ஏன் குழந்தைகள் தங்கள் மீது இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள்?

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைக்கு வெளிப்படையான பாதிப்பு ஏற்பட்டு அதை பெற்றோர் அறியும் வரை என்ன நேர்ந்தது என்பதே வெளிவருவதில்லை.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைக்கு சிறுநீர் தொற்று, உட்கார்வதில் சிரமம் போன்ற ஏதேனும் நேர்ந்து பெற்றோர்களின் கவனத்திற்கு அது அகப்படும் வரை என்ன நேர்ந்தது என்பதே வெளிவருவதில்லை. தங்கள் மீது இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் பற்றி பேச குழந்தைகள் ஏன் தயங்குகிறார்கள்?

பதினெட்டு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண், பெண், மூன்றாம் பாலினம் என யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

Original in English | மொழிபெயர்ப்பு: சிந்து பிரியதர்ஷினி

ஆனால் வன்புணர்வு எனப்படும் பெருங்கொடுமை பெண் பிள்ளைகளுக்கு எதிராகவே அதிகமாக நடைபெறுகிறது (இதில் குழந்தை திருமணங்கள், திருமணத்தின் பெயரில் வற்புறுத்தி உறவு கொள்ளுதல் ஆகியவையும் அடங்கும்). கசந்தாலும் இதுவே உண்மை, இளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் – அவளுக்கு நான்கு வயதோ, ஒன்பது வயதோ, அத்துமீறும் மிருகங்கள் அது பற்றி சிந்திப்பதில்லை.

பாலியல் வன்கொடுமை, பரபரப்பாக பேசப்பட்டு தலைப்புச் செய்தியாக கவனத்தை ஈர்க்கிறது. பாலியல் அத்துமீறல் எனப்படும் ‘செக்சுவல் அப்யூஸ்’ அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது வன்கொடுமை அளவுக்கு மோசமில்லை, அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது – ஆனால் அது நிஜமல்ல.

பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்பட்டவர், ‘போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர்’ (PTSD) எனப்படும் பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். தங்களுக்கு நேர்ந்த அத்துமீறலுக்கு உரிய தீர்வும் சிகிச்சையும் கிடைக்கும் வரை இந்த மனஉளைச்சலில் இருந்து பெரும்பாலானோர் மீள்வதில்லை. இதிலிருந்து மீண்டாலும் அவர்களுக்குள் அந்த வலி ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கக் கூடும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மௌனமாயிருப்பது ஏன்?

அதிலும் இது போன்ற அத்துமீறல்கள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும்போது, அப்படி ஒன்று நடந்தது கூட சொல்லப்படாமலே போய்விடுகிறது. ஊமைக் கொல்லி நோயாய் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்படுகின்றன, இந்த அத்துமீறல்கள்.

தங்கள் மீது இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் பற்றி பேச குழந்தைகள் ஏன் தயங்குகிறார்கள்?

என்ன நடந்தது என்பதை விவரிக்க சரியான வார்த்தைகள் தெரிவதில்லை

தங்களுக்கு இது தான் நேர்ந்தது என்பதை விளக்க குழந்தைகளிடம் சரியான வார்த்தைகள் இல்லை. என்ன நடந்தது என்பதும் புரியாமல், எப்படி விளக்குவது என்றும் தெரியாமல் குழந்தைகள் தவித்துப் போகிறார்கள்.

குழந்தைகளுக்கு அவர்களின் பிறப்புறுப்புகளின் பெயர்களை விவரிக்கக் கூடத் தெரிவதில்லை; உங்கள் மகனிடம் அவனுக்கு இருப்பது ஆண்குறி என்றும், மகளிடம் அவளுக்கு இருப்பது பெண்குறி என்றும் சொல்லியிருக்கிறீர்களா, அல்லது ‘சிச்சி’, ‘சூச்சூ’, சிறுநீர் கழிக்கும் இடம் போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறீர்களா?

