இந்திய அரசியல் சட்டம் குழந்தை கஸ்டடி குறித்து சொல்வது என்ன?

குழந்தைகள் இருக்கும் தம்பதியர் விவாகரத்தினை நாட வேண்டிய சூழலில் குழந்தை கஸ்டடி குறித்து அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக குழந்தைகள் இருக்கும் தம்பதியர் விவாகரத்தினை நாட வேண்டிய சூழலில் குழந்தை கஸ்டடி குறித்து அறிந்து கொள்ளுதல் மிக அவசியமாகிறது.

இந்தியாவில் நிகழும் பெரும்பான்மையான விவாகரத்து வழக்குகளில், இருதரப்பினரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று ‘சைல்ட் கஸ்டடி’ (child custody) எனப்படும் குழந்தை பராமரிப்பு.

Original in English | மொழிபெயர்ப்பு: Priya Jay

பெரும்பான்மையான வழக்குகளில், பிரிந்து செல்லும் தம்பதியர் நீதிமன்றம் செல்லாமலேயே, விவாகரத்திற்கு பின் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது என்று அவர்களுக்குள்ளேயே பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்கின்றனர்.
மற்றவர்கள் நம் நாட்டில் உள்ள குடும்ப நீதிமன்றங்கள் மூலம் இது குறித்த சட்டபூர்வமான தீர்வினை பெற அணுகும் முன், குழந்தை கஸ்டடி குறித்த அடிப்படை புரிதலை அடைவது நல்லது.

நம் நாட்டின் சட்டப்படி 18 வயது நிரம்பாத குழந்தைக்கு ‘லீகல் கார்டியன்’ என்ற வயதில் மூத்த சட்டப்பூர்வமான பாதுகாவலர் ஒருவர் இருப்பது அவசியம் ஆகிறது. சட்டபூர்வமாக யாருக்கு இந்த உரிமை வழங்கப் படுகிறதோ அவருக்கே அந்த குழந்தையை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு வழங்கப் படுகிறது.

ஒரு சில சூழ்நிலைகளில், பெற்றோர் தங்கள் குழந்தையை பராமரிக்கும் உரிமை மற்றும் பொறுப்பினை அவர்களுக்குள் பகிர்ந்து கொள்வதும் (shared custody) நடக்கிறது. இப்படிப்பட்ட வழக்குகளிலும், அறுதியிட்ட உரிமை (physical custody) என்பது பெற்றோர்களில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப் படுகிறது.
பெற்றோர்களின் விருப்பப்படி அல்லாமல், குழந்தையின் விருப்பம், கருத்து மற்றும் நலம் ஆகியவற்றை மனதில் கொண்டு அதன்படியே நீதிமன்றங்கள் முடிவு எடுப்பதாக அறியப் படுகிறது.

குழந்தை கஸ்டடி சட்டம் குறித்த முக்கிய அம்சங்கள்

  • குழந்தையின் அடிப்படை மற்றும் தினசரி தேவைகளை ஏற்றுக்கொள்ளும் உரிமை மற்றும் பொறுப்பு பெற்றவர்களுள் ஒருவருக்கு சட்டபூர்வமாக வழங்கப் படும் – இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதே ‘கஸ்டடி’ (Custody) என்பதாகும். இருந்தாலும், கஸ்டடி வழங்கப் படாத பெற்றவருக்கு குழந்தையை சந்தித்து கொள்ளும் உரிமை வழங்கப்படலாம்.
  • குழந்தை கஸ்டடி சட்டத்தின் ஒரு சில அம்சங்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட தம்பதியர் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்து மாறுபடும்.
  • தொன்மங்கள், பழக்கவழக்கங்களை மட்டுமே கணக்கில் கொண்டு ‘குழந்தை கஸ்டடிக்கான உரிமை இவருக்கு தான்’ என்று கூற முடியாது. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், நீதிமன்றம் சட்டபூர்வமாக வழங்கும் தீர்ப்பே குழந்தை கஸ்டடியை பொறுத்தவரை இறுதியானது.
  • அந்தந்த வழக்கினை பொறுத்தே குழந்தை கஸ்டடி பெற்றவர்களுள் யாரேனும் ஒருவருக்கோ அல்லது ‘ஜாயிண்ட்-கஸ்டடி’ என்று குழந்தை பராமரிப்பு பொறுப்பினை பகிர்ந்து கொள்ளும் வகையிலோ நீதிமன்றத்தால் வழங்கப்படும்.
  • பொதுவாக, இந்தியாவில் இளம் குழந்தைகளுக்கான கஸ்டடி தாயிடமே வழங்கப்படுகிறது. இது பிள்ளைகளுக்கு அந்த இளம்பருவத்தில் தாய்ப்பாசமின்றி தவித்தல் கூடாது என்ற அடிப்படையில் செயல்படுத்தப் படுகிறது. என்றாலும் இது அந்தந்த வழக்கினை பொறுத்து மாறுபடலாம்.
  • ஒன்பது வயது நிறைவான குழந்தைகளுக்கு, பெற்றோர்களுள் யாரிடம் வளர்வது என்பது குறித்த விருப்பத்தை வெளியிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது; அந்த விருப்பம் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

குழந்தை கஸ்டடி குறித்து அடிப்படையாக தெரிந்து கொள்ளவேண்டியவை

ஃபிசிக்கல் கஸ்டடி எனப்படுவது குழந்தையின் அடிப்படை / அன்றாட தேவைகளான உணவு, இருப்பிடம், கல்வி ஆகியவற்றிற்கு பெற்றவர்களுள் ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்வது என்பதாகும்.

இந்த கஸ்டடி சார்ந்த சட்டபூர்வமான முடிவுகள் GAWA (Guardians and Wards Act 1890) சட்டத்தின் படியே எடுக்கப்படுகின்றன. இது எல்லா மதத்தினருக்கும் பொதுவான சட்டமாகும்.

இது தவிர்த்து இந்துக்களுக்கு HMGA (Hindu Minority and Guardianship Act 1956) சட்டப்படியும், கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவகாரத்துச் சட்டத்தின் (Indian Divorce Act, 1869) படியும், இஸ்லாமியர்களுக்கு அவர்களுக்கான தனிப்பட்ட சட்டவிதிகளின் படியும் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு, அதாவது குழந்தை கஸ்டடிக்கான உரிமை/பொறுப்பு வழங்கப்படுகிறது.

இதை மேலும் புரிந்துகொள்ள இந்த வீடியோ உங்களுக்கு உதவலாம் ( வீடியோ ஆங்கிலத்தில் உள்ளது)

இது குறித்து மேலும் விவரமாக அறிந்து கொள்ள நீங்கள் இந்த தளத்தினை அணுகலாம்:
http://www.legalserviceindia.com/article/l34-Custody-Laws.html

மேலும், இங்கே பகிரப்பட்டுள்ள தகவல்கள், உங்களுக்கு பொதுவான ஒரு புரிதலை ஏற்படுத்த வெளியிடப்பட்டவை என்பதை மனதில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விவாகரத்து, மற்றும் குழந்தை கஸ்டடி பற்றிய சரியான, முழுமையான தகவல்களுக்கு சட்ட வல்லுனரை கலந்தாலோசிக்கும்படி வலியுறுத்துகிறோம்.

பட ஆதாரம்: Pixabay

About the Author

Women's Web

Women's Web is a vibrant community for Indian women, an authentic space for us to be ourselves and talk about all things that matter to us. Follow us via the read more...

1 Posts | 2,682 Views
All Categories