக வின் சுமன் ஆஹிர்வாரை எதிர்த்து 43,000 வாக்குகள் வித்தியாசத்தில் கமலா வெற்றி பெற்றார். கமலாவை அதே பழைய அம்பு கொண்டு, இந்த முறை பாஜக வென்றது. அதாவது, ‘சாகர் நகரத்தின் மேயர் பதவி, பட்டியல் இனத்தவர்கள் எனப்படும் Scheduled Caste இனத்தை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப் பட்ட தொகுதி’ என்பதே அந்த அஸ்திரம்.

‘கமலா உடலைமைப்பின் படி பெண்ணல்ல’ என்று சொல்லப்பட்டது. அத்துடன், கமலாவால் ‘தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்’ என்பதை நிறுவும்படியாக தன்னுடைய சாதி சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால் 2011 இல் மீண்டும் கமலா மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. கமலா ஓயவில்லை; வழக்கை உயர்நீதிமன்றம் எடுத்துச் சென்றார். முன்பு அளித்த தீர்ப்பே சரியென்று உயர்நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

பல ஆண்டுகளுக்கு பிறகு, 2018 இல் பால்புதுமையினருக்கான 377 ஆம் சட்டத்தை அடித்தொழித்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

ஒரு வேளை, இன்று கமலா ஜான் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாக தன் நடவடிக்கைகளை தொடர்ந்திருக்க முடியும்.

2019 இல் கமலா காலமானார். உடலளவில் அவர் 2019 இல் தான் இறந்து போனார் என்றாலும் நமது நாட்டின் அரசியல் அவரை முன்பே இருமுறை கொலை செய்து விட்டது என்பதே உண்மை.

பட ஆதாரம்: YouTube

About the Author

1 Posts | 1,865 Views
All Categories