கண்கள், முழங்கால்கள், கன்னங்கள், முடி அல்லது மூக்கு என பிற உறுப்புகளை பெயர் சொல்லி குறிப்பிடுவது போலவே அனைத்து உடல் பாகங்களுக்கும் உரிய பெயர்களைச் சொல்லிக் கொடுப்பது பாலியல் உறுப்புகளுடன் தொடர்பு படுத்தப்படும் ரகசிய உணர்வையும் அவமான உணர்வையும் நீக்க உதவுகிறது.

இந்த அவமான உணர்வு நீங்கிய பின்னரே ‘தனக்கு என்ன நடந்தது, எந்தப் பகுதி தீண்டப்பட்டது, எந்தச் சூழலில் தீண்டப்பட்டது’ என்பதை உங்கள் பிள்ளையால் உங்களுக்குச் சொல்ல முடியும்.

தன்னை நம்ப மாட்டார்கள் என்ற பயம்

யாரும் தன்னை நம்ப மாட்டார்கள் என்ற பயத்திலும் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி பேசுவதில்லை. அநேகமாக அவர்களுடைய இந்த அச்சம் சரியாகவே இருக்கிறது. பெரியவர்கள், பெரும்பாலும் குழந்தைகள் சொல்வதை விட பெரியவர்கள் சொல்வதையே நம்புவார்கள். இதை, குழந்தைகளுக்கு இருக்கும் வலுவான உள்ளுணர்வு முன்கூட்டியே உணர்த்திவிடும் போலும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் நம்புவதில்லை? தன்னுடைய பிள்ளைக்கு நடக்கக் கூடாத கொடுமை நடந்து விட்டது என்பதை மனம் புறந்தள்ள நினைக்கிறது. ‘தனக்கு நம்பிக்கையான ஒருவர், தன்னுடைய குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்டார், காயப்படுத்தியுள்ளார்’ என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. ஜீரணிக்க முடியாத இந்த உண்மைகளை பொய்களாகவே கருதி ஒதுக்கித் தள்ளுவது எளிது.

என்றாலும், என்னவென்றே தெரியாத பாலியல் விஷயங்களைப் பற்றி ஒரு குழந்தை பேசுவதை பொய் சொல்வதாக பெற்றோர் ஏன் நினைக்கிறார்கள் என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது.

சிறுநீர் தொற்று, உட்கார்வதில் சிரமம், உள்ளாடைகளில் இரத்தம் என குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்து பெற்றோர்களே அதைத் தங்கள் கண்ணால் பார்க்கும் வரை அந்தக் குழந்தை சொல்வதை நம்பாமல் புறக்கணிக்க வேண்டாம். பிரச்சனை இந்த விபரீத நிலையை அடையும் வரை அதை விட்டு விடாதீர்கள். உங்கள் பிள்ளை உங்களிடம் ஏதாவது சொன்னால், அது உண்மை என்று கருத்தில் கொண்டு அந்த விஷயத்தை தீர விசாரிப்பது முக்கியம்.

நடந்தது தங்களுடைய தவறு என்று குழந்தைகள் நினைத்து விடுகிறார்கள்

பாலியல் சமாச்சாரங்களுடன் குற்ற உணர்வு என்பது காலம்காலமாக தொடர்புப் படுத்தப்பட்டு வருகிறது. இது குழந்தைகளுக்கும் பயிற்றுவிக்கப் படுகிறது. இப்படி வளரும் குழந்தைகள், தங்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு தாங்களே பொறுப்பு என்று எண்ணிக் குறுகிப்போய் விடுகின்றனர்.

என்ன நடந்தாலும், “முதலில் நீ என்ன தப்பு செய்தாய் என்று சொல்” என்று பெற்றோர்கள் கேட்பது சகஜமாகவே இருக்கும் சூழலில் குழந்தைகள், ‘எது நடந்தாலும் அது தன்னுடைய தவறு தான்’ என்றே நம்பத் தொடங்குகிறார்கள்.

