காதல் செய் தோழி!

"கவிதைகளை ஈன்றெடுக்கும் அந்தப் பேனா நுனியைக் காதல் செய்...பால்ய கதை சொல்லிச் சிரிக்கும் கிழவியின் வெட்கம் காதல் செய்..."

“கவிதைகளை ஈன்றெடுக்கும் அந்தப் பேனா நுனியைக் காதல் செய்…
பால்ய கதை சொல்லிச் சிரிக்கும் கிழவியின் வெட்கம் காதல் செய்…”

காலங்கள் மறந்து கனவில் மட்டும் வாழும் அந்த முகமில்லா ஜீவனைக் காதல் செய்.
கண்ணில் வடியும் கண்ணீர் துடைத்துப் புன்னகை செய்து பிரியும் தோழமையைக் காதல் செய்.
முகம் புதைக்கும் தலையணையைக் காதல் செய்.
உன் உலகம் சுருக்கும் கம்பளியைக் காதல் செய்.
கதைகளிலே காதல் சொல்லும் அந்தக் காவியனைக் காதல் செய்.
உன் காலங்களை கடத்திச்செல்லும் நூல்களைக் காதல் செய்.
உன் காதல்களை கொள்ளையிடும் கானங்களைக் காதல் செய்.
உன் கவிதைகளை ஈன்றெடுக்கும் அந்தப் பேனா நுனியைக் காதல் செய்.
உன் காதோடு கதை சொல்லும் அந்த அலைபேசியையும் காதல் செய்.
காரிருளில் உன் காலாடும் அந்நிழலினையும் காதல் செய்.
பேருந்தின் சாளரவழி சிரிக்கும் முகங்கள் காதல் செய்.
யாசகம் கேட்டுச் சிரிக்கும் அந்த கிழவன் முகம் காதல் செய்.
பால்ய கதை சொல்லிச் சிரிக்கும் கிழவியின் வெட்கம் காதல் செய்.
நாள்தோறும் சுட்டெரிக்கும் சூரியனை காதல் செய்.
உன் இரவுகளைப் பற்ற வைக்கும் நிலவினையும் காதல் செய்.
கற்றவையும் கற்பவையும் நிற்பதையும் காதல் செய்.
கல்லாமையும் பொல்லாமையும் நில்லாமையும் காதல் செய்.
எழுதப்பட்ட கடிதங்கள் காதல் செய்.
விழுங்கப்பட்ட வார்த்தைகள் காதல் செய்.
சொல்லப்பட்ட ஆசைகள் காதல் செய்.
புதைக்கப்பட்ட பிரியங்கள் காதல் செய்.
காலத்தின் கட்டாயங்களைக் காதல் செய்.
காலமிடும் கட்டளைகளைக் காதல் செய்.
காலம் தரும் மாற்றங்களைக் காதல் செய்.
காலமாற்றும் காயங்களையும் காதல் செய்.
பிரிந்து போன புன்னகைகள் காதல் செய்.
மறந்து போன ரணங்கள் காதல் செய்.
ஓரவிழி புன்னகைகள் காதல் செய்.
வார்த்தையில்லா வாக்கியங்கள் காதல் செய்.
நீ கடந்து போகும் வேற்றுமைகள் காதல் செய்.
நீ விட்டுச் செல்லும் தடங்களையும் காதல் செய்.
மிச்சங்களும் சொச்சங்களும் காதல் செய்.
எஞ்சி ஏதும் இருந்தால் அதுவும் கொண்டு காதல் செய்.
கண்ணாடி காட்டிடும் பிம்பமது காதல் செய்.
விழும்போதெல்லாம் எழுந்து நிற்கும் பாதமதைக் காதல் செய்.
கண்ணீரில் மிதக்கையிலும் சிரிக்கும் விழி காதல் செய்.
கன்னம் கடக்கும் முன்னே அந்த கண்ணீர் துடைக்கும் கரம் காதல் செய்.
மறந்தவையும் மறைத்தவையும் மரித்தவையும் காதல் செய்.
கடந்தவையும் கலைந்தவையும் களித்தவையும் காதல் செய்.
திறந்தவையும் துறந்தவையும் தெரிந்தவையும் காதல் செய்.
காலங்கள் காதல்கள் கனவுகளைக் காதல் செய்.
மிச்ச சொச்சம் தீர்ந்த பின்னே,
எஞ்சியவை காதல் செய்.
காதல் செய் தோழி!

பட ஆதாரம்: Photo by Edu Carvalho from Pexels

About the Author

GAYATRI B

Post graduate student in Chemistry. Feminist. Compulsive Reader with a passion for words. read more...

1 Posts | 1,713 Views
All Categories