எனவே, “நீ என்ன செய்தாயோ” என்று கேட்காமல், உங்கள் குழந்தைகளுக்கு எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளியுங்கள். அதிலும் ‘பெண்ணாகப் பிறந்ததே பாரம்’ என்று நம்ப வைக்கப்படும் பெண் குழந்தைகளுக்கு இந்த நம்பிக்கையை நீங்கள் கொடுப்பது மிக அவசியமாகும்.

இந்த நம்பிக்கை அமைந்து விடாமல் போவதால் தான் நிறைய பெண் குழந்தைகள் தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை சொல்லாமலேயே இருந்து விடுகின்றார்கள் என்பது சோகமான உண்மை.

அத்துமீறியவர்களின் மிரட்டலில் அதிர்ந்து போகும் பிஞ்சுகள்

பெரும்பாலான சம்பவங்களில், குழந்தையிடம் அத்துமீறலில் ஈடுபடும் வஞ்சகர், அந்தக் குழந்தையை மிரட்டி, பயமுறுத்தி, தன்னுடைய இச்சைக்கு இணங்கப் பணிக்கிறார்கள். நடப்பதை சொன்னால் ‘தன்னையோ, தன்னுடையோ பெற்றோரையோ, குடும்பத்தாரையோ, அன்புக்குரியவரையோ ஏதாவது செய்து விடுவார்’ என்கிற பயத்திலேயே நிறைய குழந்தைகள் அதைப் பற்றி யாருக்கும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள்.

அதிலும், குழந்தையுடன் பழகி, அதனுடைய விருப்பு வெறுப்புகளை நன்கு அறிந்து கொண்ட ஒரு வஞ்சகரால் அந்தக் குழந்தையை பயமுறுத்தி தன்னுடைய எண்ணம்போல் நடக்க வைக்க முடியும். சில சமயம், ‘இது தான் உனக்கு சரியானது, இதில் உனக்கும் உடன்பாடு இருக்கிறது’ என்கிற அபாயகரமான மாயையையும் குழந்தையிடம் அவர்களால் உருவாக்க முடியும்.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

வீட்டில், உங்கள் குழந்தை உங்களிடம் வெளிப்படையாக மனம்திறந்து பேசும் சூழலை உருவாக்குங்கள். உங்கள் மேல் குழந்தைக்கும், குழந்தை மேல் உங்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்படியாக உங்கள் உறவு இருக்கட்டும்.

ஒரு வேளை உங்கள் குழந்தை தனக்கு நேர்ந்த அத்துமீறலை உங்களிடம் சொல்லவரும்போது, அதை அமைதியாக கவனத்துடன் காது கொடுத்து கேளுங்கள். ‘என்ன இது, ஏன் இப்படி’ என்று கோபமோ, பதற்றமோ ஏற்பட்டால் அதை குழந்தையிடம் வெளிப்படுத்தாதீர்கள்.

அந்தரங்க உறுப்பு முதற்கொண்டு அனைத்து பாகங்களுக்கும் சரியான பெயர் என்ன என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் அவர்கள் வளர வழி அமைத்துக் கொடுங்கள். குழந்தைகளை கண்ணியத்துடன், மதிப்புடன், பாராட்டி வளருங்கள்.

மேலே கூறப்பட்ட அசம்பாவிதம் எதுவும் உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ நேர்ந்துவிடாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனாலும், ‘முன்னெச்சரிக்கையுடன் இருந்து வரும் ஆபத்துகளை தவிர்ப்பது எல்லா காலங்களிலும் சிறந்தது’ என்ற நிலைப்பாட்டுடனே செயல்படுவோமாக.

பட ஆதாரம்: YouTube

About the Author

Divorceddoodler

A freelance journalist and teacher, Kalpana is a feminist, an animal rights activist, passionate about the environment and fitness through yoga. She believes in a holistic and sustainable lifestyle and she also happens to be read more...

1 Posts | 923 Views
All Categories